E   |   සි   |  

2023-03-28

செய்தி வகைகள் : செய்திகள் 

மதிப்பாய்வின் மூலம் சிறந்த கொள்கை உருவாக்கம்: இலங்கை மற்றும் ஆசிய பசிபிக் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான அமர்வு, மற்றும் உரையாடல் பரிமாற்றம்

மார்ச் 30, 2023 அன்று, இலங்கைப் பாராளுமன்றம் ஆசிய பசுபிக் பிராந்தியம் முழுவதிலும் உள்ள சுமார் 20 நாடுகளைச் சேர்ந்த ஐம்பது (50) பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஆய்வு ஊழியர்கள் அடங்கிய  குழுவொன்று விஜயம் செய்யவுள்ளனர். இந்த விஜயத்தின் நோக்கம், மதிப்பாய்வின் மூலம் ஆதார அடிப்படையிலான கொள்கை உருவாக்கத்தின் முக்கியத்துவம் குறித்த பரிமாற்ற அமர்வு மற்றும் உரையாடலை எளிதாக்குவதாகும். இந்த நிகழ்வு, 2023 மார்ச் 27 முதல் மார்ச் 30, 2023 வரை இலங்கையின் கொழும்பில் நடைபெறும். 'மதிப்பாய்வு  மூலம் சிறந்தகொள்கை உருவாக்கம்' என்ற தலைப்பில் 4 நாள் பயிற்சி செயலமர்வு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள்  மற்றும் பாராளுமன்ற ஆய்வு  உத்தியோகத்தர்களுக்காக  வடிவமைக்கப்பட்ட முதல்  மதிப்பாய்வு குறித்த நேரடிப்  பயிற்சி நெறியாகும்.

பரிமாற்ற அமர்வின் நோக்கம், மதிப்பாய்வுகளை நிறுவனமயமாக்குதல் மற்றும் வலுவான தேசிய மதிப்பாய்வு திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இலங்கை நாடாளுமன்றத்தின் சாதனைகளை முன்னிலைப்படுத்துவதாகும். தெற்காசியாவில் தேசிய மதிப்பாய்வுக் கொள்கையை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்த முதலாவது நாடு உட்பட, இலங்கை இந்த விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது. இது தவிர, பாராளுமன்றம் அதன் செயல்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக மதிப்பாய்வை  வெற்றிகரமாக நிறுவியுள்ளது, இது பாராளுமன்றத் தெரிவுக்குழு (PSC) நியமனம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது, இது எந்தவொரு பாராளுமன்றத்திற்கும் முதல் முறையாகும். தேசிய மதிப்பீட்டு சட்ட வரைபை பாராளுமன்றத் தெரிவுக்குழு தயாரித்துள்ளது, இது தற்போது ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இது சட்டமாக நிறைவேற்றப்பட்டதும், இந்தச் சட்டமூலம் இலங்கையில் உள்ள பொது நிறுவனங்களுக்கு நிலையான பெறுபேறுகளை திறம்பட மற்றும் வினைத்திறனுடன் வழங்குவதற்கு உதவும், இது நாட்டின் பொருளாதார வலுவூட்டலுக்கு பங்களிப்பதுடன்  எவரையும் பின்தங்க அனுமதிக்காது.

சர்வதேச பங்கேற்பாளர்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்வு மார்ச் 30 ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில், இலங்கை பிரதமர் கௌரவ. தினேஷ் குணவர்தன, இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ. மகிந்த யாப்பா அபேவர்தன, அவைத்தலைவர் கௌரவ. சுசில் பிரேமஜயந்த, எதிர்க்கட்சித் தலைவர்,கௌரவ. சஜித் பிரேமதாச, GPFE இன் தலைவர் கௌரவ.கபீர் ஹாஷிம், இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திரு. தம்மிக்க தசநாயக்க மற்றும் ஆசிய பசிபிக் மதிப்பீட்டு சங்கம் (APEA) மற்றும் இலங்கை மதிப்பீட்டு சங்கம்(SLEvA) ஆகியவற்றின்  தலைவர் கலாநிதி அசேல கலுகம்பிட்டிய ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இணைந்து கொள்கின்றனர்.

மேலும், இந்த அமர்வில்  இலங்கை பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் திரு. டிக்கிரி ஜயதிலக்க, களனிப் பல்கலைக்கழக துணைவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி டி சில்வா, சார்லண்ட் பல்கலைக்கழகம்/ஜெர்மனி மதிப்பீட்டு மையத்தின் நிறுவுனர் மற்றும் இயக்குனர், பேராசிரியர். ரெய்ன்ஹார்ட் ஸ்டாக்மேன், மற்றும் UNFPA மதிப்பீட்டு அலுவலகத்தின் இயக்குநர் திரு. மார்கோ செகோனி ஆகியோரின் உரைகளும்  இடம்பெற உள்ளது.

"மதிப்பாய்வு மூலம் சிறந்த கொள்கை உருவாக்குதல்" பயிற்சித் நெறியானது சர்வதேச  அபிவிருத்தி  மதிப்பாய்வு  பயிற்சித் திட்டத்திற்கும் (IPDET),  மற்றும் ஆசிய பசிபிக் மதிப்பாய்வுச் சங்கம் (APEA), உலகளாவிய பாராளுமன்ற மதிப்பாய்வுகளுக்கான மன்றம் (GPFE)  இடையிலான கூட்டு முயற்சியாகும். பசிபிக் பாராளுமன்ற உறுப்பினர்களின் மதிப்பாய்விற்கான மன்றம் (APPFE). இந்த பயிற்சியானது உலகளாவிய மதிப்பீட்டு முன்முயற்சியால் (GEI) ஆதரிக்கப்படுகிறது, மேலும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய(UNFPA) மதிப்பாய்வு அலுவலகம், ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதிய (UNFPA) பசிபிக் மற்றும் பிலிப்பைன்ஸ் அலுவலகங்கள், ஆசிய சனத்தொகை அபிவிருத்தி சங்கம் (APDA), ஐ. நா. பெண்கள், மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெறுகிறது.



தொடர்புடைய செய்திகள்

2026-09-11

புதிதாக நியமிக்கப்பட்ட சீனத் தூதுவர் பாராளுமன்ற சபாநாயகரைச் சந்தித்தார்

சீன மக்கள் குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவர் மாண்புமிகு வெய் ஹுவாசியாங் அவர்கள், கௌரவ சபாநாயகர்  வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (10) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம்  குஷானி ரோஹணதீர அவர்களும் கலந்துகொண்டார்.கௌரவ சபாநாயகர் அவர்கள் தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்களை அன்புடன் வவேற்றதுடன், இலங்கைக்கான புதிய தூதுவராக நியமிக்கப்பட்டமைக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நெருங்கிய தொடர்புகளையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.பல்வேறு சவாலான காலகட்டங்களில், குறிப்பாக அண்மைய பொருளாதார நெருக்கடியின்போது, உண்மையான நண்பனாக இலங்கைக்கு சீனா தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவுக்கும் சபாநாயகர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அண்மையில் ஏற்பட்ட தித்வா சூறாவளியைத் தொடர்ந்து சீனா வழங்கிய உதவிகளையும், பாடசாலைச் சீருடைத் துணி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் இலங்கை மக்களுக்கு தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவையும் அவர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கௌரவ சபாநாயகர் அவர்கள், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், குறிப்பாக பாராளுமன்றப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் வகையில், இலங்கை–சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஊடாக மேலும் பல முயற்சிகளும் எதிர்கால நிகழ்ச்சித்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் சபாநாயகர் தூதுவருக்கு விளக்கமளித்தார். பட்டுப்பாதை மற்றும் கடல்வழிப் பாதைத் திட்டங்களின் கீழ் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பல்வேறு துறைகளுக்கு விரிவடைந்துள்ளதாகவும், இதன் மூலம் இரு நாடுகளினதும் மக்களுக்கு நடைமுறைப் பயன்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.கௌரவ சபாநாயகர் வழங்கிய அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்கள், இலங்கை மக்களின் நட்புணர்வும் புன்னகையும் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். இலங்கையை “புன்னகைகளின் அழகிய தீவு” எனக் குறிப்பிட்ட அவர், நாட்டிற்கு வந்தது முதல் தமக்கு வழங்கப்பட்ட அன்பான வரவேற்பையும் விருந்தோம்பலையும் பாராட்டினார்.சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுத் தொடர்புகளை எடுத்துரைத்த தூதுவர், இரு நாடுகளுக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் கடல்சார் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்களைச் சுட்டிக்காட்டினார். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அண்மைய உயர்மட்ட சந்திப்புகள் தொடர்பில் குறிப்பிடுகையில், 2025ஆம் ஆண்டு சீனாவிற்கு மேற்கொண்ட தனித்தனி விஜயங்களின்போது, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அவர்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களையும் சந்தித்ததாக தூதுவர் வெய் தெரிவித்தார். இந்த உயர்மட்ட சந்திப்புகள் இருதரப்பு உறவுகளின் மேலும் வளர்ச்சிக்கான புதிய மூலோபாய திசையை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அண்டை நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் இலங்கைக்கு சீனா முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்த தூதுவர், இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்குமான முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கும் வகையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த சீனா தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.2027ஆம் ஆண்டு இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவையும், இரப்பர்–அரிசி உடன்படிக்கையின் 75ஆவது ஆண்டு நிறைவையும் கொண்டாடவுள்ள நிலையில், அந்த ஆண்டின் முக்கியத்துவத்தையும் இருதரப்பினரும் எடுத்துரைத்தனர்.இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துதல், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இலங்கையில் உள்ள சீன நிறுவனங்கள் மற்றும் பிரஜைகளின் சட்டபூர்வ உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தொடர்ந்து பணியாற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பையும் தூதுவர் வெய் ஹுவாசியாங் அவர்கள் மேலும் தெரிவித்தார்.


2026-09-11

செப்டெம்பர் இரண்டாவது பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன

அரசியலமைப்பின் இருபத்திரெண்டாம் (திருத்தச்) சட்டமூலம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் விவாதிக்கப்படும்செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்திற்கான பாராளுமன்ற அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (செப். 10) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இதுபற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டது.பாராளுமன்றம் கூடும் அனைத்துத் தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையில் நிலையியற் கட்டளை 22(1) இலிருந்து (6) வரையான பாராளுமன்ற அலுவல்களுக்கும், மு.ப. 10.00 மணி முதல்  மு.ப. 11.00 மணி வரை வாய்மூல விடைகளுக்கான வினாக்களுக்காகவும், மு.ப. 11.00 மணி முதல் மு.ப. 11.30 மணி வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன்  கீழான கேள்விகளுக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 2.30 மணி வரை பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் 2497/37 இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதி பி.ப 2.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை ஏற்றுமதி கமத்தொழில் ஊக்குவிப்பு (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 5.00 மணிக்கு தனியார் உறுப்பினர் சட்டமூலமான ட்ரெட்சோ அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டைத் தொடர்ந்து சட்டவாக்க குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்.அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 23ஆம் திகதி புதன்கிழமை, மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இலங்கை ஊடக உயர்தொழிலாளர்களின் பட்டயம் பெற்ற நிறுவகச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 24ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 7.00 மணிவரை அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதித்துறைத் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.  அரசியலமைப்பின் 121ஆவது உறுப்புரையின் பிரகாரம், இந்தச் சட்டமூலங்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் வழங்கப்பட்டதன் பின்னர், அதனை கௌரவ சபாநாயகர் அவர்கள் சபையில் அறிவிப்பார் என்பதற்கு உட்பட்டதாக, குறித்த இரண்டு தினங்களிலும் விவாதத்தை நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.செப்டெம்பர் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 7.00 மணிவரை அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நிதித்துறைத் (திருத்தச்) சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


2026-09-09

பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (செப். 09) நிறைவேற்றப்பட்டது.குறித்த சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் முற்பகல் 11.00 மணி முதல் பி.ப 5.00 மணிவரை பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், இதனைத் தொடர்ந்து வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.இச்சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக 2026ஆம் ஆண்டு ஓகஸ்ட் 04ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவியை அறிமுகப்படுத்திய 2009ஆம் ஆண்டின் 35ஆம் ஆண்டு இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமைதிகாரி சட்டத்தை நீக்குவதற்காக இந்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.2009ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குறித்த சட்டத்தின் மூலம், அக்காலகட்டத்தின் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்புப் படைகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி பதவி உருவாக்கப்பட்டது.இதற்கு அமைய, குறித்த சட்டமூலத்தின் மூலம் 2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி சட்டம் நீக்கப்படுவதுடன், குறித்த உதவியும் இரத்துச் செய்யப்படவுள்ளது.மேலும், இந்த சட்டம் நடைமுறைக்கு வருவதுடன், பாதுகாப்பு பணியாட்தொகுதியினரின் தலைமையதிகாரி அலுவலகத்திற்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் பாதுகாப்பு விடயம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைச்சரின் அமைச்சுக்கு மாற்றப்படும்.


2026-09-09

50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இயந்திரங்களை அகற்றி நவீன தொழில்நுட்பத்துடன் அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தை நவீனமயப்படுத்த திட்டம்

50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய மற்றும் காலாவதியான இயந்திர உபகரணங்களைப் படிப்படியாக அகற்றி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வினைத்திறன்மிக்க உபகரணங்களைக் கொள்வனவு செய்வதுடன், சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு உயர் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அச்சிடும் (Smart Security Printing) திறன்களைக் கொண்ட நவீன அச்சிடும் பிரிவொன்றை நிறுவுவதற்காக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.வாய்மூல விடைக்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜி.டி. சூரியபண்டார அவர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தில் 445 நிரந்தரப் பணியாளர்களும், ஒப்பந்த அடிப்படையில் மேலும் 21 பணியாளர்களும் பணியாற்றுவதாக பிரதமர் தெரிவித்தார்.பாதுக்கை, வட்டரெக்க பிரதேசத்தில் இயங்கி வரும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் அச்சகத்தின் மூலம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப பாடசாலைப் பாடப்புத்தகங்கள் மற்றும் தொகுதிகள் அச்சிடப்படுவதுடன், பாதுகாப்பு அச்சிடும் பணிகளான மாகாணப் பரீட்சை வினாத்தாள்கள் அச்சிடுதல், லொத்தர் சீட்டுகள் அச்சிடுதல் மற்றும் இரகசிய ஆவணங்களை அச்சிடுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.அத்துடன், SPC பயிற்சிப் புத்தகங்கள் அச்சிடுதல், பல்வேறு அரச நிறுவனங்களுக்கான அச்சிடும் பணிகள், ஏனைய வர்த்தக அச்சிடும் பணிகள், தனியார் அச்சிடும் கட்டளைகள் மற்றும் தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், நாட்டின் பல மாவட்டங்களில் SPC விற்பனை நிலையங்களின் வலையமைப்பொன்றும் பராமரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.அமைச்சின் கீழ் அச்சகம் ஒன்று காணப்படுவதன் மூலம் அரசாங்கத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.அதற்கமைய, சந்தை விலைகளைக் கட்டுப்படுத்தும் காரணியாக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் காணப்படுதல், சந்தையின் தரம் மற்றும் தரநிலைகளைக் கட்டுப்படுத்துதல், நம்பகமான பாதுகாப்பு அச்சிடும் (Security Printing) பிரிவொன்றின் தேவையைப் பூர்த்தி செய்தல் மற்றும் அரச துறையின் ஒரேயொரு அரச தொழில்முயற்சி நிறுவனமாக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் காணப்படுதல் ஆகியவை அவற்றில் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.பாரிய அளவிலான அச்சிடும் தேவையைப் பூர்த்தி செய்தல், அரசுக்குச் சொந்தமான அச்சிடும் வசதியொன்றின் தேவையை நிறைவேற்றுதல் மற்றும் அச்சிடும் பணிகளுக்காக ஏற்படும் செலவுகளைக் குறைத்தல் ஆகியவையும் இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளில் அடங்குவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், நீண்ட காலமாக அரச நிறுவனமாக இயங்கி வருவதன் மூலம் வேலைவாய்ப்புகளை வழங்குதல், பயிற்சியளிக்கப்பட்ட மனித வளத்தைக் கொண்டிருத்தல் மற்றும் அரசாங்கத்தின் பங்காக அரசுக்கு நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துதல் ஆகியவையும் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் இயங்குவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks