பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2023-03-28
அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்காக காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் காணி உரிமைப் பத்திரங்களை வழங்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவை மட்டத்திலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் கௌரவ ஹரின் பெர்னாந்து தலைமையில் மார்ச் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுற்றுலா மற்றும் காணி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளுக்கான உரிமைப் பத்திரங்கள் பல வருடங்களாக வழங்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருவதாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் நோக்கில் அமைச்சர் இந்தக் குழுவை நியமித்தார்.
இதுவரை வழங்காதுள்ள காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்கி முடிப்பதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்திருப்பதாகவும், பூர்த்திசெய்யப்பட்டுள்ள காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்குவது குறித்து முடிவெடுக்க இவ்வாரம் இக்குழு கூடவிருப்பதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
வடபகுதியில் உள்ள காணிப் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு வடபகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துக் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
அதேநேரம், சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டிலுள்ள புதிய சுற்றுலாத் தளங்கள், கட்டணங்கள், போக்குவரத்து வசதிகள், ஹோட்டல் வசதிகள் உள்ளிட்ட முழுமையான தகவல்களை வழங்கக் கூடிய கையடக்கத்தொலைபேசி செயலியொன்றை விரைவில் அறிமுகப்படுத்தவிருப்பதாக அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
சுற்றுலா வலயங்களில் வெளிநாட்டவர்களால் நடத்தப்படும் வர்த்தக செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள 16 சுற்றுலா வலயங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவிருப்பதாகவும், இதன் ஊடாக குறிப்பிட்ட விடயம் குறித்தும் கவனம் செலுத்த முடியும் என்றார்.
இக்கூட்டத்தில் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் கௌரவ கீதா குமாரசிங்க, சுற்றுலா மற்றும் காணி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் கீழ் உள்ள அரசாங்க நிறுவனங்களின் பிரதானிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
2026-11-11
இலங்கை மத்திய வங்கியின் வகிபாகம், பணவீக்க இலக்கீடு, தனியார் துறைக்கான கடன் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் மற்றும் நிதிக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழு அண்மையில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.இந்தக் குழுக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, அஜித் அகலகட, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, சுனில் ராஜபக்ஷ மற்றும் திலின சமரகோன் ஆகியோர் கலந்துகொண்டதுடன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட மத்திய வங்கியின் அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 80(2)(அ) பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய, மத்திய வங்கியின் பணிகள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக மத்திய வங்கியின் ஆளுநர், ஆளும் சபை மற்றும் நாணயக் கொள்கைச் சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதி ஆளுநர்கள் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பாராளுமன்றம் அல்லது அதன் குழுவொன்றின் முன்னிலையில் ஆஜராக வேண்டும். அத்துடன், 26(5) பிரிவின் பிரகாரம், தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட பணவீக்க இலக்குகளை அடைவதற்கு மத்திய வங்கி தவறினால், அது தொடர்பான அறிக்கையொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இதன்போது, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டியை அடிப்படையாகக் கொண்ட பிரதான பணவீக்க இலக்கான 5 சதவீதத்தைத் தொடர்ந்து பேணுவதற்கும், எதிர்வரும் மூன்று வருடங்களுக்கும் அந்த இலக்கைப் பேணுவதற்கும் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகள் விளக்கமளித்தனர். பணவீக்கம் இலக்கிடப்பட்ட வரம்பின் கீழ் எல்லையான 3 சதவீதத்திற்கும் குறைவான மட்டத்தில் காணப்பட்ட சந்தர்ப்பங்கள் காரணமாக, ஏழு விசேட அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்தது.2026ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்களின் மொத்தப் பெறுமதி 2.1 ட்ரில்லியன் ரூபாவாகும். இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் காணப்பட்ட 1.9 ட்ரில்லியன் ரூபாவை விட அதிகமான தொகையாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் சுமார் 74 சதவீதமான கடன்கள் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினால் வழங்கப்பட்டுள்ளன.எவ்வாறாயினும், குறுகிய காலக் கடன்களின் விகிதம் 42 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாக அதிகரித்துள்ளமை மற்றும் நீண்டகாலக் கடன்களின் விகிதம் 35 சதவீதத்திலிருந்து 29 சதவீதமாகக் குறைந்துள்ளமை தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. வங்கிகளினால் வழங்கப்படும் கடன்கள் மூலதனத் திரட்டல், புதிய முதலீடுகள் மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்குப் போதுமான அளவில் பயன்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மேலும், அடமானக் கடன்கள் மற்றும் வாகனக் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கடன் வகைகளின் வளர்ச்சி தொடர்பிலும் ஆராயப்பட்டது.இலங்கையின் நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் இதன்போது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நிலையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு நாணயக் கொள்கைக்கு மேலதிகமாக வர்த்தகம், தொழிலாளர் மற்றும் காணி ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, மனித மூலதனத்தை மேம்படுத்துவது, உற்பத்தித்திறனை அதிகரிப்பது மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்வது ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.நிதிக் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மை தொடர்பில் விளக்கமளித்தபோது, வங்கித் துறையின் மூன்றாம் கட்ட செயலிழந்த கடன்களின் விகிதம் 9.7 சதவீதத்திலிருந்து 8.8 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும், வங்கிக் கட்டமைப்பின் மூலதன மற்றும் திரவத்தன்மை மட்டங்கள் ஒழுங்குமுறைத் தேவைகளை விட உயர்ந்த நிலையில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.NDB வங்கி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு மற்றும் இலங்கை கணக்கீடு மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்புச் சபையின் அறிக்கை ஆகியன 2026 ஒக்டோபர் 15ஆம் திகதி சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், குறித்த வங்கி தொடர்பில் இலாபப் பங்கீடு, கிளைகளை விரிவுபடுத்துதல் மற்றும் பணிப்பாளர் சபை கொடுப்பனவுகளைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.சட்டவிரோதமான முறையில் பொதுமக்களிடமிருந்து வைப்புகளைப் பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மத்திய வங்கியின் ஆளுநர், பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உருவங்கள் மற்றும் குரல்களைப் போலியாகப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. இவ்வாறான மோசடிகளைத் தடுப்பதற்காக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு, இலங்கை கணினி அவசர தயார்நிலை அணியின் (CERT), பொலிஸ் மற்றும் Meta நிறுவனத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மத்திய வங்கி அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.இதற்கு மேலதிகமாக, மெய்நிகர் சொத்துக்கள் மற்றும் கிரிப்டோ நாணயங்கள் தொடர்பான ஒழுங்குமுறை நடவடிக்கைகள், கொழும்பு துறைமுக நகரில் செயற்படும் வங்கிகளின் மேற்பார்வை மற்றும் அரச வங்கிகளை ஒன்றிணைத்தல் தொடர்பிலும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.
2026-11-10
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவியும் கௌரவ அமைச்சருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 06) பாராளுமன்றத்தில் கூடியது. இதன்போது சிறுவர் உரிமைகளை மேம்படுத்துதல், பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் மற்றும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொழில்நுட்ப மற்றும் ஆய்வுத் திறன்களை மேம்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இதில், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, நவம்பர் 20ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் நடத்தப்படவுள்ள “விசேட சிறுவர் பாராளுமன்றப் பங்கேற்பு நிகழ்ச்சித்திட்டம்” தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. நாடளாவிய ரீதியில் 1,200க்கும் அதிகமான சிறுவர்களிடமிருந்து கருத்துகளைப் பெற்று தயாரிக்கப்பட்ட சிறுவர் அறிக்கையை (Children’s Statement), 50 சிறுவர்களின் பங்கேற்புடன் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், சிறுவர் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்காக சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியமொன்றை மீண்டும் ஸ்தாபிப்பதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.மேலும், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளைத் துரிதப்படுத்துதல், அதற்குத் தடையாக உள்ள சட்டரீதியான இடையூறுகளை நீக்குதல் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கைப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான 16 நாட்கள் உலகளாவிய செயற்பாட்டுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ள இச்செயற்றிட்டத்தின் கீழ், “This is my right” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வுப் பேரணியொன்றை ஏற்பாடு செய்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பில் பொதுமக்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.இப்பேரணியில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரச நிறுவனங்களின் அதிகாரிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கச் செய்ய எதிர்பார்ப்பதாக வருகை தந்த பிரதிநிதிகள் தெரிவித்தனர். அத்துடன், வன்முறைகளுக்கு முகங்கொடுக்கும் பெண்கள் உதவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய QR குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் சேவை வழிகாட்டியொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய தரப்பினரின் பங்கேற்புடன் கலந்துரையாடலொன்றை நடத்துதல் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.இதேவுளை, மேக்ஸ் பிளாங்க் அறக்கட்டளையின் பிரதிநிதிகளுடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பில் இடம்பெற்ற மீளாய்வுக் கலந்துரையாடலின்போது, பாராளுமன்ற ஆய்வு உதவி மற்றும் அறிவுப் பரிமாற்றம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. சட்டமூலங்களைத் தயாரித்தல், ஒப்பீட்டுச் சட்ட ஆய்வுகள் மேற்கொள்ளுதல் மற்றும் சட்டமூலங்கள் பாலின சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் மீது ஏற்படுத்தும் தாக்கங்களை மதிப்பீடு செய்தல் போன்ற துறைகளில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொழில்நுட்ப மற்றும் ஆய்வு உதவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், சிறுவர் பாதுகாப்பு, பெண்களின் உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கொள்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இக்கலந்துரையாடல்களில் பாராளுமன்றத்தின் கௌரவ பிரதிக் குழுத் தலைவி ஹேமாலி வீரசேகர, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கௌரவ பிரதித் இணைத் தலைவிகளான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி சமிந்திராணி கிரியெல்ல மற்றும் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-11-10
அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு முறையான நிறுவன மற்றும் செயற்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்து, அவற்றின் முன்னேற்றத்தை அளவிடக்கூடிய முக்கிய செயலாற்றுகைக் குறிகாட்டிகளை (KPIs) அடையாளம் கண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வைத்தியர் நிஷாந்த சமரவீர வலியுறுத்தினார்.அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் மூன்றாவது உபகுழுவின் முன்னிலையில் முதற்கட்டமாக தமது நிறுவனத் திட்டங்களைச் சமர்ப்பித்த 41 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த மற்றும் செயற்பாட்டுத் திட்டங்களில் உள்ள முக்கிய செயலாற்றுகைக் குறிகாட்டிகள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு செயலமர்வு அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.அரச நிறுவனங்களின் பணிகள், நிதி ஒழுக்கம் மற்றும் வினைத்திறன் ஆகியவற்றை முறையாகப் பேணுவதற்கு அவற்றின் சட்டபூர்வ அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை அடையாளம் கண்டு செயற்படுவது அவசியம் என்றும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், கடந்தகால கணக்காய்வுப் பிரச்சினைகள் குறித்து மாத்திரம் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, நிறுவனத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் அவற்றின் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகள் எட்டப்பட்டுள்ளனவா என்பதை மதிப்பீடு செய்வது முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்தச் செயலமர்வில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள், கணக்காய்வாளர் சமுதிகா ஜயரத்ன உள்ளிட்ட தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய்வு அதிகாரிகள், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு ஆகியவற்றின் ஆலோசகர்களான பி. ரணசிங்க மற்றும் சி. எஸ். மாயாதுன்னே, முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களம், அரச தொழில்முயற்சிகள் திணைக்களம் மற்றும் தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள், அத்துடன் அரச தொழில்முயற்சிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் நிதிப் பிரதானிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2026-11-10
மாகாணசபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு, பல்வேறு அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொண்டது.இந்த விசேட குழு அதன் தலைவர், கௌரவ அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு முன்மொழிவுகள் பெறப்பட்டன.இதில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) சார்பில் கே. பிரேமச்சந்திரன், ஈரோஸ் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) சார்பில் ராமசாமி ராஜேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) சார்பில் சண்முகநாதன் சஞ்சீவன் ஆகியோர் தமது கட்சிகள் சார்பில் கருத்துக்களையும் முன்மொழிவுகளைக் குழுவில் முன்வைத்தனர்.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய தேர்தல் முறைமை, பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதே இக்கலந்துரையாடலின் நோக்கமாக அமைந்தது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான முனீர் முலாபர், சட்டத்தரணி சுனில் வட்டகல, அருண் ஹேமச்சந்திர ஆகியோருடன், குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மப்பிரிய விஜேசிங்க, சமன்மலி குணசிங்க, லக்ஷ்மன் நிபுணாரச்சி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks


