பார்க்க

E   |   සි   |  

2023-02-08

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இந்நாட்டில் முதலீட்டை மேற்கொள்வதற்கு அவசியமான காணிகளை விடுவிப்பதில் காணப்படும் பிரச்சினைகளை குறித்து பாராளுமன்ற விசேட குழுவில் அவதானம்

இந்நாட்டில் முதலீடுகளை ஆரம்பிக்கும்போது பொருத்தமான முறையில் காணிகளை விரைவில் விடுவித்துக் கொள்வதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (சட்டத்தரணி) மதுர விதானகே தலைமையில் அண்மையில் (பெப். 06) பாராளுமன்றத்தில் கூடியபோது இது தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, கைத்தொழில் அபிவிருத்திச் சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகாரப் பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் குழுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நாட்டில் காணி விடுவிப்பதில் உள்ள சிக்கலான முறைமையினால் அதிக கால அவகாசம் தேவைப்படுவதாகவும் முதலீட்டாளர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். எனவே, முதலீட்டுக்கான வாய்ப்புக்களை எளிதாக்காவிட்டால் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுக்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதைத் தடுக்க முடியாது போய்விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளின் உரிமை மற்றும் அவற்றின் சட்ட விவகாரங்கள் தொடர்பாக பல கட்டளைச் சட்டங்களின் கீழ் பல நிறுவனங்கள் தனித்தனியாக இருப்பது குழுவில் விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, காணிகளின் வகைப்படுத்தல் அதனைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்களின்படி அல்லாமல் முதலீட்டிற்கு ஏற்ற ஒவ்வொரு பகுதிக்கும் தொடர்புடைய படி வகைப்படுத்தல் செய்யப்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது.

அத்துடன், இந்நாட்டில் காணி தொடர்பான சரியான தரவுகளைப் பூர்த்தி செய்யாத பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. எனவே, நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சரியான தரவுகளை ஒரே இடத்தில் கொண்டு வந்து, மிகக் குறுகிய காலத்தில் முதலீடுகளுக்கு ஏற்ற காணிகளை விடுவிப்பது தொடர்பில் கட்டமைப்பொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்று குழு கருத்துத் தெரிவித்தது.

தற்போதுள்ள சட்ட விதிகளுக்குள்ளும் முதலீட்டுக்குத் தேவையான காணிகளை வழங்குவதில் விசேட கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் திறமையாக செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், கைத்தொழில் அபிவிருத்திச் சபை, இலங்கையில் தொழில்முயற்சிகளை இலகுபடுத்தல் சுட்டியை  அதிகரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் குறித்தும் குழுவிற்கு விரிவாக விளக்கமளித்தது.

இதில் இராஜாங்க அமைச்சர் கௌரவ அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் கௌரவ லலித் வர்ண குமார ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 5



தொடர்புடைய செய்திகள்

2026-11-18

கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தின் நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாண வைப்பாளர்களின் பணத்தை மீளச் செலுத்துவதற்கான பொறிமுறையைத் தயாரிப்பது தொடர்பில் கோபா உபகுழுவில் அவதானம்

கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் வைப்பாளர்களின் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட கூட்டுறவுத் துறையில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பில் ஆராய்வதற்கான உபகுழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடியின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தின் முகாமைத்துவத்தின் பலவீனங்கள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், உரிய அனுமதியின்றி சங்கத்தின் நிதி தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டமையால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்த முதலீடுகள் காரணமாக உறுப்பினர்கள் மற்றும் வெளிப்புற வைப்பாளர்களின் வைப்புப் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது.மேலும், கூட்டுறவுத் திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகள், சங்கத்தின் சொத்துக்களைத் தீர்ப்பதில் உள்ள சிக்கல்கள், நீதிமன்றத் தடையுத்தரவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் பணத்தை மீள வழங்குவதற்காக, சங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மதிப்பீடு செய்து அவற்றை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல், சொத்துக்களை அகற்றுவதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவுகளை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தற்போது கையிருப்பில் உள்ள நிதியை வைப்பாளர்களிடையே நியாயமான அடிப்படையில் பகிர்ந்தளித்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்படாத முதலீடுகளை மேற்கொண்டமைக்குப் பொறுப்பான முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களிடமிருந்து அதற்கான நட்டஈட்டுத் தொகையை அறவிடுதல், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் நிறைவு செய்யப்படாத திட்டங்களைப் பூர்த்தி செய்து அவற்றின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் முழு வைப்புத் தொகையையும் மீளச் செலுத்துவதற்கான தெளிவானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான பொறிமுறையொன்றை முன்வைக்க வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அத்துடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மேல் மாகாண மற்றும் கம்பஹா மாவட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்பட்டது.இந்தக் கூட்டத்தில் உபகுழுவின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, டீ. கே. ஜயசுந்தர மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-11-17

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பல முக்கிய நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயம்

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் பல நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டது.இதற்கமைய, குழுவினர் இன்று (நவ. 17) இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவனம் (SINTEC) மற்றும் இலங்கை உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) ஆகிய நிறுவனங்களுக்கு விஜயம் செய்து அவற்றின் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.2025/2026 ஆம் ஆண்டுகளுக்கான குறித்த நிறுவனங்களின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல், 2027 ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டுத் திட்டத்தைப் பரிசீலித்தல் மற்றும் நிறுவன வளாகங்களில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அவதானித்தல் ஆகியன இந்த விஜயத்தின் நோக்கங்களாகும்.குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தனுர திசாநாயக்க, லசித் பாஷண கமகே மற்றும் சதுர கலப்பத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-11-17

ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் மற்றும் சேவைப் பிரமாணக் குறிப்புத் திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற உபகுழுவில் தொடர்ந்தும் கலந்துரையாடல்

ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில், கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவில் மேலும் கலந்துரையாடப்பட்டது.குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இக்கலந்துரையாடலில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.ஆசிரியர் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள அதிகரிப்பு இடைவெளிகள் மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஒரு சேவைக்கு மாத்திரம் தனித்தனியாக சம்பளத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம், ஒட்டுமொத்த அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் ஒப்பிடுகையில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.சேவைப் பிரமாணக் குறிப்புகள் மற்றும் ஆட்சேர்ப்புக்கான வயதெல்லைகளைத் திருத்துதல், அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள், பாடசாலை வகைப்படுத்தல் மற்றும் வெற்றிடங்களை நிரப்புதல், முறையான இடமாற்றக் கொள்கை, ஆசிரியர் மற்றும் அதிபர் உத்தியோகபூர்வ இல்லங்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் உபகுழு விரிவாகக் கலந்துரையாடியது.இவ்விடயம் தொடர்பில் மேலும் கலந்துரையாடிய பின்னர், முன்மொழிவுகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் அத்தம்பாவ, சுகத் வசந்த. டி சில்வா, சுஜீவ திசாநாயக்க மற்றும் சானக மாதுகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-11-16

யானை – மனித மோதலைக் குறைத்தல் மற்றும் யானைகளைப் பாதுகாப்பது தொடர்பில் புதிய தொழில்நுட்ப, நடைமுறைத் தீர்வுகளைக் கண்டறிவது குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்துரையாடல்

சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.இதில், யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துதல், காட்டு யானைகளின் இடம்பெயர்வு முறைகளைக் கண்டறிதல் மற்றும் யானைகளைப் பாதுகாப்பதற்குப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.யானைகளின் வாழ்விடங்கள் இழக்கப்படுதல், பாரம்பரிய யானை வழித்தடங்கள் தடைப்படுதல் மற்றும் குடியிருப்புகள், விவசாய நிலங்களை அண்மித்த பகுதிகளில் உணவு தேடிச் செல்லுதல் ஆகியன யானை – மனித மோதல் அதிகரிப்பதற்கான பிரதான காரணங்களாக இதன்போது கலந்துரையாடப்பட்டன. யானைகளின் இடம்பெயர்வு முறைகளைக் கண்டறிவதற்காக GPS மற்றும் செய்மதிக் கழுத்துப்பட்டித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.யானை – மனித மோதலைக் குறைப்பதற்காக பிரதேச மட்டத்தில் வனவிலங்கு அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்களை உள்ளடக்கிய கூட்டுக் குழுக்களை அமைத்தல், சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துதல் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைத் தொடர்பாடல் வலையமைப்புகளைச் செயற்படுத்துதல் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.அத்துடன், நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த யானைகளுக்குச் சிகிச்சையளிக்கும்போது வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை மருத்துவ அதிகாரிகளின் சேவை, யானைகளுக்கு மயக்க மருந்து செலுத்தும்போது காணப்படும் ஆபத்துகள் மற்றும் களத்தில் சிகிச்சையளிப்பதற்குத் தேவையான நடமாடும் மருத்துவ வசதிகள், நடமாடும் எக்ஸ்-ரே இயந்திரங்கள் போன்ற தொழில்நுட்ப உபகரணங்களின் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், உபுல் கித்சிறி, சட்டத்தரணி எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி, சுதத் பலகல்ல, கிட்ணன் செல்வராஜ் மற்றும் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks