E   |   සි   |  

2023-01-09

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் கருத்துத் தொடர்பில் கோப் குழு கடுமையான அதிருப்தி

  • ஜனாதிபதிக்கு அறிவிக்க முடிவு
  • சபாநாயகரிடம் முறைப்பாடு
  • பராளுமன்றத்தில் விசேட அறிக்கை
  • எதிர்வரும் 17ஆம் திகதி அமைச்சின் செயலாளரை குழு முன்னிலையில் மீண்டும் அழைக்கத் தீர்மானம்

 

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோபா குழு) விசேட கூட்டம் அதன் தலைவர் கௌரவ பேராசிரியர் ரஞ்சித் பண்டார தலைமையில் அண்மையில் (ஜன. 05) நடைபெற்றது. இதில் கீழ்வரும் விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

  1. கோப் குழுவின் செயற்பாடுகளை விஸ்தரிப்பது மற்றும் குழுவின் வேலைகளில் அதன் உறுப்பினர்களை தீவிரமாக ஈடுபடுத்துவது என்ற எதிர்பார்ப்புடன் நான்கு உபகுழுக்களுக்கு 12 உறுப்பினர்கள் நியமனம்.
  2. 2023ஆம் ஆண்டில் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட வேண்டிய மற்றும் தற்பொழுது அழைக்கப்பட்டு பின்தொடர்புகளை மேற்கொள்ள வேண்டிய நிறுவனங்கள் யாவை என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டது. இதற்காக கணக்காய்வாளர் நாயகத்தின் வழிகாட்டலின் கீழ் செயற்பட கோப் குழு இணக்கம் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு களப்பயணம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
  3. கௌரவ பிரதமர் தலைமையில் 2022 டிசம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற “தேசிய உற்பத்தித்திறன் விருது” உத்தியோகபூர்வ நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயகார அவர்களினால் கணக்காய்வாளர் நாயகத்தின் செயற்பாடுகள் மற்றும் கோப் குழுவின் அதிகாரம் சவாலுக்கு உட்படுத்தப்படும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்துப் பற்றி கலந்துரையாடல்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனுஷ நாணயகார அவர்களினால் கணக்காய்வாளர் நாயகத்தின் மற்றும் கோப் குழுவின் அதிகாரங்களை சவாலுக்கு உட்படுத்தப்படும் வகையில் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் கோப் குழுவுக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தியிருந்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரவை அமைச்சர் என்ற ரீதியில் அவர் மேற்குறிப்பிட்ட கருத்தைத் தெரிவித்திருந்த போதிலும், அவர் குறிப்பிட்டதைப் போன்று பாராளுமன்றத்தின் நிதி முகாமைத்துவத்தை பலப்படுத்த பாராளுமன்ற முறைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு தொடர்பில் நிலையியற் கட்டளைக்கு அமைய தமக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மீறப்படவோ அல்லது அவ்வாறு செயற்பட எவ்விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கவில்லையென்றும் கணக்காய்வாளர் நாயகத்தினால் குழுவுக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், கணக்காய்வாளர் நாயகத்துக்கு அரசியலமைப்பு மற்றும் எழுதப்பட்ட சட்டங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் கடமைகளை நடைமுறைப்படுத்தும்போது செயற்பட வேண்டிய முறைமை தொடர்பில் அரச துறையினர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் முன்வைக்கப்படும் கருத்துக்கள் பாராளுமன்றத்தின் நிதி நிர்வாகம் தொடர்பான எதிர்பார்ப்புக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பது கண்காணிக்கப்பட்டிருப்பதாகவும் கணக்காய்வாளர் நாயகத்தினால் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறாக, இவ்விடயம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் பின்வரும் முன்மொழிவுகளும் தீர்மானங்களும் குழுவினால் முன்வைக்கப்பட்டன.

  1. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் கருத்து பிழையான முன்னுதாரணமாக அமைந்திருப்பதுடன், கோப் குழுவை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்திருப்பதால் இது தொடர்பில் குழு கடும் அதிருப்தியை வெளியிட்டது. இது குறித்து கணக்காய்வாளர் நாயகம் மற்றும் அவருடைய பணியாட்தொகுதியிடம் குழுவின் கவலையைத் தெரிவிக்க தீர்மானிக்கப்பட்டது.
  2. இந்தக் கருத்துத் தொடர்பில் கௌரவ சபாநாயகரிடம் முறைப்பாடு செய்தல்.
  3. இந்தக் கருத்தின் ஊடாக சட்டவாக்க செயற்பாடுகளில் நிறைவேற்று அதிகாரம் தலையீடு செய்வது தொடர்பில் எதிர்ப்பினை வெளியிட்டு கௌரவ ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறியப்படுத்தல்.
  4. இதன் நகலை பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக்கு அனுப்புதல்.
  5. கடந்த கோப் குழுக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முன்னேற்றம் குறித்து இரண்டு நாட்களுக்குள் தெரிவிக்குமாறும், எதிர்வரும் 17ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தல் மற்றும் குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் செயலாளரை மீண்டும் வலியுறுத்தல்.
  6. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்பில் கடந்த கோப் குழுவில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்ட விசேட அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.
  7. அத்துடன் தற்பொழுது நிலவும் பொருளாதார சூழ்நிலைக்கு மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை அழைப்பது தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக நிதி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து செயற்படுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர்களான கௌரவ ஜகத் புஷ்பகுமார, கௌரவ ஜானக வக்கும்புர, கௌரவ லொஹான் ரத்வத்த, கௌரவ சாந்த பண்டார பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ நளின் பண்டார, கௌரவ முஜிபுர் ரஹ்மான், கௌரவ ஜகத் குமார சுமித்திராராச்சி, கௌரவ (மேஜர்) சுதர்ஷன தெனிபிட்டிய, கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத்.சி தொலவத்த, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ சாணக்கியன் ராசமாணிக்கம், கௌரவ ராஜிகா விக்ரமசிங்ஹ, கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே மற்றுமு் கௌரவ (கலாநிதி) சரித ஹேரத் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4



தொடர்புடைய செய்திகள்

2026-09-25

மூன்று நியமனங்களுக்கு உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

புதிய தூதுவர், உயர்ஸ்தானிகர் மற்றும் நிறுவனத் தலைவர் ஆகிய மூன்று நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவிலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான இலங்கையின் புதிய தூதுவராக அன்சுல் பானு ஜான் அவர்களின் நியமனத்திற்கும், கனடாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சந்தன ரோஹண குமார அம்பகொல்ல அவர்களின் நியமனத்திற்கும் உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.மேலும், ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக நுசித் குமாரதுங்க அவர்களை நியமிப்பதற்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.


2026-09-24

சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது ஊடக நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வழிகாட்டி

சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது அவர்களது கண்ணியம், தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்காக தேசிய ஊடக வழிகாட்டியொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது. கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய குழுக் கூட்டத்தின்போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது அவர்களின் சிறந்த நலனுக்கு முன்னுரிமை வழங்குதல், உண்மைத்தன்மை மற்றும் நியாயத்தன்மையைப் பேணுதல், அத்துடன் சிறுவர்களையும் அவர்களது குடும்பங்களையும் தேவையற்ற வகையில் வெளிப்படுத்துவதைத் தவிர்த்தல் ஆகியவை இந்த் தேசிய வழிகாட்டியின் பிரதான நோக்கங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.அத்துடன், இயலாமையுடைய சிறுவர்கள் தொடர்பான ஊடக அறிக்கையிடலின்போது அவர்களது கண்ணியம் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் செயற்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இதனிடையே, தமிழ் மொழி பேசும் பிரதேசங்களில் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுகளை வலுப்படுத்துவதற்காக தமிழ் மொழியைப் பயன்படுத்தக்கூடிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்து பயிற்றுவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் பெண்களும் சிறுவர்களும் தமது முறைப்பாடுகளை முன்வைக்கும்போது எதிர்கொள்ளும் மொழிசார் சிரமங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கமாகும்.நாடு முழுவதும் இயங்கும் சிறுவர் இல்லங்களின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பை முறையாக மேற்கொள்வதற்காக மத்தியப்படுத்தப்பட்ட தகவல் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியமும் குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்காக குறித்த நிறுவனங்களின் நிர்வாகத்தின் பொறுப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.மேலும், ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்களைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் செல்வது தொடர்பில் காணப்படும் விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் தொழில்நுட்பக் குழுவொன்றின் ஊடாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள பெண்களின் பிள்ளைகளுக்கான கல்விச் செலவுகளை மீளச் செலுத்தும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், 2027ஆம் ஆண்டளவில் அனைத்து முன்பள்ளிகளுக்கும் பொதுவான தரநிலைகளை அறிமுகப்படுத்துதல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுவான பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் முறைமையொன்றை ஏற்படுத்துதல் மற்றும் முன்பள்ளிகளில் காணப்படும் உட்கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளில் காணப்படும் தாமதங்களைக் குறைப்பதற்காக சட்ட வைத்திய அறிக்கைகள் மற்றும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வழங்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல், சட்டமா அதிபர் திணைக்களத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுதல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளைத் துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான விசேட பொறிமுறையொன்றை உருவாக்குதல் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.சிறுவர்களுக்கு வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனையை சட்டரீதியாகத் தடை செய்வதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-09-23

“அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்)" ஆகிய சட்டமூலங்களுக்கு துறைசார் மேற்பார்வைக் குழுவில் அனுமதி

பாராளுமன்றத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்) ஆகிய சட்டமூலங்கள் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில்  ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக அவர்களின் தலைமையில் குறித்த குழு நேற்று (செப். 22) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்தச் சட்டமூலங்கள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டன.சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பரிந்த ரணசிங்க அவர்கள் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சட்டவரைவு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.2026.09.22 அன்று கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களினால் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட குறித்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்மானம் குறித்தும் சட்டமா அதிபர் குழுவிற்கு விளக்கமளித்தார். அத்துடன், இரு சட்டமூலங்களுடனும் தொடர்புடைய விடயங்கள் குறித்து குழு உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களின் மூலம் நீதித்துறையின் ஆற்றலை விரிவுபடுத்துதல், மேன்முறையீட்டு நீதிக்கான பிராந்திய மட்டத்திலான அணுகலை மேம்படுத்துதல், விசாரணையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்தல், நீதிபதிகளின் அனுபவத்தைத் தக்கவைத்தல் மற்றும் நீதிபதிகளை நியமிக்கும் நிறுவன ரீதியான செயன்முறையை மேம்படுத்துதல் ஆகியவை நோக்கங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன.அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிப்பதற்காக அரசியலமைப்பின் 137ஆவது உறுப்புரையைத் திருத்த முன்மொழியப்பட்டுள்ளது. பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவி செயற்படுத்துவதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்வதுடன், வழக்குகளின் தரப்பினர்கள் கொழும்பிற்கு வர வேண்டிய தேவையையும் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.மேலும், மாகாண மட்டத்திலான மேல் நீதிமன்றங்களின் நீதித்துறை ஆற்றலை அதிகரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாகாண மேல் நீதிமன்றங்கள் பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் ஆரம்ப நீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவதுடன், 2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்குப் பின்னர் மாகாண சிவில் மேல் நீதிமன்றங்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன.இதன் விளைவாக வழக்குகள் குவிந்து காணப்படுவதும், அவற்றை நிறைவு செய்வதில் ஏற்படும் தாமதங்களும் காரணமாக மேலதிக நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, மேலதிக மாகாண மேல் நீதிமன்றங்கள் மற்றும் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு ஏதுவாக, அதிகபட்ச மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆக அதிகரிப்பதற்காக நீதித்துறை அமைப்புச் சட்டத்தின் 4ஆவது பிரிவைத் திருத்த முன்மொழியப்பட்டுள்ளது.சட்டரீதியான ஓய்வுபெறும் வயதெல்லைகளைத் திருத்துவதன் மூலம் அனுபவமிக்க நீதித்துறை அதிகாரிகளின் சேவையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதும் இந்தத் திருத்தங்களின் மற்றுமொரு நோக்கமாகும்.இதற்கமைய, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 61 இலிருந்து 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் ஓய்வுபெறும் வயதை 60 இலிருந்து 62 ஆகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, எம்.கே.எம். அஸ்லம், சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க,  வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன், தர்மப்பிரிய விஜேசிங்க, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.டி. சூரியபண்டார மற்றும் சந்தன சூரியஆரச்சி ஆகியோரும், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர்  ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம மற்றும் கயான் ஜனக ஆகியோரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-09-23

இயலாமையுடைய நபர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதை இலகுபடுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பில் விசேட குழுவின் கவனம்

இயலாமையுடைய நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் செயன்முறையை மேலும் இலகுவானதாகவும் முறையானதாகவும் மாற்றுவதற்காக மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட, சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் போது இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட விசேட குழு அண்மையில்  பாராளுமன்றத்தில் முதன்முறையாகக் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுகத் வசந்த.த சில்வா, தினேஷ் ஹேமந்த மற்றும் எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், இயலாமையுடைய நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் போதும், அவர்களது இயலாமையுடைய நிலைமைக்கு ஏற்றவாறு வாகனங்களை மாற்றியமைத்து பயன்படுத்தும் போதும் எதிர்கொள்ளும் நடைமுறை மற்றும் சட்டரீதியான பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இங்கு தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தினால் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள், இயலாமையுடைய நிலைமைக்கு ஏற்ப வழங்கப்படும் மருத்துவப் பரிந்துரைகள் மற்றும் அதற்கமைய சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, மருத்துவப் பரிசோதனைகளை மாவட்ட மட்டத்தில் மேற்கொள்வது, பார்வைக் குறைபாடுடைய நபர்களுக்கான பார்வைப் பரப்பளவு உள்ளிட்ட மருத்துவத் தகைமைகளை கருத்திற்கொண்டு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கக்கூடிய வாகன வகைகளை விரிவுபடுத்துவது, வாகனங்களுக்கு பொருத்தமான பாதுகாப்பு உபகரணங்களைப் பொருத்துவது மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல் திருத்தங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.செவித்திறன் குறைபாடுடைய நபர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் தற்போதுள்ள சட்ட நிலைமை, விசேட அடையாளக் குறியீடுகளைப் பயன்படுத்துதல் மற்றும் சைகை மொழி பெயர்ப்பாளர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், ஊனமுற்ற நிலைமைக்கு ஏற்றவாறு வாகனங்களை மாற்றியமைக்கும் செயன்முறை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.ஒரு நபருக்கு பல வாகனங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல், மருத்துவப் பரிசோதனை செயன்முறையை எளிமைப்படுத்துதல் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையிலான இணையவழி முறைமையை மேம்படுத்துதல் தொடர்பிலும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.இயலாமையுடைய நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் செயன்முறையை மேலும் இலகுவானதாகவும் முறையானதாகவும் மாற்றுவதற்குத் தேவையான வர்த்தமானி அறிவித்தல் திருத்தங்கள், பிரதேச மட்டத்தில் சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியவாறு, இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்து உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks