பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2022-12-06
2021 டிசம்பர் 31 வரை மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையைத் தாண்டி நாளாந்த சம்பள அடிப்படையில் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் 556 பேர் காணப்படுவதாக கோபா குழுவில் புலப்பட்டது.
அதற்கமைய, நாளாந்த சம்பள அடிப்படையில் 396 பணியாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் 160 பணியாளர்கள் இருப்பதாகவும் புலப்பட்டது.
மேல்மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) சரித ஹேரத் தலைமையில் நேற்று (டிச. 05) பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் புலப்பட்டது. இந்தக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹஷீம் பணியாற்றுகிறார்.
இந்த பணியாளர்கள் அத்தியாவசிய பணியாளர்கள் என வருகை தந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இந்தப் பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் இணைத்துக்கொள்ள பல சந்தர்ப்பங்களில் முயற்சித்ததாகவும், அரசாங்க மாற்றத்துடனான கொள்கை மாற்றங்கள் உள்ளிட்ட சில விடயங்கள் காரணமாக அதனை மேற்கொள்ள முடியாமல் போனதாக அவர்கள் தெரிவித்தனர். இந்தப் பணியாளர்கள் திட்டங்களின் அடிப்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டதாகவும் அவற்றிலிருந்து கிடைத்த வருமானத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்கியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கடந்த காலங்களில் பாரிய திட்டங்கள் காணப்பட்டாலும் தற்பொழுது காணப்படும் டொலர் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விடயங்களால் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் குறைந்துள்ளதாக (பேராசிரியர்) சரித ஹேரத் மற்றும் வருகை தந்த உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதனால் இந்தப் பணியாளர்களை நிரந்தர அடிப்படையில் சேவையில் இணைத்துக்கொண்டால் அவர்களுக்கான சம்பளத்தை திறைசேரியிலிருந்தே வழங்கவேண்டி ஏற்படும் என தெரிவித்தனர். அதனால் அத்தியாவசியப் பணியாளர்களை மாத்திரம் நிரந்தரமாக்குவது தொடர்பில் கண்டறிந்து செயற்படுமாறும் மேலதிகப் பணியாளர்கள் இருந்தால் இழப்பீடு வழங்கி அவர்களை நீக்குவது தொடர்பில் கருத்திற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். தற்பொழுது திட்டங்கள் குறைவு என்பதால் தேவைக்கமைய இந்தப் பணியாளர்களின் எண்ணிக்கையின் முக்கியத்துவ பட்டியல் உள்வாங்கப்படும் வகையில் அறிக்கையொன்றை 3 மாதங்களுக்குள் கோபா குழுவுக்கு வழங்குமாறு (பேராசிரியர்) சரித ஹேரத் பரிந்துரைத்தார்.
அதேபோன்று, 2012 ஆம் ஆண்டில் 158 மில்லியன் ரூபாய் செலவு செய்து கொள்வனவு செய்த இரண்டு கொங்கிறீட் இயந்திரங்கள் மற்றும் 6 மில்லியன் ரூபாய் பெறுமதியான கார்ப் இயந்திரம் இதுவரை செயலற்ற நிலையில் காணப்படுவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 2012 முதல் 2022 நவம்பர் வரை கொங்கிறீட் இயந்திரங்கள் இரண்டும் 420 மணித்தியாலங்களே பயன்படுத்தியுள்ளமை, கார்ப் இயந்திரம் 2012 முதல் இதுவரை செயலற்றுக் காணப்படுகின்றமை இதன்போது புலப்பட்டது.
அதற்கமைய, 2011 ஆம் ஆண்டளவில் பாரியளவில் பாதைகள் கொங்கிறீட் இடப்பட்டதாகவும் அதனால் 2012 இல் இந்த இயந்திரங்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனினும் இந்த இயந்திரங்களை கொள்வனவு செய்ததன் பின்னர் வீதிகளுக்கு கொங்கிறீட் இடுவது படிப்படியாகக் குறைந்ததாகவும் அதனால் இந்த இயந்திரங்களின் பயன்பாடு குறைந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். அதனால் தற்பொழுது இந்த இரண்டு இயந்திரங்களில் ஒரு இயந்திரம் தமக்கு போதுமானது என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவது தொடர்பில் அமைச்சின் தலையீட்டில் தற்பொழுது வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். அதனால் எதிர்காலத்தில் அவை பயன்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.
அதற்கமைய, இதன் அடுத்த கட்டம் தொடர்பில் 3 மாதங்களில் அறிக்கையொன்றை கோபா குழுவுக்கு வழங்குமாறு பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், அதிகாரசபையின் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களில் இல்லாத திட்ட ஒருங்கிணைப்பு பதவிக்கு 2 அதிகாரிகள் 2020 ஒக்டோபர் முதல் இணைத்துக்கொண்டுள்ளமை தொடர்பிலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகன வாடகை மற்றும் எரிபொருள் செலவு என்பன தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. விசேட திட்டங்களுக்கு இவ்வாறு அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்படுவதாகவும் அந்த திட்டங்கள் நிறைவடைந்ததன் பின்னர் அவர்களது சேவையை நிறைவு செய்வதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதற்கமைய, இது தொடர்பில் ஒரு மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோபா குழு பரிந்துரைத்தது.
அதற்கு மேலதிகமாக, அதிகாரசபைக்கு சொந்தமான 20 வருடங்கள் பழைமையான 6 வாகனங்கள் காணாமல் போயுள்ளமை, 2012 மற்றும் 2013 ஆண்டுகளில் ஒப்பந்தக்காரர் ஒருவர் கடன் அடிப்படையில் அஸ்போல்ட் பெற்றுக்கொண்டமை மற்றும் அந்த நிதியை அறவிடுவது உள்ளிட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ பிரசன்ன ரணவீர, கௌரவ டயனா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க கௌரவ ஜே.சி. அலவதுவல, கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பர்னாந்துபுல்லே, கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, கௌரவ அஷோக் அபேசிங்க, கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ (கலாநிதி) சரத் வீரசேகர மற்றும் கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-11-18
கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் வைப்பாளர்களின் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட கூட்டுறவுத் துறையில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பில் ஆராய்வதற்கான உபகுழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடியின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தின் முகாமைத்துவத்தின் பலவீனங்கள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், உரிய அனுமதியின்றி சங்கத்தின் நிதி தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டமையால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்த முதலீடுகள் காரணமாக உறுப்பினர்கள் மற்றும் வெளிப்புற வைப்பாளர்களின் வைப்புப் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது.மேலும், கூட்டுறவுத் திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகள், சங்கத்தின் சொத்துக்களைத் தீர்ப்பதில் உள்ள சிக்கல்கள், நீதிமன்றத் தடையுத்தரவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் பணத்தை மீள வழங்குவதற்காக, சங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மதிப்பீடு செய்து அவற்றை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல், சொத்துக்களை அகற்றுவதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவுகளை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தற்போது கையிருப்பில் உள்ள நிதியை வைப்பாளர்களிடையே நியாயமான அடிப்படையில் பகிர்ந்தளித்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்படாத முதலீடுகளை மேற்கொண்டமைக்குப் பொறுப்பான முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களிடமிருந்து அதற்கான நட்டஈட்டுத் தொகையை அறவிடுதல், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் நிறைவு செய்யப்படாத திட்டங்களைப் பூர்த்தி செய்து அவற்றின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் முழு வைப்புத் தொகையையும் மீளச் செலுத்துவதற்கான தெளிவானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான பொறிமுறையொன்றை முன்வைக்க வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அத்துடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மேல் மாகாண மற்றும் கம்பஹா மாவட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்பட்டது.இந்தக் கூட்டத்தில் உபகுழுவின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, டீ. கே. ஜயசுந்தர மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-11-17
விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் பல நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டது.இதற்கமைய, குழுவினர் இன்று (நவ. 17) இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவனம் (SINTEC) மற்றும் இலங்கை உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) ஆகிய நிறுவனங்களுக்கு விஜயம் செய்து அவற்றின் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.2025/2026 ஆம் ஆண்டுகளுக்கான குறித்த நிறுவனங்களின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல், 2027 ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டுத் திட்டத்தைப் பரிசீலித்தல் மற்றும் நிறுவன வளாகங்களில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அவதானித்தல் ஆகியன இந்த விஜயத்தின் நோக்கங்களாகும்.குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தனுர திசாநாயக்க, லசித் பாஷண கமகே மற்றும் சதுர கலப்பத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-11-17
ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில், கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவில் மேலும் கலந்துரையாடப்பட்டது.குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இக்கலந்துரையாடலில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.ஆசிரியர் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள அதிகரிப்பு இடைவெளிகள் மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஒரு சேவைக்கு மாத்திரம் தனித்தனியாக சம்பளத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம், ஒட்டுமொத்த அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் ஒப்பிடுகையில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.சேவைப் பிரமாணக் குறிப்புகள் மற்றும் ஆட்சேர்ப்புக்கான வயதெல்லைகளைத் திருத்துதல், அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள், பாடசாலை வகைப்படுத்தல் மற்றும் வெற்றிடங்களை நிரப்புதல், முறையான இடமாற்றக் கொள்கை, ஆசிரியர் மற்றும் அதிபர் உத்தியோகபூர்வ இல்லங்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் உபகுழு விரிவாகக் கலந்துரையாடியது.இவ்விடயம் தொடர்பில் மேலும் கலந்துரையாடிய பின்னர், முன்மொழிவுகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் அத்தம்பாவ, சுகத் வசந்த. டி சில்வா, சுஜீவ திசாநாயக்க மற்றும் சானக மாதுகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.
2026-11-16
சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.இதில், யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்துதல், காட்டு யானைகளின் இடம்பெயர்வு முறைகளைக் கண்டறிதல் மற்றும் யானைகளைப் பாதுகாப்பதற்குப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், காவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.யானைகளின் வாழ்விடங்கள் இழக்கப்படுதல், பாரம்பரிய யானை வழித்தடங்கள் தடைப்படுதல் மற்றும் குடியிருப்புகள், விவசாய நிலங்களை அண்மித்த பகுதிகளில் உணவு தேடிச் செல்லுதல் ஆகியன யானை – மனித மோதல் அதிகரிப்பதற்கான பிரதான காரணங்களாக இதன்போது கலந்துரையாடப்பட்டன. யானைகளின் இடம்பெயர்வு முறைகளைக் கண்டறிவதற்காக GPS மற்றும் செய்மதிக் கழுத்துப்பட்டித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.யானை – மனித மோதலைக் குறைப்பதற்காக பிரதேச மட்டத்தில் வனவிலங்கு அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மக்களை உள்ளடக்கிய கூட்டுக் குழுக்களை அமைத்தல், சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துதல் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கைத் தொடர்பாடல் வலையமைப்புகளைச் செயற்படுத்துதல் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.அத்துடன், நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்த யானைகளுக்குச் சிகிச்சையளிக்கும்போது வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை மருத்துவ அதிகாரிகளின் சேவை, யானைகளுக்கு மயக்க மருந்து செலுத்தும்போது காணப்படும் ஆபத்துகள் மற்றும் களத்தில் சிகிச்சையளிப்பதற்குத் தேவையான நடமாடும் மருத்துவ வசதிகள், நடமாடும் எக்ஸ்-ரே இயந்திரங்கள் போன்ற தொழில்நுட்ப உபகரணங்களின் அவசியம் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கிங்ஸ் நெல்சன், உபுல் கித்சிறி, சட்டத்தரணி எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி, சுதத் பலகல்ல, கிட்ணன் செல்வராஜ் மற்றும் சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks


