logo

E   |   සි   |  

2022-11-28

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

அரச மற்றும் தனியார் துறையினரை ஒன்றிணைத்து நாட்டின் அபிவிருத்திப் பணிகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

கட்டட நிர்மாணத்துறையில் வேலைகள் நிறுத்தப்படுவதால் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு  தொழில் இல்லாமல் போகும் பின்னணியில் அரச மற்றும் தனியார் துறையினரை ஒன்றிணைத்து எதிர்கால அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானித்திருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மற்றும் அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சரின்  தலையில் அண்மையில் (நவ. 22) பாராளுமன்றத்தில் கூடிய போது, நகர அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வினவிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அபிவிருத்திப் பணிகளுக்குச் செலவு செய்வதற்கு விரும்பும் தனியார் முதலீட்டாளர்கள் காணப்படுவதால், அதற்கு திறைசேரியினால் நிதி ஒதுக்கீடு செய்யாமல் அரச மற்றம் தனியார் துறையினரை ஒன்றிணைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதேபோன்று, நகர அபிவிருத்தியுடன் தொடர்புடைய திட்டங்கள் குறித்து இங்கு விரவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அபிவிருத்திகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றாலும் அபிவிருத்தியுடன் தொடர்புடைய பல திட்டங்கள் இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் 2023 ஆம் ஆண்டில் இந்த அனைத்து திட்டங்களையும் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர். உரிய திட்டங்களை மாவட்ட மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கும் முன்வைத்து அவர்களது தேவைகளையும் கருத்திற் கொண்டு பூர்த்தி செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளில் தனியார் நிறுவனங்களால் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் இடைநடுவில் கைவிடப்பட்டமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் கௌரவ அருந்திக்க பர்னாந்து குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். கட்டட நிர்மாணப் பொருட்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதால் அவற்றின் நிர்மாணப் பணிகள் கைவிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினார். இதனால் அந்தத் திட்டங்களில் வீடுகளை கொள்வனவு செய்ய ஏற்கனவே நிதியைச் செலுத்திய மக்கள் தமக்கு முறைப்பாடு செய்திருப்பதாகவும் அதிகாரிகள் குழு முன்னிலையில் தெரிவித்தனர். உரிய ஒப்பந்தங்களில் காணப்படும் நிபந்தனைகளுக்கு அமைய விரைவாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ தேனுக விதானகமகே, கௌரவ அருந்திக்க பர்னாந்து, கௌரவ சாமர சம்பத் தசநாயக, கௌரவ அனுராத ஜயரத்ன, கௌரவ மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1 2

3 5

 



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks