பார்க்க

E   |   සි   |  

2022-11-09

செய்தி வகைகள் : செய்திகள் 

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை சந்தித்தார்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நசர் அல்-அமீரி நேற்று (நவ. 08) பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தார்.

பல்வேறு அம்சங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.

அந்நாட்டின் தேசிய பேரவைக்கு (National Council) பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும்முறை தொடர்பில் விளக்கமளித்த தூதுவர், இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடினார். அத்துடன் சிறுவர்கள் மற்றும் பெண்களைப் வலுப்படுத்துவது தொடர்பிலும், குறிப்பாக வர்த்தகத்துறையில் பெண்களை வலுப்படுத்துவது குறித்தும் இங்கு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

நாட்டின் எரிசக்தித் தேவையைப் பூர்த்திசெய்யப் புதுப்பிக்கத்தக்க சக்தியை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதும் குறித்தும் இங்கு மேலும் கவனம் செலுத்தப்பட்டது.

 

1 4

6 3

 



தொடர்புடைய செய்திகள்

2026-09-09

50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இயந்திரங்களை அகற்றி நவீன தொழில்நுட்பத்துடன் அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தை நவீனமயப்படுத்த திட்டம்

50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய மற்றும் காலாவதியான இயந்திர உபகரணங்களைப் படிப்படியாக அகற்றி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வினைத்திறன்மிக்க உபகரணங்களைக் கொள்வனவு செய்வதுடன், சர்வதேச சந்தையை இலக்காகக் கொண்டு உயர் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அச்சிடும் (Smart Security Printing) திறன்களைக் கொண்ட நவீன அச்சிடும் பிரிவொன்றை நிறுவுவதற்காக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.வாய்மூல விடைக்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜி.டி. சூரியபண்டார அவர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தில் 445 நிரந்தரப் பணியாளர்களும், ஒப்பந்த அடிப்படையில் மேலும் 21 பணியாளர்களும் பணியாற்றுவதாக பிரதமர் தெரிவித்தார்.பாதுக்கை, வட்டரெக்க பிரதேசத்தில் இயங்கி வரும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் அச்சகத்தின் மூலம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப பாடசாலைப் பாடப்புத்தகங்கள் மற்றும் தொகுதிகள் அச்சிடப்படுவதுடன், பாதுகாப்பு அச்சிடும் பணிகளான மாகாணப் பரீட்சை வினாத்தாள்கள் அச்சிடுதல், லொத்தர் சீட்டுகள் அச்சிடுதல் மற்றும் இரகசிய ஆவணங்களை அச்சிடுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.அத்துடன், SPC பயிற்சிப் புத்தகங்கள் அச்சிடுதல், பல்வேறு அரச நிறுவனங்களுக்கான அச்சிடும் பணிகள், ஏனைய வர்த்தக அச்சிடும் பணிகள், தனியார் அச்சிடும் கட்டளைகள் மற்றும் தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், நாட்டின் பல மாவட்டங்களில் SPC விற்பனை நிலையங்களின் வலையமைப்பொன்றும் பராமரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.அமைச்சின் கீழ் அச்சகம் ஒன்று காணப்படுவதன் மூலம் அரசாங்கத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைப்பதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.அதற்கமைய, சந்தை விலைகளைக் கட்டுப்படுத்தும் காரணியாக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் காணப்படுதல், சந்தையின் தரம் மற்றும் தரநிலைகளைக் கட்டுப்படுத்துதல், நம்பகமான பாதுகாப்பு அச்சிடும் (Security Printing) பிரிவொன்றின் தேவையைப் பூர்த்தி செய்தல் மற்றும் அரச துறையின் ஒரேயொரு அரச தொழில்முயற்சி நிறுவனமாக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் காணப்படுதல் ஆகியவை அவற்றில் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.பாரிய அளவிலான அச்சிடும் தேவையைப் பூர்த்தி செய்தல், அரசுக்குச் சொந்தமான அச்சிடும் வசதியொன்றின் தேவையை நிறைவேற்றுதல் மற்றும் அச்சிடும் பணிகளுக்காக ஏற்படும் செலவுகளைக் குறைத்தல் ஆகியவையும் இதன் மூலம் கிடைக்கும் நன்மைகளில் அடங்குவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.அத்துடன், நீண்ட காலமாக அரச நிறுவனமாக இயங்கி வருவதன் மூலம் வேலைவாய்ப்புகளை வழங்குதல், பயிற்சியளிக்கப்பட்ட மனித வளத்தைக் கொண்டிருத்தல் மற்றும் அரசாங்கத்தின் பங்காக அரசுக்கு நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துதல் ஆகியவையும் அரச அச்சகக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் இயங்குவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.


2026-09-08

கௌரவ சபாநாயகரின் அறிவிப்புகள் - 2026.09.08

“இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகம்” எனும் சட்டமூலம் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புஅரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில்  சவாலுக்குட்படுத்தப்பட்ட “இலங்கை ஊடக உயர்தொழிலர்களின் பட்டயம்பெற்ற நிறுவகம்” எனும் சட்டமூலம் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கப் பெற்றிருப்பதாக கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன பாராளுமன்றத்தில் இன்று (செப். 8) அறிவித்தார். உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் வருமாறு,சட்டமூலத்தின் வாசகம் 3(ஐ) தெளிவற்றதாக உள்ளது, எனவே இது அரசியலமைப்பின்12(1) மற்றும் 14(1) (எ) ஆம் உறுப்புரைகளுடன் முரண்படுவதால், அரசியலமைப்பின் 84(2) உறுப்புரைக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்த வாசகம் நீக்கப்பட்டால் இந்த முரண்பாடு நீங்கிவிடும்.(i)     சட்டமூலத்தின் வாசகம் 4(ச), அரசியலமைப்பின் உறுப்புரைகள் 12(1) மற்றும் 14(1)(எ) உடன் முரண்படுகிறது மற்றும் அரசியலமைப்பின் 84(2) உறுப்புரைக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்றம் முன்மொழிந்தபடி உறுப்புரையின் அந்த வாசகம் திருத்தப்பட்டால் இந்த முரண்பாடு நீங்கிவிடும்.(ii)     சட்டமூலத்தின் வாசகம் 5(4)(ஆ) அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) உடன் முரண்படுகிறது மற்றும் அரசியலமைப்பின் 84(2) உறுப்புரைக்கிணங்க விசேட பெரும்பான்மையொன்றின் மூலம் மாத்திரமே அங்கீகரிக்கப்பட முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உயர் நீதிமன்றத்தால் முன்மொழியப்பட்டபடி வாசகம் 5 திருத்தப்பட்டால் இந்த முரண்பாடு நீங்கிவிடும்.(iii)     சட்ட மூலத்தின் மற்ற வாசகங்கள் அரசியலமைப்பிற்கு முரணாக இல்லை என்றும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.“அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள்2026 ஆகஸ்ட் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளிலான அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்ட ஒன்பது மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட கீழே குறிப்பிடப்பட்டுள்ள மனுக்களின் பிரதிகளும் கிடைக்கப்பெற்றிருப்பதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.2026 ஆகஸ்ட் 21 திகதியன்று மனுக்கள் ஏழு 2026 ஆகஸ்ட் 24  திகதியன்று மனுக்கள் நான்கு 2026 ஆகஸ்ட் 25 திகதியன்று மனுக்கள் எட்டு 2026 ஆகஸ்ட் 28 திகதியன்று மனுக்கள் ஐந்து 2026 ஆகஸ்ட் 31 திகதியன்று மனுக்கள் முப்பத்து ஒன்று 2026 செப்டம்பர் 01 திகதியன்று மனுக்கள் பத்து 2026 செப்டம்பர் 03 திகதியன்று மனுக்கள் மூன்று2026 செப்டம்பர் 04 திகதியன்று மனுக்கள் இரண்டு  கிடைக்கப்பெற்றிருப்பதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார். “ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு பதினைந்து மனுக்கள்அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், “ஊழல் எதிர்ப்பு (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட பதினைந்து மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்திருப்பதாக கௌரவ சபாநாயகர் சபையில் அறிவித்தார்.நீதித்துறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்திற்கு மேலும் ஏழு மனுக்கள்2026 ஆகஸ்ட் 19 ஆம் திகதிய எனது அறிவித்தலில்  குறிப்பிடப்பட்ட மனுவுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “நீதித்துறை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக  உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் ஏழு மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்திருப்பதாக கௌரவ சபாநாயகர் இன்று சபையில் அறிவித்தார்.


2026-09-08

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலத்தை கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் இன்று (செப். 8) சான்றுரைப்படுத்தினார்.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தைத் திருத்துவதற்கான இச்சட்டமூலம் கௌரவ தொழில் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, கடந்த 20ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. பெண்கள், இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் தொடர்பில் குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகைகளை தற்போதைய நிலைமைக்கு ஏற்ற வகையில் புதுப்பிப்பதே இந்தத் திருத்தத்தின் பிரதான நோக்கமாகும்.1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தின் கீழ் 16 வயதுக்குக் குறைந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது முழுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. எனினும், குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கு நீதிமன்றத்தினால் விதிக்கக்கூடிய அபராதத் தொகைகள் தற்போதைய சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப போதுமானதாக இல்லாத காரணத்தினால், அவ்வபராதத் தொகை ரூ.10,000 இலிருந்து ரூ.100,000 வரை இத்திருத்தத்தின் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பெண்கள், இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல்  (திருத்தச்) சட்டமூலம் 2026 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பெண்கள், இளம் ஆட்களையும் பிள்ளைகளையும் தொழிலுக்கு அமர்த்துதல் (திருத்தச்) சட்டமாக நடைமுறைக்கு வருகிறது.


2026-09-01

அனைத்துப் பாராளுமன்ற சபாநாயகர்களின் இரண்டாவது மாநாடு கம்போடியா இராச்சியத்தின் நோம் பென் நகரில்

கம்போடியா இராச்சியத்தின் நோம் பென் நகரிலுள்ள GDT மாநாட்டு மண்டபத்தில் 2026 ஓகஸ்ட் 26ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெற்ற இரண்டாவது அனைத்து பாராளுமன்ற சபாநாயகர்கள் மாநாட்டில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன ஆகியோர் பங்கேற்றனர்.கம்போடியாவின் செனட் சபை மற்றும் தேசிய பேரவை  ஆகியன இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மாநாடு, ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, ஓசியானியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு  பிராந்தியங்களைச் சேர்ந்த சட்டவாக்கத் தலைவர்கள், சர்வதேச அமைப்புக்களின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் தளமாக அமைந்தது. “சமாதானம் மற்றும் பகிரப்பட்ட செழிப்பிற்குமான ஒருமைப்பாடு: சர்வதேச சட்டத்தை வலுப்படுத்துதல் மற்றும் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்தல்” என்ற தொனிப்பொருளில் இம்மாநாடு நடைபெற்றது.கம்போடிய அரச மாளிகையில் அந்நாட்டின் மன்னர் அதிமேதகு ‘Preah Samdech Preah Boromneath Norodom Sihamoni’ அவர்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து மாநாட்டின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இதன்போது, ISC-2 மாநாட்டின் தலைவரும் கம்போடிய செனட் சபையின் தலைவருமான கௌரவ ‘Samdech Akka Moha Sena Padei Techo Hun Sen’ அவர்களுடனான சுமூகமான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இதற்கு மேலதிகமாக, கம்போடிய பிரதமர் கௌரவ ‘Samdech Mohaborvor Thipadei Hun Manet’ அவர்களுடனும் சுமூகமான சந்திப்பொன்று இடம்பெற்றது.இந்த மாநாட்டில் பிரதான உரையாற்றிய இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், பாரம்பரிய இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததும் வலுவானதுமான பங்களிப்பாக அமையும் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில் சட்டவாக்க நிறுவனங்கள் தனித்துவமான பங்கை வகிக்க வேண்டும் என்றும், கடுமையான அரசியல் கருத்து வேறுபாடுகள் நிலவும் சந்தர்ப்பங்களிலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக தொடர்பாடல் வழிகளைத் திறந்த நிலையில் பேண வேண்டும் என்றும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார். மேலும், உண்மையானதும் நிலையானதுமான சமாதானம் என்பது போர் இல்லாத நிலையை மாத்திரம் குறிப்பிடுவதாக அமையாது என்றும், அவ்வாறான சமாதானம், பரஸ்பர மரியாதை மற்றும் எந்தவொரு பிரஜையும் புறக்கணிக்கப்படாத அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி ஆகியவற்றின் மீது கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் அமைவிடம் தொடர்பிலும் கவனம் செலுத்திய கௌரவ சபாநாயகர், அணிசேராக் கொள்கை, நட்புறவு மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கையின் வரலாற்று ரீதியான வெளிநாட்டுக் கொள்கையை மீண்டும் வலியுறுத்தினார். காலநிலை மாற்றம், இணையக் குற்றங்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை போன்ற எல்லைகளைக் கடந்து தாக்கத்தை ஏற்படுத்தும் நவீன சவால்களை எந்தவொரு நாடும் தனித்து தீர்க்க முடியாது என்றும், அவற்றை எதிர்கொள்வதற்கு பிராந்திய மற்றும் சர்வதேச மட்டத்திலான ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு அவசியம் என்றும் கௌரவ சபாநாயகர் சுட்டிக்காட்டினார். நிலையான அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் சபையின் 2030 நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்துவதற்கு இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார். உலகளாவிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதன் மூலம் பரந்தளவிலான சமூக நீதியையும் பகிரப்பட்ட பொருளாதார செழிப்பையும் அடைந்துகொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.கம்போடியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில், இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர், அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ மில்டன் டிக் அவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது, இரு நாடுகளுக்கும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.பாராளுமன்ற அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதுடன், மேலும் அதிகரித்த தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்பின் ஊடாக இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.அத்துடன், கௌரவ சபாநாயகர் விக்கிரமரத்ன அவர்கள் நேபாள தேசிய பேரவையின் தலைவர் கௌரவ நாராயண் பிரசாத் தஹால் அவர்களையும் சந்தித்தார். இதன்போது, இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் சுமுகமான உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக இரு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பிலும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.மாநாட்டின் நிறைவில் “நோம் பென் பிரகடனம்” (Phnom Penh Declaration) உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சர்வதேச முரண்பாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கான ஒருங்கிணைந்த சட்டவாக்கக் கட்டமைப்பை உறுதிப்படுத்துவது இந்தப் பிரகடனத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks