2022-07-07
செய்தி வகைகள் : குழு செய்திகள்
பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக நகர அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதி ஒதுக்கப்படமாட்டாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறும், தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களை நஷ்டம் ஏற்படாத வகையில் தற்காலிகமாக நிறுத்துமாறும் திறைசேரி அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். எவ்வாறாயினும், குறைநிரப்பு மதிப்பீட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னரே அதனை சரியாகக் கூற முடியும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் (05) பாராளுமன்றத்தில் கூடியபோது எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நிதியொதுக்கீடு செய்வது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கொழும்பு வடக்கு பர்க்கியூசன் வீதியிலுள்ள நஜீமா தோட்டத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இதன் பொது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. இந்தக் காணி 2006 ஆம் ஆண்டில் குறைந்த வருமானம் பெரும் மக்களை நிலையான வீடுகளில் குடியேற்றும் வரை தற்காலிகமாக குடியேற்றிய இடைத்தங்கல் முக்காக பயன்படுத்தப்பட்டதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அண்மைக்காலமாக இந்தக் காணியில் ஒருசிலர் வலுக்கட்டாயமாகத் தங்கியிருப்பதாகவும் அவர்களை அப்புறப்படுத்த சட்டரீதியான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதேபோன்று, முகத்துவாரம் கிம்புலாஎல மைதானத்தை மறுசீரமைப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ யதாமினி குணவர்தனவால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கை தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
கொழுப்பு நகரில் உள்ள மாடிவீட்டுத் திட்ட குடியிருப்பாளர்களுக்கு நீர் வசதிகளை வழங்குவதில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பிலும் இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.கொழும்பு நகரில் உள்ள மாடிவீட்டு உரிமையாளர்களிடமிருந்து மாதாந்த வீட்டுக் கட்டணம் மற்றும் ஏனைய கட்டணங்கள் உள்ளடங்கலாக ஒரு பட்டியல் வழங்கப்படுவதாகவும் இதில் நீர்க்கட்டணம் அதிகளவில் அறவிடப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
இதன்போது தேசிய நீர்வழங்கல் சபையின் மூலம் மொத்தமாக நீர் விநியோகிப்பதால் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கட்டணங்களுக்கு அமைய மாதாந்த கட்டணம் அறவிடப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மூலம் நீர்க்கட்டணங்களை ஏன் அறவிட முடியாது என இதன்போது அமைச்சர் வினவினார். மாடி வீடுகளை முகாமைத்துவம் செய்வதற்கு கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகாரசபையை (Condominium Management Authority) நிறுவுவதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அதன் பின்னர் இந்த சிரமம் தவிர்க்கப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட உரிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
2026-07-08
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட இறக்குமதித் தீர்வை தொடர்பான தீர்மானம், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளைகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் ஆராயப்பட்டதுடன், அவற்றைப் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் (06) பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதிபற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.இதற்கு அமைய, (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2478/03 இலக்க அதிவிசேட வர்த்தமான பத்திரிகையில் வெளியிடப்பட்ட தீர்மானம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் 2478/04 மற்றும் 2479/38 இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டளைகளும் இங்கு ஆராயப்பட்டன.இக்கூட்டத்தில் நிதி அமைச்சு, இலங்கை சுங்கம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் பிரகாரம் தேசிய வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள 0%, 15% மற்றும் 20% ஆகிய சுங்க இறக்குமதி வரி விகிதங்கள், 2026 ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 0%, 10%, 20% மற்றும் 30% என நான்கு அடுக்குகளைக் கொண்ட புதிய கட்டமைப்பின் கீழ் அமுல்படுத்தப்படவுள்ளன.இந்தத் திருத்தங்கள் வெறுமனே வரி விகிதங்களில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் மட்டுமல்லாது, அடுத்த பத்தாண்டுகளுக்கான நாட்டின் வர்த்தக மற்றும் முதலீட்டு சூழலை வடிவமைக்கும் தேசிய வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கையாகும் எனக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.விஞ்ஞான அடிப்படையிலும் முன்னறிவிக்கக்கூடியதுமான வரிக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதன் மூலம், இலங்கையை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் மேலும் திறனுள்ளதாக இணைப்பதே இக்கொள்கையின் பிரதான நோக்கமாகும் என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.இந்தக் கொள்கையின் கீழ், ஐக்கிய நாடுகளின் பரந்துபட்ட பொருளாதார வகைப்பாடுத்தல்களை அடிப்படையாகக் கொண்ட புதிய நான்கு அடுக்கு வரிக் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் பல HS குறியீடுகள் மறுசீரமைக்கப்படவுள்ளன.மூலதனப் பொருட்கள், இடைநிலைப் பொருட்கள், உணர்திறன் மிக்க இடைநிலைப் பொருட்கள் மற்றும் நுகர்வுப் பொருட்கள் ஆகிய நான்கு பிரதான வகைகளின் கீழ் புதிய வரி கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், உள்நாட்டு தொழில்துறையைப் பாதுகாப்பதற்கும் அரச வருவாயை நிலைநிறுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.கட்டுமானத் துறைக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், தரையோடுகளுக்கான தற்போதைய 85–90 சதவீத இறக்குமதி வரி விகிதத்தை 2029 ஆம் ஆண்டளவில் படிப்படியாக 20 சதவீதமாகக் குறைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்தது. இதன் மூலம் கட்டுமானச் செலவுகள் குறைவதுடன், வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு முதலீடுகளுக்கு சாதகமான தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.உள்நாட்டு தொழில்துறைகளின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, பல்வேறு துறைகளுக்கான புதிய தேசிய துணைப் பிரிவுகளை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.மேலும், 2029 ஆம் ஆண்டளவில் CESS மற்றும் PAL போன்ற வரிகளை படிப்படியாக நீக்கி, எளிமையான சுங்கவரி முறைக்குத் திரும்புவது அரசாங்கத்தின் இலக்காகும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். வரி தளர்வுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை குறைப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் குழுவினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.இந்த வரி மறுசீரமைப்புகள் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை 18 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 36 பில்லியன் அமெரிக்க டொலராக இரட்டிப்பாக்கும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் இலக்கை அடைவதற்கு ஆதரவாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக மின்னணு உபகரணங்கள், ரப்பர் உற்பத்திப் பொருட்கள், மருந்துத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் ஆகியவற்றை உலகளாவிய வழங்கல் சங்கிலிகளுடன் ஒருங்கிணைப்பதற்கு இந்தக் கொள்கை முக்கிய அடித்தளமாக அமையும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.இதனுடன், வர்த்தகத் தரவுகளைப் புதுப்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் குழு தீவிர கவனம் செலுத்தியது. வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களத்திடம் உள்ள வர்த்தகத் தரவுகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புதுப்பிக்கப்படவில்லை என்பது குழுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.தரவுகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கை வகுப்பதற்குத் தேவையான அனைத்து வர்த்தகத் தரவுகளையும் தொடர்புடைய தகவல்களையும் ஒரு வார காலத்திற்குள் வழங்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குழு அறிவுறுத்தியது.மேற்குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று (08) பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதன் பின்னர் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க, கௌரவ பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-07-08
சிறந்த பொதுப் போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில் கொத்தணி பஸ் நிறுவன முறைமையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை அனுமதி அண்மையில் கிடைத்துள்ளதாகவும் கௌரவ போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று (ஜுலை 07) கௌரவ அமைச்சர தலைமையில் கூடியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இதற்கு அமைய, 177, 170 மற்றும் 190 ஆகிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபடும் பஸ்களை அடிப்படையாகக் கொண்டு, முன்னோடி திட்டமாக இந்த கொத்தணி பஸ் நிறுவன முறைமை ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.முன்னர் நடைமுறையில் இருந்த சாதாரண சேவை, அரை சொகுசு சேவை, சொகுசு சேவை மற்றும் அதி சொகுசு சேவை ஆகிய நான்கு வகைப்பாடுகளில், அரை சொகுசு சேவை மற்றும் அதி சொகுசு சேவை ஆகிய இரண்டு வகைப்பாடுகளை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.அரை சொகுசு பஸ் சேவை தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், அதற்கான விடயங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும், நீண்ட தூர மற்றும் குறுகிய தூர பஸ் சேவைகளுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பதற்கு விலைச் சூத்திரத்தை பயன்படுத்துவது நியாயமானதல்ல எனத் தெரிவித்த அமைச்சர், நீண்ட தூர சேவைகளில் ஏற்படும் அதிக செலவுகளை கருத்தில் கொண்டு, அதற்கான பஸ் கட்டணங்களை நிர்ணயிப்பதற்கு தனியான முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.பஸ் தொழில்துறையைப் பாதுகாப்பதற்கும், பயணிகளின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார்.எரிபொருள் விலை குறைக்கப்படும் சந்தர்ப்பங்களில் பஸ் கட்டணங்களைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் குழுத் தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். இதன்போது, எரிபொருள் விலை குறைவடைந்தாலும், ஏனைய செலவுகள் தொடர்ந்தும் உயர்ந்த நிலையில் காணப்படுவது சவாலாக உள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.வீதி விபத்துக்களை குறைத்தல், சைக்கிள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான தனியான பாதைகளை அமைத்தல், வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள், பஸ் வண்டிகளில் பயணிகளுக்கு மீதிப் பணம் வழங்கப்படாமை தொடர்பான முறைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இது விடயத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.அத்துடன், போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தித் துறைகளுக்கு தொடர்புடையதாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்கு தலையீடு செய்யுமாறும் குழுத் தலைவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.மேலும், (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அவர்களினால் வெளியிடப்பட்டு, 2026 மார்ச் 19 ஆம் திகதியிடப்பட்ட 2480/22 இலக்க அதிவிசேட வர்த்தமான அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் குழுவில் ஆராயப்பட்டு, பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உற்பத்தியாளர்களால் பாதுகாப்புப் பட்டிகள் பொருத்தப்படாத ஆசனங்களுக்கு பாதுகாப்புப் பட்டிகளை பொருத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக் காலம் போதுமானதாக இல்லை எனக் கண்டறியப்பட்டதையடுத்து, அந்த சலுகைக் காலத்தை 2026.03.20 முதல் ஆரம்பித்து 2026.06.19 ஆம் திகதி வரை நீடிப்பதற்காக குறித்த ஒழுங்குவிதி வெளியிடப்பட்டுள்ளது.கௌரவ நகர அபிவிருத்தி பிரதியமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் பலரும் இக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-07-07
சுற்றுலாத் துறையை மேம்படுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அடுத்த வருட வரவுசெலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் பற்றியும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இலங்கை வெளிநாடுகளுடன் மேற்கொண்டுள்ள வர்த்தக உடன்படிக்கைகள் குறித்த தற்போதைய நிலைமைகள் குறித்தும் குழுவில் கேள்வியெழுப்பப்பட்டது. வெளிநாட்டு வர்த்தக உடன்படிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அக்குழுவின் அறிக்கை கிடைத்ததும் அவை பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆரம்பிக்கப்படக் கூடிய திட்டங்கள் குறித்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர்.இக்கூட்டத்தில் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கௌரவ சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் (பேராசிரியர்) ருவன் சமிந்த ரணசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-07-06
2025 ஆம் ஆண்டு மற்றும் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் அரசாங்க நிதி செயல்திறன், அரசாங்கத்தின் வருமான சேகரிப்பு, அரசாங்க செலவின முகாமைத்துவம், அரசாங்கத்தின் கடன் நிலைமை மற்றும் கொள்கை ரீதியான முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் அறிக்கை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர, அர்கம் இல்யாஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷண ராஜகருணா, திலின சமரகோன், நிமல் பலிஹேன, எம்.கே.எம். அஸ்லம், அஜித் அகலகட, சம்பிக்க ஹெட்டிஆரச்சி, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டதுடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாகவும் இணைந்துகொண்டார்.2025 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருவாய் ஈட்டல் மதிப்பிடப்பட்ட இலக்குகளை மீறி சாதனை முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதாகவும், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவை தங்களது வருவாய் இலக்குகளை வெற்றிகரமாக எட்டியுள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிற்கு அறிவித்தனர். அத்துடன், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலும் வருவாய் சேகரிப்பு எதிர்பார்க்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.அரசாங்கத்தின் செலவினங்கள் குறித்து ஆராயப்பட்டபோது, சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகள், ஓய்வூதியங்கள், சுகாதாரத் துறைக்கான செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக ஓய்வூதியத் திட்டத்தின் நீண்டகால நிதி நிலைத்தன்மை தொடர்பில் கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் குழு வலியுறுத்தியது. அதேவேளை, மூலதனச் செலவினங்களின் கீழ் வீதி அபிவிருத்திக்காக கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதும் இங்கு வெளிப்படுத்தப்பட்டது.பொதுப் படுகடன் முகாமைத்துவம், கடன் சேவைச் செலவுகள், வெளிநாட்டு நாணயக் கையிருப்பைப் பேணுதல் மற்றும் வட்டி விகிதங்களின் தாக்கம் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.மதுவரித் திணைக்களத்தின் டிஜிட்டல் ஸ்டிக்கர் திட்டத்தின் செலவினம் மற்றும் அதன் வெளிப்படைத்தன்மை குறித்தும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டதுடன், எதிர்கால கொள்முதல் நடைமுறைகள் அதிக வெளிப்படைத்தன்மையுடனும் செலவுத் திறனை உறுதிப்படுத்தும் வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 2025–2026 காலப்பகுதிக்கான முன்னேற்றமும் ஆராயப்பட்டது. இதன்போது RAMIS முறைமையை மேலும் மேம்படுத்துதல், வரி செலுத்துவோருக்காக பயனாளர்களுக்கு நட்பான இணையத்தளத்தையும் கையடக்கத் தொலைபேசி செயலியையும் அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இலங்கை சுங்கத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலில், வாகனங்களுக்கான கடன் உறுதிப்படுத்தல் கடிதங்களை திறப்பதில் காணப்படும் எல்லை தாண்டிய விதிமுறைகள் ஏற்பட்டதன் காரணமாக, இன்னும் விடுவிக்கப்படாத பல வாகனங்கள் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. எனவே, தாமதக் கட்டணங்களை அறவிட்டு அல்லது பொருத்தமான தீர்வொன்றை வகுத்து, அவ்வாகனங்களை விரைவாக துறைமுகத்திலிருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குழு வலியுறுத்தியது.வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகளவான வரிகள் தொடர்பிலும் குழு உறுப்பினர்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர். மின்சார மற்றும் கலப்பு வலுசக்தி வாகனங்களுக்கு அவற்றின் விலையை அடிப்படையாகக் கொண்டு வரி விதிப்பதன் மூலம் வாகனங்களின் விலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. மேலும், இவ்வகை வாகனங்களின் எரிபொருள் திறனையும் வரிக் கொள்கைகளை வடிவமைக்கும் போது கருத்தில் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.அரச வருவாய் வளர்ச்சி நேர்மறையான முன்னேற்றத்தைக் காட்டினாலும், ஓய்வூதியச் செலவுகள், அரச கடன் மற்றும் தொடர்ச்சியான மீண்டெழும் செலவினங்களைக் கட்டுப்படுத்த நீண்டகால கட்டமைப்பு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம் என குழு வலியுறுத்தியது. மேலும், அரச நிதி முகாமைத்துவத்தில் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் இலத்திரனியல் மயமாக்கலை மேலும் வலுப்படுத்துவதன் மூலமே நாட்டின் நிதி நிலைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும் எனவும் குழு சுட்டிக்காட்டியது.