logo

02

E   |   සි   |  

2022-07-07

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

விலைகள் அதிகரிப்பதால் போட்டி நிறைந்த இன்றைய சந்தையில் போக்குவரத்து சபையின் பேரூந்துகளுக்கு டயர்களை கொள்வனவு செய்வதில் சிக்கல்கள் காணப்படுவதாக கோபா குழுவில் புலப்பட்டது

  • இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 160 ரயில் பெட்டிகளில் 103 பெட்டிகள் இன்னமும் பயன்படுத்தப்படவில்லை
  • சில தனியார் பேரூந்துகளுக்காக வழங்கப்பட்ட டீசல்கள் அதிக விலையில் மீள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டு

 

விலைகள் அதிகரிப்பதால் போட்டி நிறைந்த தற்போதைய சந்தையில் இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்துகளுக்கு டயர் உள்ளிட்ட ஏனைய உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்வதில் சிக்கல்கள் நிலவுவது தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் புலப்பட்டது.

நாட்டில் தற்பொழுது நிலவும் நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையில் பொது மக்களுக்கு வினைத்திறனான முறையில் போக்குவரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலவரம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு  அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் (05) கூடியபோதே இந்தத் தகவல்கள் வெளிப்பட்டன.

அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் அதிகாரிகள் குழுவிற்கு விளக்கமளித்தனர். பயன்பாட்டில் உள்ள பேரூந்துகளின் தரம் மற்றும் அவற்றை இயக்குவதில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து குழுவின் உறுப்பினர்கள் கேட்டறிந்துகொண்டனர். போட்டி நிறைந்த இன்றைய சந்தையில் பேரூந்துகளுக்குத் தேவையான உதிரிப்பாகங்களைப் பெற்றுக் கொள்வது சிக்கல் நிறைந்தது என வருகை தந்திருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றுக்கான கேள்விப் பத்திரங்களைக் கோரி அவற்றின் ஊடாக கொள்முதல் செயற்பாடுகளை மேற்கொள்வதில் சிக்கல் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அரசின் போக்குவரத்து சேவையை மேலும் விஸ்தரிக்கவேண்டியிருக்கின்றபோதும், தற்பொழுது காணப்படும் சூழ்நிலையின் கீழ் விலை அதிகரிப்புக் காணப்படுவதால் உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், 2017ஆம் ஆண்டு இந்தியாவின் கடன் மானியத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டிருந்த புகையிரதப் பெட்டிகள் பல வருடங்கள் காலதாமதமாகி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. விசேடமாக கொள்வனவு செய்யப்பட்ட 160 புகையிரதப் பெட்டிகளில் 103 பெட்டிகள் இதுவரை பயன்படுத்தப்படாமை குறித்து கோபா குழு, அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இந்நாட்டில் வக்கியூம் பிரேக் முறைமை பயன்படுத்தப்படுகின்றபோதும், சில பெட்டிகள் எயார் பிரேக் முறைமையைக் கொண்டிருப்பது இதற்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர். பொருத்தமில்லாத பிரேக் முறைமையைக் கொண்ட புகையிரதப் பெட்டிகளைக் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார் என்பது தொடர்பில் கோபா குழுவின் அதிகாரிகள் வினவினர். இதற்கமைய அதிகாரிகள் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என இங்கு குறிப்பிடப்பட்டது.

அதேநேரம், தற்போதைய நாட்களில் இலங்கைப் போக்குவரத்து சபையின் டிப்போக்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தனியார் பேரூந்துகளுக்கு டீசல் வழங்குவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இவ்வாறு டீசலைப் பெற்றுக்கொண்ட சில தனியார் பேரூந்துகள் அவற்றை வெளியாருக்கு அதிக விலையில் விற்பனை செய்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பேரூந்துகளை வீதியில் சேவைக்கு ஈடுபடுத்தி ஈட்டும் வருமானத்தைவிட டீசல் விற்பனை மூலம் பேரூந்து உரிமையாளர்கள் அதிக இலாபம் சம்பாதித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, இவ்வாறான நிலைமையக் கட்டுப்படுத்தி பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தடுக்க வேண்டும் எனவும், எரிபொருள்களை சேகரிக்கும் நோக்கில் பேரூந்துகள் செயற்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றும் குழு வலியுறுத்தியது. குறிப்பாக பேரூந்துகளைக் கண்காணிப்பதற்கு ஜீ.பீ.எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதற்கு மேலதிகமாக, 2017 ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் தயாரிக்கப்பட்ட இலங்கை புகையிரத பிரதான திட்டத்துக்கு 1,056,555 அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளபோதும் இந்த நிதியுதவி அமைச்சின் வரவுசெலவுத்திட்டத்தில் அல்லது நிதி அறிக்கையில் உள்ளடக்கப்படாமை இங்கு புலப்பட்டது. இதற்கமைய இது தொடர்பில் அறிக்கையொன்றை கோபா குழுவுக்கு வழங்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது. அத்துடன், புகையிரதப் போக்குவரத்துக் கட்டமைப்பை புதிய தொழில்நுட்பத்துடன் இணைப்பது பற்றியும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

கோபா குழுவின் உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ லசந்த அழகியவன்ன, கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாந்துபுள்ளே, கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ துமிந்த திஸாநாயக்க, கௌரவ பீ.வை.ஜீ ரத்னசேகர மற்றும் கௌரவ (கலாநிதி) ஹரிணி அமரசூரிய ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

1 2

3 4

 



தொடர்புடைய செய்திகள்

2026-07-16

கல்விப் பேரவையை நிறுவுவது தொடர்பான உபகுழு அறிக்கைக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம்

இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை, கல்விப் பேரவையை நிறுவுவது தொடர்பான உபகுழு அங்கீகரித்ததைத் தொடர்ந்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அண்மையில் பாராளுமன்றத்தில் ஆராய்ந்து அங்கீகரித்தது.கௌரவ பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டது.உபகுழுவின் தலைவர் கௌரவ பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க அவர்கள் குறித்த அறிக்கையை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பித்தார். இலங்கையில் கல்விப் பேரவையை நிறுவுவதற்கான பரிந்துரைகளை முன்வைக்கும் வகையில் அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து, அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக குழு உறுப்பினர்களின் கருத்துகளும் யோசனைகளும் பரிசீலிக்கப்பட்டன. விரிவான கலந்துரையாடலின் பின்னர், குறித்த அறிக்கைக்கு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-07-16

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் 2021–2024 கணக்காய்வாளர் தலைமையதிபதியின் யகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து “கோபா” குழுவில் விரிவாக ஆராயப்பட்டது

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் 2021 முதல் 2024 வரையிலான ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கைகள் மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) விரிவாக ஆராயப்பட்டது.அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களின் தலைமையில் கூடியபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.பரீட்சைகள் நடத்தும் நடைமுறை, பெறுபேறுகளை வெளியிடும் செயல்முறை, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புக்களின் பயன்பாடு, மனிதவள முகாமைத்துவம், கொள்முதல் நடைமுறைகள், வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல், கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இக்குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.மேலும், பரீட்சைகள் திணைக்களத்தின் தற்போதைய செயலாற்றுகை, சேவையின் திறன்களை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் அதிகாரிகள் குழுவிற்கு விளக்கமளித்தனர்.கணக்காய்வாளர் தலைமையதிபதியின் பரிந்துரைகளுக்கமைய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடிய குழு, எஞ்சியுள்ள பரிந்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியது.இக்கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பிரதியமைச்சர்களான நலீன் ஹேவகே, சுகத் திலகரத்ன ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சானக மாதுகொட, கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், ஹெக்டர் அப்புஹாமி, டி. கே. ஜயசுந்தர, சந்தன சூரியஆராச்சி, லால் பிரேமநாத், ருவன் திலக ஜயக்கொடி, வைத்தியர் ஜனக சேனாரத்ன மற்றும் சுனில் ரத்னசிறி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-07-16

தேசிய இளைஞர் கொள்கை வரைபு தொடர்பாக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் கவனம்

தேசிய இளைஞர் கொள்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைபு குறித்து இளைஞர்களின் கருத்துகளையும் யோசனைகளையும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவம் பற்றி இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் ஆராயப்பட்டது.இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் ஆறாவது கூட்டம் கௌரவ பிரதியமைச்சர் எரங்க குணசேகர அவர்களின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இந்த விடயம் ஆராயப்பட்டது.தேசிய இளைஞர் கொள்கை வரைவு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இளைஞர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கொள்கையில் மேலும் பயனுள்ள வகையில் உள்ளடக்கிக் கொள்வதற்காக ஒன்றிய உறுப்பினர்களின் கருத்துகள் மற்றும் யோசனைகளைப் பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தின் குரலை கொள்கை உருவாக்கும் செயல்முறையில் மேலும் பயனுள்ள வகையில் இணைத்துக்கொள்வதற்காக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் தொடர்ச்சியாக செயல்பட்டு வருவதாகவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-07-16

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பது மற்றும் நிர்வாக மறுசீரமைப்புகளை துரிதப்படுத்துவது தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது

இலங்கையின் சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசல்களைக் குறைப்பது, நிர்வாக செயற்திறனை மேம்படுத்துவது மற்றும் சிறைச்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு நீண்டகாலத் தீர்வுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக்  குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (டாக்டர்) நஜித் இந்திக தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய  ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவிலேயே இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது.இக்கூட்டத்தில் சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்துதல், புதிய கட்டடங்களை நிர்மாணித்தல், தற்போதுள்ள வசதிகளை மறுசீரமைத்தல், சிறைச்சாலைத் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களைப் நிரப்ப வேண்டியதன் அவசியம் மற்றும் கைதிகளை திறம்பட நிர்வகிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில்  கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.குறிப்பாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படும் மனித வளப் பற்றாக்குறையை குறைப்பதற்காக புதிய ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ளுதல், சேவைத் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் ஆட்சேர்ப்பு நடைமுறைகளை திருத்தியமைத்தல் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளின் சேவை நிலைமைகளை மேம்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் அரசாங்க இரசாயணப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கைகளைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் தாமதத்தை குறைப்பதற்காக, குறித்த திணைக்களத்தின் திறனை அதிகரித்தல், நவீன தொழில்நுட்ப உபகரணங்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.சிறைச்சாலைகளில் காணப்படும் நெரிசலைக் கட்டுப்படுத்துவது வெறுமனே நிர்வாக ரீதியான விடயமாக அல்லாமல், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதி செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் குழு சுட்டிக்காட்டியது.அத்துடன், நீதிமன்றம், ஸ்ரீலங்கா பொலிஸ், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களுக்கு இடையில் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் பிரதி குழுக்களின் தலைவர் கௌரவ ஹேமாலி வீரசேகர மற்றும் குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தர்மப்பிரிய விஜேசிங்க, எம்.கே.எம். அஸ்லம், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி. சூரியபண்டார, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மேலும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர, அமிர்தநாதன் அடைக்கலநாதன் மற்றும் சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks