இன்று, ஜூன் 30, 2022 அன்று, தேசிய திட்டங்கள் மற்றும் உத்திகள் மற்றும் தேசிய மற்றும் உலகளாவிய மட்டங்களில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதில் பாராளுமன்றத்தின் பங்கை அங்கீகரிக்கும் சர்வதேச பாராளுமன்றவாத தினத்தைக் கொண்டாடுகின்றோம். இந்த நாள் முதன்முதலில் ஐ.நா பொதுச் சபையால் 2018 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்டது, இது தேசிய பாராளுமன்றங்களின் உலகளாவிய அமைப்பின் (I.P.U) 129 வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது. 1889 ஆம் ஆண்டில் இதே தினத்தில் முதன்முதலில் நிறுவப்பட்ட I.P.U ஆனது, ‘ஜனநாயக ஆட்சி, மனித பிரதிநிதித்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் ஒரு சமூகத்தின் சிவில் அபிலாஷைகளை’ மேம்படுத்துவதற்காக செயல்படும் ஒரு உலகளாவிய அமைப்பாகும்.
இந்தத் தினமானது அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான தரநிலையாக பாராளுமன்ற ஜனநாயகத்தின் தனித்துவமான மற்றும் நீடித்த அமைப்பை மேலும் உறுதிப்படுத்துகின்றது. கடந்த ஆண்டு, 2021 இல், இந்தத் தினத்தில் பாராளுமன்றமானது “இளைஞர் வலுவூட்டல்” மீது கவனம் செலுத்தியது, அதேசமயம் 2022 ஆம் ஆண்டின் சர்வதேச பாராளுமன்றவாத தினத்தின் கருப்பொருள் “பொதுமக்கள் ஈடுபாடு” என்பதாகும். வெளிப்படையாக, ‘பார்லிமென்ட்’ என்ற வார்த்தை பிரெஞ்சு வார்த்தையான ‘பார்லர்’ என்பதிலிருந்து உருவானது, அதாவது ‘பேசுவது’ என்று பொருட்படுகின்றது. இவ்வாறு, பொது உரையாடல் மற்றும் ஈடுபாடு ஆகியவை பாராளுமன்ற ஆட்சி முறையின் அடித்தளத்தை அமைக்கின்றன.
ஜனநாயக செயற்பாட்டில் பொதுமக்களின் ஈடுபாடு எல்லா நேரத்திலும் உச்சத்தில் இருக்கும் ஒரு தருணத்தில், சர்வதேச பாராளுமன்ற தினத்திற்கான கருப்பொருள் சமூகத்தில் தற்போதைய ஜனநாயக மற்றும் பொருளாதார உரையாடலுக்கு மிகவும் பொருத்தமானது.
“பாராளுமன்ற முறைமையானது மக்களின் இறையாண்மையின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. எனவே, பாராளுமன்ற முறைமையின் வெற்றியானது ஜனநாயக செயற்பாட்டில் பொதுமக்கள் ஈடுபடுவதையும், அத்தகைய பொது ஈடுபாட்டிற்கு பாராளுமன்ற அமைப்பானது எவ்வளவு சிறப்பாக பதிலளிக்கின்றது என்பதையும் பொறுத்தது.” என பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உப தலைவர் திருமதி ரோஹினி குமாரி விஜேரத்ன குறிப்பிட்டார்.
“இலங்கைப் பாராளுமன்றத்தின் மீதும், மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் மீதும் பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர் என்பதைப் பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாம் மறந்துவிடக் கூடாது. இலங்கைப் பாராளுமன்றமானது அதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றைத் திறம்பட உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டது என்ற வலுவான வாதம் முன்வைக்கப்படுகின்றது. அதன் முக்கிய நோக்கங்கள்: அனைத்து மக்களுக்கும், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகள் மற்றும் சட்டங்களை வகுத்து அவற்றை செயற்படுத்துதல். அந்த முடிவை அடைந்து கொள்வதற்கு, நாம் பொது உரையாடல் மற்றும் ஈடுபாட்டைப் பயன்படுத்த வேண்டும்.”, என்றார் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் கௌரவ. கலாநிதி. ஹரிணி அமரசூரிய.
பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் கௌரவ. திருமதி மஞ்சுளா திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “திறமையுடனும் வெற்றியுடனும் இருக்க, பாராளுமன்ற அமைப்பு பொதுமக்கள் ஈடுபாட்டை ஊக்குவிக்க வேண்டும், மேலும் பொது மக்களின் தேவைகளை நன்கு புரிந்துகொள்வதற்கும் மற்றும் அவற்றுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய கொள்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டார்.
எந்தவொரு ஜனநாயகத்தினதும் அடிப்படையாகப் பாராளுமன்றம் உள்ளது. எனவே குரல் அற்றவர்களுக்கு குரல் கொடுக்கும் அதன் அடிப்படை வகிபங்கை அது நிறைவேற்ற வேண்டும். நாட்டினுடைய முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கு நிலையான மற்றும் முக்கியமான சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதல், இயற்றுதல், மற்றும் அவை செயற்படுத்தப்படுவதை மேற்பார்வை செய்தல் ஆகியவை பாராளுமன்றத்தின் முக்கிய பொறுப்புகளில் அடங்கும். நாட்டின் நிறைவேற்று அதிகாரத்தையோ அல்லது அரசாங்கத்தையோ பொறுப்புக்கூற வைக்க வேண்டிய கடமையும் பாராளுமன்றத்திற்கு உள்ளது. அதன்படி, பொதுமக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நிறைவேற்று அதிகாரி வைத்திருக்கும் அதிகாரத்தை "சமநிலைப்படுத்த" ஒரு "சரிபார்ப்பாகவும்" செயல்படும் பாத்திரத்தை நிறைவேற்ற வேண்டும். அரசாங்க செலவினங்களுக்கான வரவு செலவுத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் பொறுப்பை பாராளுமன்றம் கொண்டிருப்பதால், அரசாங்க செலவினங்களில் "சரிபார்ப்புக்கள்" மற்றும் “சமநிலைப்படுத்தல்கள்” என்பவற்றைப் பாராளுமன்றம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறாக, இந்த பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கை பாராளுமன்றம் அத்தகைய பாத்திரங்களையும் பொறுப்புகளையும் ஆற்றுவதற்கும், திறம்பட நிறைவேற்றுவதற்கும் ஒரு முக்கிய வகிபங்கினைக் கொண்டுள்ளது. அதை அர்த்தமுள்ள வகையில் செய்ய, பொது மக்கள் ஈடுபாடு அவசியமானதாகும்.
“பாராளுமன்ற அமைப்பு ஒன்றின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தை நினைவுகூருவதற்கு இந்த நாளை நாம் ஒரு சந்தர்ப்பமாக மாற்ற வேண்டும் என்று நான் நம்புகின்றேன். பொதுச் சொற்பொழிவுகளால் பெறப்பட்ட கருத்துக்களைப் பயன்படுத்தி பாராளுமன்றம் சுய மதிப்பீடு செய்யக்கூடிய ஒரு செயன்முறையை உணர்ந்து கொள்வதற்கான உரையாடலைத் தொடங்குவதற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்திற்குப் பங்கு உள்ளது என்பதை அது அங்கீகரிக்கின்றது. இது பாராளுமன்றம் அடைந்துள்ள முன்னேற்றத்தை அளவிடுவதற்கும், சவால்களை அடையாளங் கண்டு, மக்களின் குரல்களின் பிரதிநிதியாக இருக்க, அத்தகைய சவால்களை சமாளிப்பதற்கான உத்திகள் மற்றும் வழிமுறைகளை வகுப்பதற்கும் இது இன்றியமையாததாக இருக்கும்” என்றார் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவி டாக்டர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே.
“நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் போது, எமது பாராளுமன்ற முறைமை அதன் நோக்கத்தை உணரத் தவறினால், எமது பாராளுமன்றத்தின் நடைமுறைகளை நாம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். எனவே, இலங்கைப் பாராளுமன்றத்தின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கு பயனுள்ள மூலோபாயத்தை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த தினம் பயன்படுத்தப்படும் என நான் நம்புகின்றேன்.” என பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் கௌரவ. தலதா அத்துகோரள தெரிவித்தார்.
திருமதி டயானா கமகே, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் கூறுகையில், “இந்த தினத்தில், இலங்கை மக்களுக்கு, குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு குரல் கொடுப்பதாகவும், நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை மக்களின் தற்போதைய தேவைகளைப் பிரதிபலிக்கும் பொறிமுறைகளை உருவாக்குவதிலும், மற்றும் சட்டங்களை வகுப்பதிலும் எனது பங்கை ஆற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.” எனக் குறிப்பிட்டார்.
பாராளுமன்றமானது செயற்படும் ஜனநாயகத்தின் அடித்தளமாகும். இலங்கையில், அரசியற் பிரதிநிதித்துவத்தின் தரத்தை, அதாவது பாலின சமத்துவம் மற்றும் சமூக உள்ளடக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு எந்த முயற்சிகளையும் விட்டுவிடாது, அனைத்து இலங்கையர்களுக்கும் இந்த இலக்கை நனவாக்குவோம்.
2026-11-16
கொரியக் குடியரசின் தேசிய சட்டமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுவர், சனத்தொகை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கொரிய பாராளுமன்ற லீக்கின் (CPE) தூதுக்குழுவினர் அண்மையில் இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களைச் சந்தித்தனர்.சுற்றுச்சூழல் மீள்திறன், சனத்தொகைக் கொள்கைகள், கல்வி மற்றும் பொருளாதாரப் பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.கொரிய தேசிய சட்டமன்றத்தின் புலனாய்வுக் குழுவின் தலைவரும், சிறுவர், சனத்தொகை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கொரிய பாராளுமன்ற லீக்கின் உப தலைவருமான கௌரவ லீ யாங்-சூ (Lee Yang-soo) தலைமையில் கொரியத் தூதுக்குழுவினர் வருகை தந்தனர். இத்தூதுக்குழுவில் குறித்த லீக்கின் உறுப்பினர் கௌரவ குவாக் சாங்-இயோன் (Kwak Sang-eon), கொரிய – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உப தலைவரான கௌரவ கிம் சோ-ஹீ (Kim So-hee) மற்றும் இலங்கைக்கான கொரியக் குடியரசின் தூதுவர் கௌரவ யூன்-ஜுங் கிம் (Youn-Jung Kim) ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்.1989 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட சிறுவர், சனத்தொகை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கொரிய பாராளுமன்ற லீக், காலநிலை மாற்றம், சனத்தொகை மற்றும் சிறுவர் நலன் தொடர்பான உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச பாராளுமன்ற ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது.2027 ஆம் ஆண்டில் இலங்கைக்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தியடைவதைக் கருத்திற்கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கான எதிர்பார்ப்பை இரு தரப்பினரும் இதன்போது வலியுறுத்தினர்.இலங்கையை அண்மையில் பாதித்த சீரற்ற காலநிலை நிலைமைகள் தொடர்பில் பிரதி சபாநாயகர் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக, கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் ஏற்பட்டுள்ள கணிசமான சேதங்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.அத்துடன், பிறப்பு வீதம் குறைவடைதல் மற்றும் வேகமாக முதியோர் எண்ணிக்கை அதிகரித்தல் உள்ளிட்ட இலங்கை எதிர்கொள்ளும் சனத்தொகை சார் சவால்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். இந்நிலைமைகள் எதிர்காலத்தில் தங்கியிருப்போர் விகிதம் மற்றும் தொழிலாளர் சக்தியில் கிடைப்பனவு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் இலவசக் கல்வி முறைமை மற்றும் அதனை மேலும் வலுப்படுத்துவதில் காணப்படும் சவால்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.கொரியக் குடியரசில் குறைவடைந்து வரும் பிறப்பு வீதத்தை எதிர்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கொரியப் பிரதிநிதிகள், புதிதாகத் திருமணமான தம்பதியினருக்கான குறைந்த வாடகை வீடமைப்புத் திட்டங்கள், குறைந்த வட்டி வீதத்திலான கடன்கள் மற்றும் வீடமைப்புக்கான ஊக்குவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு கொள்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.ஓய்வூதியப் பாதுகாப்பில் காணப்படும் இடைவெளிகளைக் குறைப்பதற்காக ஓய்வுபெறும் வயதெல்லையை 60 இலிருந்து 65 ஆக அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுகள் குறித்தும் தூதுக்குழுவினர் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்தும்போது இளைஞர் தலைமுறையினருக்குப் போதுமான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.பொருளாதார அபிவிருத்தியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பல வருடங்களாக ஈட்டப்பட்ட பொருளாதார முன்னேற்றத்திற்குப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.இலங்கையில் கொரியக் கலாசாரம், குறிப்பாக கொரிய பாப் இசை பிரபலமடைந்து வருவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும், தென்கொரியாவில் தொழில்புரியும் இலங்கை இளைஞர், யுவதிகளுக்குக் கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகளின் நன்மைகள் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர். இப்பயிற்சி வாய்ப்புகள் ஊடாக தொழில்சார் திறன்களை மேம்படுத்துவதுடன், இலங்கைக்கும் பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இதன்போது குறிப்பிடப்பட்டது.அடுத்த வருடம் தென்கொரியாவில் நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஆசிய – பசுபிக் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டில் (APPCED) கலந்துகொள்ளுமாறு இலங்கைப் பாராளுமன்றத்திற்குக் கொரியத் தூதுக்குழுவினர் அழைப்பு விடுத்தனர். குறித்த மாநாட்டில் பல நாடுகளின் சார்பில் கொரியா தலைமைத்துவத்தை வகிக்கவுள்ளது.அத்துடன், அடுத்த வருடம் ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேசக் கண்காட்சியில் கொரிய வர்த்தக நிறுவனங்களின் பங்கேற்பு குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
2026-11-16
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல்கள் நிலவிய காலப்பகுதியிலும் அதன் பின்னரும் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த 12,196 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளதாக கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.புனர்வாழ்வு செயற்பாட்டின் கீழ் ஆலோசனைச் சேவைகள், யோகா மற்றும் ஆன்மீக நிகழ்ச்சித்திட்டங்கள், அடிப்படைக் கல்வி மற்றும் மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றுவதற்கான வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகியன முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.அத்துடன், ஓவியம், இசை, நாடகம் மற்றும் அரங்கக் கலை உள்ளிட்ட அழகியல் கலை நிகழ்ச்சித்திட்டங்கள், வாகனச் செலுத்துநர் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சித்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அப்பயிற்சிகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் ஏனைய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.மேலும், அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் கடனுதவிகள், வீடுகள், தையல் இயந்திரங்கள், மீன்பிடி வலைகள், மிதிவண்டிகள், நீரிறைக்கும் இயந்திரங்கள், தச்சுத் தொழில் உபகரணங்கள், பதப்படுத்தும் உபகரணங்கள், விவசாய உபகரணங்கள், கால்நடைகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வழங்கிய பதிலளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026-11-16
தொண்டர் ஆசிரியர்கள் 4,700 பேரும் ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அவர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான சாத்தியமில்லை என கௌரவ கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.நாட்டின் பல்வேறு மாகாணங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் தற்போது தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றும் 4,700 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் உதவியாளர்களாக நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 2007.01.04 ஆம் திகதிய அமைச்சரவைப் பத்திர இலக்கம் 06/2282/229/085-II இன் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்தார்.ஆசிரியர் உதவியாளர்களாக மேல், மத்திய, தென், வடக்கு மற்றும் கிழக்கு, வடமேல், வடமத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள மேற்படி 4,700 தொண்டர் ஆசிரியர்களில் 462 பேரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
2026-11-14
ரயில்களில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கான நிலைபேறான தீர்வுகளை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ரயில்வே உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரயில்வே ஊழியர்களைத் தெளிவூட்டுதல், காட்டு யானைகளின் வாழ்விடங்களை முகாமைத்துவம் செய்தல் மற்றும் நவீன கண்காணிப்பு மற்றும் அடையாளம் காணும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றின் ஊடாக ரயில்களில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பதைக் குறைப்பதே இந்நடவடிக்கைகளின் நோக்கமாகும்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜயமஹவினால் வாய்மூல விடைக்காக முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குச் சுற்றாடல் அமைச்சர் கௌரவ வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி சமர்ப்பித்த எழுத்துமூலப் பதிலில் மேற்கண்ட விடயங்கள் தெரியவந்தன.பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலுக்கு அமைய, ரயில்வே திணைக்களத்தின் கிழக்கு ரயில் பாதையின் இருபுறங்களிலும் தெளிவாகப் பார்க்கக்கூடிய வகையிலும், சிறந்த முறையில் வேகத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய வகையிலும் மேம்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், கல்ஓயா சந்தியிலிருந்து ஹிங்குராங்கொட வரையிலும், கல்ஓயா சந்தியிலிருந்து கந்தளாய் வரையிலும் காட்டு யானைகள் ரயில் பாதையைக் கடக்கும் 27 கிலோமீற்றர் நீளமான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் காட்டு யானைகள் இலகுவாகப் பயணிப்பதற்கு ஏதுவாக, ரயில் பாதையின் தண்டவாளத் தூண்களுக்கு இடையிலான இடைவெளிகளை நிரப்பும் வகையில் 800 கொங்கிறீட் கற்துண்டுகள் பதிக்கும் பணி நிறைவுசெய்யப்பட்டுள்ளது.ரயில் பாதையின் சில பகுதிகளிலும் வளைவுகளிலும் நடமாடும் காட்டு யானைகளை ரயில் சாரதிகளால் அவதானிக்க முடியாத நிலை காணப்படுவதால், அத்தகைய இடங்களில் 10 முதல் 20 மீற்றர் வரையான தூரத்திற்கு அடர்ந்த புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் 20 கிலோமீற்றர் தூரத்திலுள்ள பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டுள்ளன.ரயில்வே திணைக்களத்தின் சாரதிகள், ரயில் நிலைய அதிபர்கள், ரயில் பாதைகளுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் மற்றும் ரயில் சாரதிகளின் உதவியாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் 2025.05.16 மற்றும் 17ஆம் திகதிகளில் நடத்தப்பட்டுள்ளன.ஹபரணை ரயில் நிலையத்தைக் கடந்து கந்தளாய் நோக்கிப் பயணிக்கும்போது அமைந்துள்ள வனப் பாதுகாப்பு ஒதுக்குப் பகுதிக்குள், ரயில் பாதையிலிருந்து கணிசமான தூரத்தில் நீரைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இரண்டு குளங்களை அமைத்தல் மற்றும் அவற்றைப் போஷிப்பதற்கான நடவடிக்கைகளுக்காக 25.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.கல்ஓயா மற்றும் மின்னேரியவுக்கு இடையிலான 141ஆம் இடத்தில், காசிக்கோட்டை ரயில் பாதையைக் கடந்து யானைகள் பயணிக்கும் பகுதியைக் கண்காணிப்பதற்காக CCTV கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை அனுராதபுரம் கட்டுப்பாட்டு அறையினூடாகக் கண்காணிக்கப்படுகின்றன.மேலும், காட்டு யானைகளை அடையாளம் காண்பதற்காக ரயில்களில் வெப்ப உணர்திறன் கமராக்களை (Thermal Detector Cameras) பொருத்தும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை ரயில்வே திணைக்களம் மற்றும் ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றினால் தொடர்ச்சியான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.ரயில்களில் மோதுண்டு 2020ஆம் ஆண்டு முதல் 2026.10.12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 81 யானைகள் உயிரிழந்துள்ளதாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.