பார்க்க

E   |   සි   |  

2022-04-25

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கான கொள்முதல் செயன்முறையை மூன்று மாதங்கள் ஒத்திவைக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு கோப் குழு பரிந்துரை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் 2022-2025 காலப் பகுதியில் 21 விமானங்களை குத்தகைக்குப் பெற்றுக் கொள்வது தொடர்பான கொள்முதல் செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் (பேராசிரியர்) கௌரவ சரித ஹேரத், இன்று (25) பரிந்துரைத்தார். இதற்கமைய தற்பொழுது காணப்படும் பொருளாதார நிலைமையின் கீழ் முழுமையான செயற்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறும், உரிய கொள்முதல் செயல்முறை உரிய  நடைமுறைகளுக்கு இணங்குகிறதா என்பது பற்றி ஆராயுமாறும் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். கொள்முதல் வழிகாட்டலை உரிய முறையில் தயாரித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட கொள்முதல் செயன்முறையை அமைச்சரின் ஊடாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதனை அமைச்சரவை முடிவாக இதனை முன்னெடுக்குமாறும் கோப் தலைவர் இங்கு பரிந்துரைத்தார்.

விமானங்களின் சேவைக்காலம் முடிவடைந்ததும் அவற்றுக்காக விமானங்களை மாற்றீடு செய்தல் விமான சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அவசியமான நடைமுறை என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இருந்தபோதும் நாட்டின் நெருக்கடி நிலைமை காணப்படுவதால் இது குறித்து அதிக கவனம் செலுத்தி உரிய தேவைகளைப் பூர்த்தி செய்வது முக்கியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்களை குத்தகைக்கு எடுப்பது தொடர்பில் ஏற்பட்ட கருத்தாடலைத் தொடர்ந்து இதுபற்றி ஆராய்வற்கு இந்நிறுவனம் இன்று (25) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கன் விமான சேவையில் தற்பொழுது காணப்படும் 24 விமானங்களில் எண்ணிக்கை சில காலங்களில் குறைவடையும் என்றும், விமானங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியாது. இதற்கு சிறிது காலம் எடுக்கும் என்பதால் அதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்து விளம்பரத்தைப் பிரசுரித்திருந்ததாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக பத்திரகே மற்றும் அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கமைய சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு, இந்த செயல்முறை 6-12 மாதங்களுக்கு இடையில் எடுக்கும், மேலும் இந்த நடவடிக்கைகள் அமைச்சின் ஊடாக மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படும் என்று பத்திரகே கூறினார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை மேம்படுத்துவதற்கு நாட்டின் நிர்வாகத்தில் உயர் அனுபவம் கொண்ட நிபுணர்கள் குழுவின் முயற்சிகளை கோப் குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பாரியளவில் பணியாளர்களின் கொடுப்பனவைக் குறைத்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய விமான சேவையின் தலைவர், நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு ஆற்றிய பங்களிப்பையும் அவர் தெரிவித்தார்.

இன்றைய கூட்டத்தில் அமைச்சர் கௌரவ நாளக கொடஹேவா, இராஜாங்க அமைச்சர்களான கௌரவ டி.வி.சானக்க, கௌரவ இந்திக அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மஹிந்த அமரவீர, கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, கௌரவ (கலாநிதி) ஹர்ஷ டி சில்வா, கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ.எஸ்.எம் மரிக்கார்,  கௌரவ மதுர விதானகே, கௌரவ பிரேம்நாத் சி தொலவத்த, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தலைவர் அசோக் பத்திரகே மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1 2

34

56



தொடர்புடைய செய்திகள்

2026-11-18

விவசாயத் திணைக்களத்தின் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத நான்கு முற்பணக் கணக்குகளின் செயற்பாட்டு நட்டங்களை நீக்குவதற்கு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் அனுமதி

விவசாயத் திணைக்களத்துடன் தொடர்புடைய நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத நான்கு முற்பணக் கணக்குகளில் காணப்படும் செயற்பாட்டு நட்டங்களை நீக்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 17) பாராளுமன்றத்தில் கூடியபோதே இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டது.அதன்படி, 1996ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்ட உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை விரிவாக்கத் திட்டத்திற்குரிய முற்பணக் கணக்கில் காணப்படும் 23.97 மில்லியன் ரூபா நட்டம், வெலிசர விவசாயப் பணிமனையை நடத்துவதற்கான முற்பணக் கணக்கில் காணப்படும் 5 மில்லியன் ரூபா நட்டம், விவசாயப் பழுதுபார்ப்புப் பணிமனை முற்பணக் கணக்கில் காணப்படும் 35.7 மில்லியன் ரூபா நட்டம் மற்றும் நாரஹேன்பிட்டிய விவசாய மத்திய களஞ்சியசாலை தொடர்பான முற்பணக் கணக்கில் காணப்படும் 421,884 ரூபா நட்டம் ஆகியவற்றைத் தீர்ப்பது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.இந்தக் கணக்குகளில் நீண்டகாலமாக நிலவிவரும் நட்டங்கள் மற்றும் கணக்குகளின் இருப்புத் தொகைகளில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த குழு, குறித்த கணக்குகளில் காணப்படும் நட்டங்களை நீக்குவதற்கும் இருப்புத் தொகைகளில் காணப்படும் வேறுபாடுகளைத் திருத்துவதற்கும் இணக்கம் தெரிவித்தது.மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான கணக்கியல் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முறையான கணக்குகளைப் பேணுதல், உரிய கணக்காய்வு நடைமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் நிதி முகாமைத்துவத்தைக் கட்டுப்பாட்டுடன் வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, ஹெக்டர் அப்புஹாமி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சுசந்த குமார நவரத்ன, லால் பிரேமநாத், ஓஷானி உமங்கா, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, கவீந்திரன் கோடீஸ்வரன், சுனில் ரத்னசிறி மற்றும் ருவன்திலக ஜயக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-11-18

கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தின் நிதி நெருக்கடிக்குத் தீர்வுகாண வைப்பாளர்களின் பணத்தை மீளச் செலுத்துவதற்கான பொறிமுறையைத் தயாரிப்பது தொடர்பில் கோபா உபகுழுவில் அவதானம்

கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் வைப்பாளர்களின் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட கூட்டுறவுத் துறையில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பில் ஆராய்வதற்கான உபகுழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடியின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தின் முகாமைத்துவத்தின் பலவீனங்கள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், உரிய அனுமதியின்றி சங்கத்தின் நிதி தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டமையால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்த முதலீடுகள் காரணமாக உறுப்பினர்கள் மற்றும் வெளிப்புற வைப்பாளர்களின் வைப்புப் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது.மேலும், கூட்டுறவுத் திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகள், சங்கத்தின் சொத்துக்களைத் தீர்ப்பதில் உள்ள சிக்கல்கள், நீதிமன்றத் தடையுத்தரவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் பணத்தை மீள வழங்குவதற்காக, சங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மதிப்பீடு செய்து அவற்றை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல், சொத்துக்களை அகற்றுவதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவுகளை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தற்போது கையிருப்பில் உள்ள நிதியை வைப்பாளர்களிடையே நியாயமான அடிப்படையில் பகிர்ந்தளித்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்படாத முதலீடுகளை மேற்கொண்டமைக்குப் பொறுப்பான முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களிடமிருந்து அதற்கான நட்டஈட்டுத் தொகையை அறவிடுதல், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் நிறைவு செய்யப்படாத திட்டங்களைப் பூர்த்தி செய்து அவற்றின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் முழு வைப்புத் தொகையையும் மீளச் செலுத்துவதற்கான தெளிவானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான பொறிமுறையொன்றை முன்வைக்க வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அத்துடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மேல் மாகாண மற்றும் கம்பஹா மாவட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்பட்டது.இந்தக் கூட்டத்தில் உபகுழுவின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, டீ. கே. ஜயசுந்தர மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-11-17

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பல முக்கிய நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயம்

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பரிணாமம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழ் இயங்கும் பல நிறுவனங்களுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டது.இதற்கமைய, குழுவினர் இன்று (நவ. 17) இலங்கை நானோ தொழில்நுட்ப நிறுவனம் (SINTEC) மற்றும் இலங்கை உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) ஆகிய நிறுவனங்களுக்கு விஜயம் செய்து அவற்றின் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.2025/2026 ஆம் ஆண்டுகளுக்கான குறித்த நிறுவனங்களின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல், 2027 ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டுத் திட்டத்தைப் பரிசீலித்தல் மற்றும் நிறுவன வளாகங்களில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அவதானித்தல் ஆகியன இந்த விஜயத்தின் நோக்கங்களாகும்.குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜனக சேனாரத்ன தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கண்காணிப்பு விஜயத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான தனுர திசாநாயக்க, லசித் பாஷண கமகே மற்றும் சதுர கலப்பத்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


2026-11-17

ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் மற்றும் சேவைப் பிரமாணக் குறிப்புத் திருத்தங்கள் தொடர்பில் பாராளுமன்ற உபகுழுவில் தொடர்ந்தும் கலந்துரையாடல்

ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில், கல்வி, தொழிற்படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உபகுழுவில் மேலும் கலந்துரையாடப்பட்டது.குறித்த உபகுழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இக்கலந்துரையாடலில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.ஆசிரியர் சேவையைச் சேர்ந்த அதிகாரிகள் அதிபர் சேவைக்கு நியமிக்கப்படும்போது ஏற்படும் சம்பள அதிகரிப்பு இடைவெளிகள் மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஒரு சேவைக்கு மாத்திரம் தனித்தனியாக சம்பளத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம், ஒட்டுமொத்த அரச சேவையின் ஏனைய சேவைகளுடன் ஒப்பிடுகையில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.சேவைப் பிரமாணக் குறிப்புகள் மற்றும் ஆட்சேர்ப்புக்கான வயதெல்லைகளைத் திருத்துதல், அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள், பாடசாலை வகைப்படுத்தல் மற்றும் வெற்றிடங்களை நிரப்புதல், முறையான இடமாற்றக் கொள்கை, ஆசிரியர் மற்றும் அதிபர் உத்தியோகபூர்வ இல்லங்களைப் புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் உபகுழு விரிவாகக் கலந்துரையாடியது.இவ்விடயம் தொடர்பில் மேலும் கலந்துரையாடிய பின்னர், முன்மொழிவுகளை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அபூபக்கர் அத்தம்பாவ, சுகத் வசந்த. டி சில்வா, சுஜீவ திசாநாயக்க மற்றும் சானக மாதுகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks