பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பாராளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி 08ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை கூடவுள்ளது. கடந்த ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதற்கமைய பெப்ரவரி 08ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை தினமும் முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 08ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி மணிவரை 2015ஆம் ஆண்டு 05ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகளும், மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அன்றையதினம் அரசாங்கத்தின் தினப்பணிகளின் பின்னர் ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.
பெப்ரவரி 09ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 04.30 மணி வரை குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் என்பவற்றை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 10ஆம் திகதி மாகாணசபைகள் (முத்திரைத் தீர்வையைக் கைமாற்றுதல்) திருத்தச் சட்டமூலம், விசேட பண்டங்கள் மற்றும் சேவை வரிகள், பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம், 1969ஆம் ஆண்டு 01ஆம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
பெப்ரவரி 08ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை தினமும் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப் பகுதியில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதமும் இடம்பெறும்.
அதேநேரம், பெப்ரவரி 11ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தொடர்பான அனுதாபப் பிரரேரணை மீதான விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய அன்றையதினம் வாய்மூல விடைக்கான கேள்வி, ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்வி, சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை என்பவற்றுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.
2026-11-18
உள்நாட்டு மற்றும் மேலைத்தேய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்து, தொற்றா நோய்களுக்கான சிகிச்சை சேவைகளை ஆரோக்கிய ஸ்வஸ்த நிலையங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், காலி மாவட்டத்தின் மாபலகம ஆரோக்கிய ஸ்வஸ்த நிலையத்தில் இந்த ஒருங்கிணைந்த சிகிச்சை சேவை முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கௌரவ வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தசைகள், எலும்புகள் மற்றும் மூட்டுகள் தொடர்பான வலிகளை முகாமைத்துவம் செய்வதற்காக (Musculoskeletal Pain Management) உள்நாட்டு மற்றும் மேலைத்தேய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்த சிகிச்சைத் திட்டம் கடந்த சுமார் எட்டு மாதங்களாக இவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அவர்கள் வாய்மூல விடைக்காக முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசியக் கொள்கை மற்றும் மூலோபாயக் கட்டமைப்பு (2023–2033) ஊடாக, தொற்றா நோய்களுக்கான சேவைகளை வழங்குவதற்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் ஒரு பகுதியாக உள்நாட்டு மருத்துவத் துறை தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், நோயாளர் பராமரிப்புச் சேவைகள் மாகாண ஆயுர்வேத திணைக்களங்கள் மற்றும் மாகாண சுகாதாரத் திணைக்களங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுவதாகவும் வலியுறுத்தினார். இதன்போது நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், உடற்பருமன் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான நோய்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.அத்துடன், பார்கின்சனிசம் (Parkinsonism) நோய்க்கான பொதுவான ஆலோசனைகளையும் ஆதரவான சித்த மருத்துவ சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், மூளை முடக்குவாதம் (Cerebral Palsy) மற்றும் டவுன் சிண்ட்ரோம் (Down Syndrome) ஆகிய நிலைமைகளுக்கான ஆதரவான புனர்வாழ்வுத் திட்டங்களை மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் கீழுள்ள அனைத்து நிறுவனங்களினூடாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.மேலும், புற்றுநோயைப் பொறுத்தவரையில், புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து போஷாக்கு தொடர்பான ஆலோசனைகள், ஆதரவுப் பராமரிப்பு மற்றும் புனர்வாழ்வுச் சேவைகள் வழங்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.வயோதிப நோயாளர்கள் தொலைதூரப் பகுதிகளிலிருந்து சிகிச்சை பெறுவதற்காகப் பயணிப்பதைக் குறைக்கும் நோக்கில், பல்வேறு வழிமுறைகள் ஊடாக அவர்களுக்கான சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இதற்கமைய, மாகாண ஆயுர்வேத திணைக்களத்தின் கீழுள்ள அனைத்து சுகாதார நிறுவனங்களினூடாகவும், சில மாகாணங்களில் முதியோர் இல்லங்கள் மட்டத்திலும், சமூக அடிப்படையிலான மருத்துவச் சேவைகள் ஊடாகவும் இச்சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், சமூக மருத்துவ உத்தியோகத்தர்கள் (CMOs) ஊடாக கிராமிய மட்டத்திலும், சமூக சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் ஊடாகவும் வயோதிபர்களுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்புச் சேவைகள் வழங்கப்படுகின்றன.மாகாண மட்டத்தில் ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவ முறைகள் ஊடாக வயோதிபர் பராமரிப்புச் சேவைகள் வழங்கப்படுவதுடன், மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட பாரம்பரிய மருத்துவர்களும் பிரதேச செயலக மட்டத்திலும் மாகாண சபைகள் ஊடாகவும் இச்சேவைகளை வழங்கி வருகின்றனர்.மேலும், உள்நாட்டு மருத்துவ முறைகள் தொடர்பான தேசிய நிறுவனம் ஊடாக ஆறு மாகாணங்களில் வயோதிபர் பராமரிப்புச் சேவைகள் தொடர்பான பயிற்சித் திட்டங்கள் மாகாண மட்டத்தில் நடத்தப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
2026-11-16
கொரியக் குடியரசின் தேசிய சட்டமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுவர், சனத்தொகை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கொரிய பாராளுமன்ற லீக்கின் (CPE) தூதுக்குழுவினர் அண்மையில் இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி அவர்களைச் சந்தித்தனர்.சுற்றுச்சூழல் மீள்திறன், சனத்தொகைக் கொள்கைகள், கல்வி மற்றும் பொருளாதாரப் பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்பில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.கொரிய தேசிய சட்டமன்றத்தின் புலனாய்வுக் குழுவின் தலைவரும், சிறுவர், சனத்தொகை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கொரிய பாராளுமன்ற லீக்கின் உப தலைவருமான கௌரவ லீ யாங்-சூ (Lee Yang-soo) தலைமையில் கொரியத் தூதுக்குழுவினர் வருகை தந்தனர். இத்தூதுக்குழுவில் குறித்த லீக்கின் உறுப்பினர் கௌரவ குவாக் சாங்-இயோன் (Kwak Sang-eon), கொரிய – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உப தலைவரான கௌரவ கிம் சோ-ஹீ (Kim So-hee) மற்றும் இலங்கைக்கான கொரியக் குடியரசின் தூதுவர் கௌரவ யூன்-ஜுங் கிம் (Youn-Jung Kim) ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்.1989 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட சிறுவர், சனத்தொகை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான கொரிய பாராளுமன்ற லீக், காலநிலை மாற்றம், சனத்தொகை மற்றும் சிறுவர் நலன் தொடர்பான உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச பாராளுமன்ற ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகின்றது.2027 ஆம் ஆண்டில் இலங்கைக்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் பூர்த்தியடைவதைக் கருத்திற்கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கான எதிர்பார்ப்பை இரு தரப்பினரும் இதன்போது வலியுறுத்தினர்.இலங்கையை அண்மையில் பாதித்த சீரற்ற காலநிலை நிலைமைகள் தொடர்பில் பிரதி சபாநாயகர் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக, கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் ஏற்பட்டுள்ள கணிசமான சேதங்கள் குறித்து அவர் எடுத்துரைத்தார்.அத்துடன், பிறப்பு வீதம் குறைவடைதல் மற்றும் வேகமாக முதியோர் எண்ணிக்கை அதிகரித்தல் உள்ளிட்ட இலங்கை எதிர்கொள்ளும் சனத்தொகை சார் சவால்கள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். இந்நிலைமைகள் எதிர்காலத்தில் தங்கியிருப்போர் விகிதம் மற்றும் தொழிலாளர் சக்தியில் கிடைப்பனவு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் இலவசக் கல்வி முறைமை மற்றும் அதனை மேலும் வலுப்படுத்துவதில் காணப்படும் சவால்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.கொரியக் குடியரசில் குறைவடைந்து வரும் பிறப்பு வீதத்தை எதிர்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கொரியப் பிரதிநிதிகள், புதிதாகத் திருமணமான தம்பதியினருக்கான குறைந்த வாடகை வீடமைப்புத் திட்டங்கள், குறைந்த வட்டி வீதத்திலான கடன்கள் மற்றும் வீடமைப்புக்கான ஊக்குவிப்புகள் உள்ளிட்ட பல்வேறு கொள்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.ஓய்வூதியப் பாதுகாப்பில் காணப்படும் இடைவெளிகளைக் குறைப்பதற்காக ஓய்வுபெறும் வயதெல்லையை 60 இலிருந்து 65 ஆக அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவுகள் குறித்தும் தூதுக்குழுவினர் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்தும்போது இளைஞர் தலைமுறையினருக்குப் போதுமான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.பொருளாதார அபிவிருத்தியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பல வருடங்களாக ஈட்டப்பட்ட பொருளாதார முன்னேற்றத்திற்குப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.இலங்கையில் கொரியக் கலாசாரம், குறிப்பாக கொரிய பாப் இசை பிரபலமடைந்து வருவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறையை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும், தென்கொரியாவில் தொழில்புரியும் இலங்கை இளைஞர், யுவதிகளுக்குக் கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகளின் நன்மைகள் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர். இப்பயிற்சி வாய்ப்புகள் ஊடாக தொழில்சார் திறன்களை மேம்படுத்துவதுடன், இலங்கைக்கும் பொருளாதார நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இதன்போது குறிப்பிடப்பட்டது.அடுத்த வருடம் தென்கொரியாவில் நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஆசிய – பசுபிக் பாராளுமன்ற உறுப்பினர்களின் மாநாட்டில் (APPCED) கலந்துகொள்ளுமாறு இலங்கைப் பாராளுமன்றத்திற்குக் கொரியத் தூதுக்குழுவினர் அழைப்பு விடுத்தனர். குறித்த மாநாட்டில் பல நாடுகளின் சார்பில் கொரியா தலைமைத்துவத்தை வகிக்கவுள்ளது.அத்துடன், அடுத்த வருடம் ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேசக் கண்காட்சியில் கொரிய வர்த்தக நிறுவனங்களின் பங்கேற்பு குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
2026-11-16
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல்கள் நிலவிய காலப்பகுதியிலும் அதன் பின்னரும் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த 12,196 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளதாக கௌரவ பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.புனர்வாழ்வு செயற்பாட்டின் கீழ் ஆலோசனைச் சேவைகள், யோகா மற்றும் ஆன்மீக நிகழ்ச்சித்திட்டங்கள், அடிப்படைக் கல்வி மற்றும் மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றுவதற்கான வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகியன முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.அத்துடன், ஓவியம், இசை, நாடகம் மற்றும் அரங்கக் கலை உள்ளிட்ட அழகியல் கலை நிகழ்ச்சித்திட்டங்கள், வாகனச் செலுத்துநர் பயிற்சி மற்றும் விளையாட்டு நிகழ்ச்சித்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அப்பயிற்சிகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் ஏனைய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.மேலும், அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் கடனுதவிகள், வீடுகள், தையல் இயந்திரங்கள், மீன்பிடி வலைகள், மிதிவண்டிகள், நீரிறைக்கும் இயந்திரங்கள், தச்சுத் தொழில் உபகரணங்கள், பதப்படுத்தும் உபகரணங்கள், விவசாய உபகரணங்கள், கால்நடைகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வழங்கிய பதிலளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2026-11-16
தொண்டர் ஆசிரியர்கள் 4,700 பேரும் ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அவர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான சாத்தியமில்லை என கௌரவ கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.நாட்டின் பல்வேறு மாகாணங்களில் அமைந்துள்ள பாடசாலைகளில் தற்போது தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றும் 4,700 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் உதவியாளர்களாக நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 2007.01.04 ஆம் திகதிய அமைச்சரவைப் பத்திர இலக்கம் 06/2282/229/085-II இன் பிரகாரம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்தார்.ஆசிரியர் உதவியாளர்களாக மேல், மத்திய, தென், வடக்கு மற்றும் கிழக்கு, வடமேல், வடமத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள மேற்படி 4,700 தொண்டர் ஆசிரியர்களில் 462 பேரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks