logo

E   |   සි   |  

2021-11-12

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

குருநாகல் பஸ் நிலையத்தில் பொது மக்கள் தரித்து நிற்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அசௌகரியங்களுக்கு உள்ளாகும் வகையில் 31 கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாக கோபா குழுவில் புலப்பட்டது

குருநாகல் பஸ் நிலையத்தில் பொது மக்கள் தரித்து நிற்பதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் 31 கடைகளை தனிப்பட்ட செலவில் அமைப்பதற்கு 31 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தலைமையில் அண்மையில் (10) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் குறித்த தகவல்கள் தெரியவந்தன. அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுக்குப் பதிலாக நேற்றைய கூட்டத்துக்கு இராஜாங்க அமைச்சர் தலைமை தாங்கியிருந்தார்.

இந்தக் கட்டுமானத்தை பொருளாதார வளர்ச்சிக்கான வழியாக குருநாகல் மாநகரசபை அர்த்தப்படுத்தியிருப்பதால் பொது மக்களின் நலனுக்கு இடையூறு ஏற்பட்டிருப்பதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் பஸ் நிலையத்துக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள ஆரம்ப திட்டமிடலுக்கு அப்பால் சென்று இந்தக் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், தவறான முறையின் கீழ் இந்த 31 கடைகளையும் அமைப்பதற்கு 31 தனி நபர்களுக்கு  அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், குருநாகல் மத்திய சந்தையின் கட்டுமானத்துக்காக மாநகர சபையின் பொறியியலாளர் மதிப்பீட்டையும் விஞ்சி 41% அதாவது 281,934,447 ரூபாவுக்கு கேள்விப்பத்திரம் சமர்ப்பித்த நபருக்கு இதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. முதலில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடு பிழையான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது இங்கு தெரியவந்தது. கட்டடத்துக்கு அவசியமான சகல தேவைகளும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இதற்கமைய குருநாகல் மாநகரசபை நல்லெண்ணத்தில் மேற்கொண்ட இந்த நடவடிக்கை பொறியியல் திணைக்களத்தினால் தவறாக மதிப்பீடு தயாரிக்கப்பட்டமையால் குறைபாடுகளுக்கு வழிகோலியது என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான நிலையில் தவறான முறையில் மதிப்பீட்டைத் தயாரித்த பொறியியலாளர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோபா குழு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தது.

அதேநேரம், இலுபுகெதர வீதிக்கு கொங்கிரீட் இடுவதற்காக இரண்டு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டமை தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இது தவிரவும், போலியான நிறுவனத்தைப் பயன்படுத்தி பொலிசாக் பைகளைக் கொள்வனவு செய்தமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மத்திய சந்தையின் 1வது கட்டம் மற்றும் 2வது கட்டங்களில் கட்டப்பட்டுவரும் 123 கடைகள், மாலிகாபிட்டிய 12 கடைகள் நீண்டகால குத்தகைக்கு பிழையான முறையில் வழங்கப்பட்டமை போன்ற விடயங்கள் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டன. அதன்படி, சபை முடிவு செய்த மதிப்பீட்டின்படி வெளிப்படைத்தன்மை இல்லாமல் முதலில் கேள்விப்பத்திரத்தை வழங்கிய நபருக்கு குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் தெரியவந்தது. இருந்தபோதும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மாநகரசபையின் தலைவர் இங்கு குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, செஹான் சேமசிங்ஹ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக அபேசிங்ஹ, குணபால ரத்னசேகர, காதர் மஸ்தான், வீரசுமன வீரசிங்ஹ, வைத்திய கலாநிதி உபுல் கலப்பத்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1

2

3



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks