E   |   සි   |  

2021-08-06

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கூட்டுறவு முறையை விருத்தி செய்து நாடு முழுவதும் நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும் - கோபா குழுத் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

கூட்டுறவு முறையை விருத்தி செய்து நாடு முழுவதும் நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க கணக்குகள் குழுவின் (கோபா) தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.  

கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயற்பாடுகளை மதிப்பாய்வு செய்வதற்கு அரசாங்க கணக்குகள் குழு நேற்று (05) பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.

கடந்த காலங்களில் கூட்டுறவு முறைமை இந்நாட்டில் மிகவும் செயற்திறனாக செயற்பட்டதாக சுட்டிக்காட்டிய பேராசிரியர் இன்று அந்த நிலைமை இல்லாமல் போயுள்ளதாக குறிப்பிட்டார். விசேடமாக விவசாய கூட்டுறவு மற்றும் நுகர்வோர் கூட்டுறவுக்கிடையிலான தொடர்பை அதிகரித்து ஒரு சில உற்பத்திகளை நேரடியாக மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். அதேபோன்று, பருப்பு, சீனி, அரிசி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை முறையான வேலைத்திட்டமொன்றின் மூலம் நியாயமான விலைக்கு வழங்க முடியும் என தான் நம்புவதாக பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

தற்போதைய சட்டரீதியான பின்னணியில் அதனை உடனடியாக செயற்படுத்துவதில் அசௌகரியங்கள் காணப்படுவதாக கூட்டுறவு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் புதிய சட்டங்களை தயாரித்து உரிய தரப்பினருக்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், கோபா குழுவுக்கும் இந்த வரைபுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர். இதன்மூலம் மாகாண சபைகள் மற்றும் மத்திய அரசுக்கிடையில் ஏற்பட்டுள்ள ஒரு சில முரண்பாடுகளை குறைக்கவும், ஊழல் மோசடிகளின் போது அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பில் விளக்குவதற்கும் நடவடிக்கை எடுத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஏற்கனவே வினைத்திறனான முறையில் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார். கூட்டுறவு தொடர்பான சட்டத்தின் விடயங்கள் அரசியலமைப்பிலிருந்தே வருவதால் புதிய சட்டமூலத்தின் பணிகள் சற்று கடினமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும் அதனை, துரிதமாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோன்று, அவுஸ்திரேலியாவிலிருந்து சிவப்பு பருப்பு மற்றும் இந்தியாவிலிருந்து சீனி இறக்குமதி செய்வதற்கு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால்,  கூட்டுறவு மூலம் அவசரமாக சலுகை விலையில் சீனி மற்றும் பருப்பு என்பவற்றை வழங்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விவசாயிகளை கடன் சுமையிலிருந்து மீட்பதன் முக்கியத்துவம் தொடர்பில் குழு உறுப்பினர்கள் கவனம் செலுத்தியதுடன், கிராமிய வங்கிகள் மூலம் கடன் சலுகைகள் வழங்குவது முக்கியமானது என சுட்டிக்காட்டினர். அதேபோன்று, கிராமிய வங்கிகள் மூலம் கடன் வழங்கும் போது வட்டியில் அதிக சதவிகிதம்  ஏனைய தரப்பினருக்கு செல்வதாகவும், அதனால் இந்த நிலைமையை போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வருகை தந்திருந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

மேலும், கூட்டுறவு கிராமிய வங்கிகளை கணினிமயப்படுத்துவது தொடர்பில் இதற்கு முன்னர் இடம்பெற கோபா குழுவில் ஆலோசனை வழங்கப்பட்டிருந்ததுடன் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமை குறித்து கோபா குழுத்தலைவர் அதிகாரிகளிடம் வினவினார். ஒப்பந்தக்காரர்களின் சிக்கல் காரணமாக இது கைவிடப்பட்டுள்ளதாகவும் அதனை முறையாகவும் துரிதமாகவும் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அதேபோன்று, கட்டட பொருட்கள் கூட்டுத்தாபனத்துக்கு 2013 ஆம் ஆண்டில் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்ட கடன் மற்றும் வட்டி அறவிடப்படாமை குறித்து குழுவின் கவனம் செலுத்தப்பட்டது. இது தொடர்பில் கடன் மற்றும் வட்டி இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் தற்போதைய சட்டதிட்டங்களுக்கு அமைய அரசங்க நிறுவனமொன்றுக்கு எதிராக வழக்கு தொடர முடியாது எனவும் இதனால் பிரச்சினை உள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

இந்தக் குழுக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, கலாநிதி ஹரிணி அமரசூரிய, வீரசுமான வீரசிங்க, காதர் மஸ்தான், வைத்தியர் உபுல் கலப்பத்தி, பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

1 2

 



தொடர்புடைய செய்திகள்

2026-09-03

இலங்கை சுங்கத்தின் வருவாய் உள்ளிட்ட செயற்பாடுகளை மீளாய்வு செய்த பாராளுமன்ற வழிவகைகள் பற்றிய குழு

பாராளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழு, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் வருவாய் உள்ளிட்ட செயற்பாடுகளை அண்மையில் மீளாய்வு செய்தது. குறித்த குழு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் அண்மையில் கூடியபோதே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.இங்கு கருத்துத் தெரிவித்த சுங்கப் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள், 2026 ஜூன் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக எதிர்பார்க்கப்பட்ட சுங்க வருவாய் 1,060,559 மில்லியன் ரூபாய் எனவும், அந்தக் காலப்பகுதிக்குள் 1,379,084 மில்லியன் ரூபாய் வருவாயாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இது சதவீத அடிப்படையில் 130% முன்னேற்றமாகும் என்றும் குறிப்பிடப்பட்டது.இதற்கமைய, இவ்வாண்டின் ஒவ்வொரு மாதத்திலும் எதிர்பார்க்கப்பட்ட வருவாயைக் காட்டிலும் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒவ்வொரு மாதமும் அதிகளவான முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் குழுவிடம் தரவுகளுடன் தெரிவித்தனர்.2026 ஜூன் 30ஆம் திகதி வரையில் 316,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் 512,547 மில்லியன் ரூபாய் வரி வருவாய் கிடைத்துள்ளதாகவும் 2026ஆம் ஆண்டுக்கான வாகன இறக்குமதி தொடர்பான விடயங்களை முன்வைத்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, அதிகூடிய வரி வருவாயான 386,726 மில்லியன் ரூபாய் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்ததன் மூலம் கிடைத்துள்ளது. அத்துடன், அதிகளவான சுங்க வருவாயை ஈட்டித்தந்த பொருட்களின் பட்டியலில் முதலிடத்தை 1,000cc இற்கும் குறைவான இயந்திரக் கொள்ளளவைக் கொண்ட பெற்றோல் மோட்டார் வாகனங்கள் பெற்றுள்ளதுடன், அவற்றின் மூலம் கிடைத்த வருவாய் 137.4 பில்லியன் ரூபாயாகும். இது மொத்த வருவாயில் 9.96% ஆகும்.மேலும், இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் எண்ணிக்கை மற்றும் அவை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விதம், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், வருவாய் நிர்வாகத்தில் காணப்படும் சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.வழிவகைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் சிலரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை சுங்கம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவினரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


2026-09-03

இணையக் குற்றங்களைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கவனம்

பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுத்தல் மற்றும் பொலிஸ் சேவையின் செயல்திறனை மேம்படுத்துதல் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு, அதன் தலைவர் கௌரவ அமைச்சர் ஆனந்த விஜேபால அவர்களின் தலைமையில் கடந்த ஆக. 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இதில் இணையக் குற்றங்கள், சட்டவிரோத இணையவழி சூதாட்ட நடவடிக்கைகள் மற்றும் மோசடிகளைத் தடுப்பதற்காக பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் குழுவின் விசேட கவனம் செலுத்தப்பட்டது. சட்டவிரோத சூதாட்டம் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இணையத்தளங்களைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இணையக் குற்றங்களுடன் தொடர்புடையதாக இலங்கையில் தங்கியிருந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட வெளிநாட்டவர்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட நாடுகளின் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, குறித்த வெளிநாட்டவர்களை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இணையக் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் சட்ட அறிவைக் கொண்ட மனித வளத்தை வலுப்படுத்துவதற்காக மென்பொருள் பொறியியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகளைப் பணியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குழுவின் முன்னிலையில் அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு களப் பயிற்சியுடன் தேவையான வெளிநாட்டுப் பயிற்சிகளையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மேலும், இணையக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளை மேலும் வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக புதிய தொழில்நுட்பக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் உடனடியாகச் செயற்படுத்தக்கூடிய மையப்படுத்தப்பட்ட கட்டமைப்பொன்றை நிறுவுதல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, கிரிப்டோ நாணயப் பயன்பாடு தொடர்பான குற்றங்கள் குறித்து வெளிநாட்டு நிறுவனங்களுடன் தரவுகளைப் பரிமாறிக்கொள்ளும்போது காணப்படும் தடைகளை குறைப்பதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.மேலும், பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள் ஊடாக கிடைக்கப்பெறும் தகவல்கள் தொடர்பான தற்போதைய நிலைமை, அக்குழுக்கள் ஊடாக கிடைக்கப்பெறும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் வெளியில் கசியாமல் தடுப்பது மற்றும் சமூக பொலிஸ் சேவையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இதற்கு மேலதிகமாக, சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்து, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக பொலிஸ் விசாரணைகளைத் துரிதப்படுத்துதல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் ஆதரவை மேலும் பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.


2026-09-02

“இன்சா” திட்டம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக புலம்பெயரும் தொழிலாளர்களின் குடும்பங்களின் நலன்புரியையும், அவர்களின் பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள “இன்சா” (InSA – Integrated Systematic Approach for the Family Development of Migrant Workers) திட்டம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த வேலைத்திட்டம், 2026 ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் தொழிலாளர்களின் குடும்பங்களின் நீண்டகால நிதி முகாமைத்துவம், சிறுவர் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, தொழில் பயிற்சி, சிறுதொழில் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி ஆகிய பிரதான துறைகளில் கவனம் செலுத்தி குடும்ப அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக, 2 முதல் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்லும் போது, அவர்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பிள்ளைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பில் முறையான திட்டமொன்றைத் தயாரிப்பதன் அவசியம் குழுவில் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், இரண்டு வயதுக்குக் குறைந்த பிள்ளைகளைக் கொண்ட தாய்மார்கள் தொடர்பில் நடைமுறையில் உள்ள சட்ட மற்றும் நிர்வாக ஏற்பாடுகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இதற்காக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், வெளிநாடு செல்வதற்கு முன்னர், வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் மற்றும் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிய பின்னர் என மூன்று கட்டங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் குடும்ப நலன்புரி தொடர்பில் தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.அதன்படி, பிள்ளைகளுக்காகத் தயாரிக்கப்படும் மாற்று பராமரிப்புத் திட்டங்களை நடைமுறையில் செயற்படுத்த முடியுமா என்பதை உறுதிப்படுத்துதல், ஆபத்தான நிலைமைகளை அடையாளம் காணுதல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் விசேட பராமரிப்புத் திட்டங்களைத் தயாரித்தல் ஆகியவற்றில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டிலிருந்து மீண்டும் நாடு திரும்பும் குடும்பங்களுக்கு குடும்ப உறவுகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட உளவியல் மற்றும் சமூக ஆதரவுகளை வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.அத்துடன், பிரதேச செயலக மட்டத்தில் “இன்சா குழுக்கள்” (InSA) அமைக்கப்படவுள்ளதுடன், உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய துறைசார் உத்தியோகத்தர்கள் இணைந்து செயற்படவுள்ளதாக குழுவில் தெரிவிக்கப்பட்டது.சிறுவர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை தயாரிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் அனைத்து தொழிலாளர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துகொள்வதன் முக்கியத்துவமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது. சுற்றுலா விசா உள்ளிட்ட முறைசாரா வழிகளின் ஊடாக வெளிநாடு செல்லும் நபர்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ தரவுகள் இல்லாத காரணத்தால், அவர்களது குடும்பங்களுக்கான நலன்புரி மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே, வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் தொடர்பில் முறையான தரவுத் தொகுதியொன்றைப் பேணுவதன் அவசியமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது, மாவட்ட மட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஊடாக அதன் முன்னேற்றம் கண்காணிக்கப்படவுள்ளதுடன், “இன்சா” (InSA) திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையொன்றை 2027 பெப்ரவரி மாதத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டது.


2026-09-02

பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் தலைமையதிகாரி (நீக்கல்) சடடமூலம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் தலைமையதிகாரி (நீக்கல்)  சட்டமூலம் தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக அவர்களின் தலைமையில் குறித்த குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.  பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்கப் பாதுகாப்புப்  பணியாட்தொகுதியின் தலைமையதிகாரி சட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. காலத்திற்கேற்ற தேவைகளுக்கு அமைவாக, முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக இந்தச் சட்டம் 2009ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.எனினும், நாட்டில் தற்போது நிலவும் நிலைமையைக் கருத்திற்கொண்டு, முப்படைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக தனியான அலுவலகமொன்றையோ பதவியொன்றையோ தொடர்ந்து பேண வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தினால், தற்போது முன்னெடுக்கப்படும் முப்படைகளின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் கீழ், குறித்த ஒருங்கிணைப்புப் பணிகள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.அத்துடன், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொள்ளும்போது, குறித்த அலுவலகத்தின் பணிகளை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவுச் சுமையைக் குறைக்க முடியும் என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இந்தச் சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks