2021-08-06
நிலவும் கொவிட் சூழல் காரணமாக கொரிய வேலைவாய்ப்புக்களுக்கு இலங்கையர்களை அனுப்பும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனை விரைவுபடுத்துவதறான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன அவர்கள் அண்மையில் (04) பாராளுமன்றத்தில் நடைபெற்ற வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஏற்கனவு இராஜதந்திர மட்டத்தில் கலந்துரையாடப்பட்டிருப்பதாகவும், இலங்கையர்களுக்கு விவசாயத்துறையில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு கொரியத் தூதுவர் விசேட யோசனையை முன்வைத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இருந்தபோதும் தற்பொழுது நிலவும் கொவிட் சூழல் காரணமாக இந்த நடவடிக்கை காலதாமதம் அடைந்துள்ளபோதும் இதனை விரைவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
கொரியாவில் பணியாற்ற இலங்கையர்களுக்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும், இதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட சுட்டிக்காட்டியதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க குறிப்பிடுகையில், பிரித்தானிய பாராளுமன்றத்தில் தற்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ள வெளிநாட்டு நடவடிக்கைகள் சட்டத்தின் ஊடாக அந்நாட்டின் யுத்த வீரர்கள் வெளிநாடுகளில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்ட யுத்தக் குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறான பின்னணியில் இலங்கை படைவீரர்கள் தமது தாய்நாட்டைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கையின் போது கூட மனித உரிமைகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது நியாயமற்றது என்றும், இந்நாட்டுப் படைவீரர்களின் நிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டார். தேசிய அரசாங்கங்களின் இறைமைக்கு எதிராக மனித உரிமை பயன்படுத்தப்படும் விடயத்தில் உலகத்துக்கே எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் படைவீரர்கள் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை உலகத்துக்கு அறிவிக்குமாறும் அவர் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே, இது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், இந்நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவர்களின் சொந்தக் காணிகளை மீள வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிந்தளவு முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், இவை தொடர்பில் சர்வதேச சமூகத்தை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கடந்த ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கையின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அத்துடன் உயர் நீதிமன்ற நீதியரசர் நவாஸ் தலைமையில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டு அதன் ஊடாக இது தொடர்பில் சாட்சிகள் பதிவுசெய்யப்பட்டு வருகின்றன. இதன் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பில் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொவிட் சூழலுக்கு மத்தியில் பல உலக நாடுகள் இலங்கையை சிவப்பு வலயத்தில் உள்ள நாடாக அறிவித்திருப்பதால் நாடு தொடர்பான இந்த நிலைப்பாட்டை மாற்றுவதற்கு அந்தந்த நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி இங்கு குறிப்பிட்டார். சில நாடுகளில் காணப்படும் நிலைமைகள் காரணமாக இது சிக்கலான விடயமாக இருப்பதாகவும், முடிந்தளவு முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் இம்மாதம் 15ஆம் திகதி பதவியேற்கவிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறிப்பிடுகையில், வெளிநாட்டு அலுவல்களுடன் தொடர்புபட்ட பொது மக்களின் முறைப்பாடுகள் மக்கள் பிரதிநிதிகளான தம்மிடம் முன்வைக்கப்படுவதாகவும், இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு அமைச்சு இணைப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றார். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் ராமமேஸ்வரத்துக்கும் தலை மன்னாருக்கும் இடையில் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் சாணக்கியன் இராமாணிக்கம் எழுப்பிய விடயத்துக்குப் பதிலளித்த வெளிநாட்டு அமைச்சின் செயலாளர், இந்த விடயத்துக்கு இந்தியத் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளபோதும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் துறைமுக அமைச்சு இறுதி முடிவுக்கு வரவில்லையென்றார்.
வெளிநாட்டு சேவைகள் தொடர்பான பரீட்சையை நடத்துவது காலதாமதம் அடைந்திருப்பதாகவும், இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் சுட்டிக்காட்டினார். தற்பொழுது நிலவும் கொவிட் சூழல் காரணமாக பரீட்சையை நடத்துவது காலதாமதம் அடைந்திருப்பதாகவும், பரீட்சைகள் திணைக்களம் விரைவில் இதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சின் செயலாளர் பதிலளித்தார். 2018ஆம் ஆண்டே இறுதியாக இப்பரீட்சை நடத்தப்பட்டிருப்பதாகவும், வெளிநாட்டு சேவைகளில் அதிகாரிகளுக்கான பற்றாக்குறை நிலவுவதாகவும் இங்கு புலப்பட்டது. இந்தப் பரீட்சைகளை நடத்த பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், நேர்முகப் பரீட்சைகளை நடத்தி வெற்றிடங்களைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான சாணிக்கியன் இராசமாணிக்கம், காமினி வலேபொட, கலாநிதி சுரேன் ராகவன், யதாமினி குணவர்த்தன மற்றும் சுதத் மஞ்சு ஆகியோரும், வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
2026-09-25
புதிய தூதுவர், உயர்ஸ்தானிகர் மற்றும் நிறுவனத் தலைவர் ஆகிய மூன்று நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் அண்மையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழுவிலேயே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.இதற்கமைய, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கான இலங்கையின் புதிய தூதுவராக அன்சுல் பானு ஜான் அவர்களின் நியமனத்திற்கும், கனடாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சந்தன ரோஹண குமார அம்பகொல்ல அவர்களின் நியமனத்திற்கும் உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.மேலும், ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதிய தலைவராக நுசித் குமாரதுங்க அவர்களை நியமிப்பதற்கும் உயர்பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.
2026-09-24
சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது அவர்களது கண்ணியம், தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்காக தேசிய ஊடக வழிகாட்டியொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது. கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் கடந்த 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய குழுக் கூட்டத்தின்போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது அவர்களின் சிறந்த நலனுக்கு முன்னுரிமை வழங்குதல், உண்மைத்தன்மை மற்றும் நியாயத்தன்மையைப் பேணுதல், அத்துடன் சிறுவர்களையும் அவர்களது குடும்பங்களையும் தேவையற்ற வகையில் வெளிப்படுத்துவதைத் தவிர்த்தல் ஆகியவை இந்த் தேசிய வழிகாட்டியின் பிரதான நோக்கங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.அத்துடன், இயலாமையுடைய சிறுவர்கள் தொடர்பான ஊடக அறிக்கையிடலின்போது அவர்களது கண்ணியம் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் செயற்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இதனிடையே, தமிழ் மொழி பேசும் பிரதேசங்களில் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுகளை வலுப்படுத்துவதற்காக தமிழ் மொழியைப் பயன்படுத்தக்கூடிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்து பயிற்றுவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் பெண்களும் சிறுவர்களும் தமது முறைப்பாடுகளை முன்வைக்கும்போது எதிர்கொள்ளும் மொழிசார் சிரமங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கமாகும்.நாடு முழுவதும் இயங்கும் சிறுவர் இல்லங்களின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பை முறையாக மேற்கொள்வதற்காக மத்தியப்படுத்தப்பட்ட தகவல் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியமும் குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்காக குறித்த நிறுவனங்களின் நிர்வாகத்தின் பொறுப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.மேலும், ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்களைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் செல்வது தொடர்பில் காணப்படும் விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் தொழில்நுட்பக் குழுவொன்றின் ஊடாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள பெண்களின் பிள்ளைகளுக்கான கல்விச் செலவுகளை மீளச் செலுத்தும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், 2027ஆம் ஆண்டளவில் அனைத்து முன்பள்ளிகளுக்கும் பொதுவான தரநிலைகளை அறிமுகப்படுத்துதல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுவான பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கும் முறைமையொன்றை ஏற்படுத்துதல் மற்றும் முன்பள்ளிகளில் காணப்படும் உட்கட்டமைப்பு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளில் காணப்படும் தாமதங்களைக் குறைப்பதற்காக சட்ட வைத்திய அறிக்கைகள் மற்றும் அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வழங்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல், சட்டமா அதிபர் திணைக்களத்தில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுதல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளைத் துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான விசேட பொறிமுறையொன்றை உருவாக்குதல் தொடர்பிலும் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.சிறுவர்களுக்கு வழங்கப்படும் உடல் ரீதியான தண்டனையை சட்டரீதியாகத் தடை செய்வதற்குத் தேவையான சட்டத் திருத்தங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-09-23
பாராளுமன்றத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம்” மற்றும் "நீதித்துறை (திருத்தம்) ஆகிய சட்டமூலங்கள் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டன.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக அவர்களின் தலைமையில் குறித்த குழு நேற்று (செப். 22) பாராளுமன்றத்தில் கூடியபோது இந்தச் சட்டமூலங்கள் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டன.சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பரிந்த ரணசிங்க அவர்கள் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சட்டவரைவு திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.2026.09.22 அன்று கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களினால் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட குறித்த இரண்டு சட்டமூலங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்மானம் குறித்தும் சட்டமா அதிபர் குழுவிற்கு விளக்கமளித்தார். அத்துடன், இரு சட்டமூலங்களுடனும் தொடர்புடைய விடயங்கள் குறித்து குழு உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களின் மூலம் நீதித்துறையின் ஆற்றலை விரிவுபடுத்துதல், மேன்முறையீட்டு நீதிக்கான பிராந்திய மட்டத்திலான அணுகலை மேம்படுத்துதல், விசாரணையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்தல், நீதிபதிகளின் அனுபவத்தைத் தக்கவைத்தல் மற்றும் நீதிபதிகளை நியமிக்கும் நிறுவன ரீதியான செயன்முறையை மேம்படுத்துதல் ஆகியவை நோக்கங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன.அதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிப்பதற்காக அரசியலமைப்பின் 137ஆவது உறுப்புரையைத் திருத்த முன்மொழியப்பட்டுள்ளது. பிராந்திய மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவி செயற்படுத்துவதன் மூலம் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக நிறைவு செய்வதுடன், வழக்குகளின் தரப்பினர்கள் கொழும்பிற்கு வர வேண்டிய தேவையையும் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.மேலும், மாகாண மட்டத்திலான மேல் நீதிமன்றங்களின் நீதித்துறை ஆற்றலை அதிகரிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மாகாண மேல் நீதிமன்றங்கள் பாரதூரமான குற்றங்கள் தொடர்பில் ஆரம்ப நீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவதுடன், 2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்குப் பின்னர் மாகாண சிவில் மேல் நீதிமன்றங்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன.இதன் விளைவாக வழக்குகள் குவிந்து காணப்படுவதும், அவற்றை நிறைவு செய்வதில் ஏற்படும் தாமதங்களும் காரணமாக மேலதிக நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, மேலதிக மாகாண மேல் நீதிமன்றங்கள் மற்றும் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களை நிறுவுவதற்கு ஏதுவாக, அதிகபட்ச மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 இலிருந்து 120 ஆக அதிகரிப்பதற்காக நீதித்துறை அமைப்புச் சட்டத்தின் 4ஆவது பிரிவைத் திருத்த முன்மொழியப்பட்டுள்ளது.சட்டரீதியான ஓய்வுபெறும் வயதெல்லைகளைத் திருத்துவதன் மூலம் அனுபவமிக்க நீதித்துறை அதிகாரிகளின் சேவையைத் தொடர்ந்து பெற்றுக்கொள்வதை உறுதி செய்வதும் இந்தத் திருத்தங்களின் மற்றுமொரு நோக்கமாகும்.இதற்கமைய, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும், மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 61 இலிருந்து 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் ஓய்வுபெறும் வயதை 60 இலிருந்து 62 ஆகவும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, எம்.கே.எம். அஸ்லம், சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, வைத்தியர் செல்லத்தம்பி திலகநாதன், தர்மப்பிரிய விஜேசிங்க, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.டி. சூரியபண்டார மற்றும் சந்தன சூரியஆரச்சி ஆகியோரும், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி யூ.பி. அபேவிக்ரம மற்றும் கயான் ஜனக ஆகியோரும் இந்தக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-09-23
இயலாமையுடைய நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் செயன்முறையை மேலும் இலகுவானதாகவும் முறையானதாகவும் மாற்றுவதற்காக மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்டது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட, சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் போது இயலாமையுடைய நபர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட விசேட குழு அண்மையில் பாராளுமன்றத்தில் முதன்முறையாகக் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சுகத் வசந்த.த சில்வா, தினேஷ் ஹேமந்த மற்றும் எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இக்கூட்டத்தில், இயலாமையுடைய நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் போதும், அவர்களது இயலாமையுடைய நிலைமைக்கு ஏற்றவாறு வாகனங்களை மாற்றியமைத்து பயன்படுத்தும் போதும் எதிர்கொள்ளும் நடைமுறை மற்றும் சட்டரீதியான பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இங்கு தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தினால் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகள், இயலாமையுடைய நிலைமைக்கு ஏற்ப வழங்கப்படும் மருத்துவப் பரிந்துரைகள் மற்றும் அதற்கமைய சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, மருத்துவப் பரிசோதனைகளை மாவட்ட மட்டத்தில் மேற்கொள்வது, பார்வைக் குறைபாடுடைய நபர்களுக்கான பார்வைப் பரப்பளவு உள்ளிட்ட மருத்துவத் தகைமைகளை கருத்திற்கொண்டு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கக்கூடிய வாகன வகைகளை விரிவுபடுத்துவது, வாகனங்களுக்கு பொருத்தமான பாதுகாப்பு உபகரணங்களைப் பொருத்துவது மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல் திருத்தங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.செவித்திறன் குறைபாடுடைய நபர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் தற்போதுள்ள சட்ட நிலைமை, விசேட அடையாளக் குறியீடுகளைப் பயன்படுத்துதல் மற்றும் சைகை மொழி பெயர்ப்பாளர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன், ஊனமுற்ற நிலைமைக்கு ஏற்றவாறு வாகனங்களை மாற்றியமைக்கும் செயன்முறை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.ஒரு நபருக்கு பல வாகனங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல், மருத்துவப் பரிசோதனை செயன்முறையை எளிமைப்படுத்துதல் மற்றும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஆகியவற்றுக்கு இடையிலான இணையவழி முறைமையை மேம்படுத்துதல் தொடர்பிலும் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.இயலாமையுடைய நபர்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் செயன்முறையை மேலும் இலகுவானதாகவும் முறையானதாகவும் மாற்றுவதற்குத் தேவையான வர்த்தமானி அறிவித்தல் திருத்தங்கள், பிரதேச மட்டத்தில் சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றின் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது. வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியவாறு, இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்து உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.