பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-08-06
செய்தி வகைகள் : குழு செய்திகள்
சுற்றுச்சூழலுக்கு தீங்கினை ஏற்படுத்தும் மேலும் 08 பொருட்களை தடை செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்க இருப்பதாக பாராளுமன்றத்தில் நேற்று (05) நடைபெற்ற சுற்றாடல்துறை அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இதில் பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் இடியப்பத் தட்டு, பிளாஸ்டித் தட்டுக்கள், பிளாஸ்டிக் கோப்பைகள், பிளாஸ்டிக் கரண்டி போன்றவை உள்ளடங்குவதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
உணவைப் பொதியிடுவதற்குப் பயன்படுத்தப்படும் பொலித்தீன் தாள்களை (lunch sheets) தடை செய்யும் சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார். இது தொடர்பான சுற்றிவளைப்புக்களை அதிகரிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
தற்போதைய கொவிட் 19 தொற்றுநோய் நிலையில் பயன்படுத்தப்படும் முகக் கவசங்கள் உரிய முறையில் அகற்றப்படாமை காரணமாக சமூகத்தில் சுற்றாடல் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே இங்கு சுட்டிக்காட்டினார்.
பயன்படுத்திய முகக்கவசங்களை உரிய முறையில் அகற்றுவது தொடர்பில் ஒழுங்குவிதியொன்றை அறிமுகப்படுத்தவிருப்பதாகவும், இது ஏற்கனவே தயாரிக்கப்பட்டு சுகாதார அமைச்சின் அனுமதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்தது.
முகக்கவசங்களை அகற்றும்போது பொது மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இது விடயத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பாரிய பங்கு இருப்பதாக இங்கு கருத்துத் தெரிவித்த சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்ஹ சுட்டிக்காட்டினார்.
கண்ணொருவ பிரதேசத்தில் மஹாவலி கங்கைக்கு அருகில் சட்டவிரோதமாக ஹோட்டல் அமைக்கப்பட்டிருப்பது தொடர்பில் இக்குழுக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்தப் பகுதியைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரினால் இது அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் பல சுற்றாடல் பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார சுட்டிக்காட்டினர். இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்காமை பிரச்சினைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
மஹாவலி கங்கையின் இரு மருங்கிலும் சட்டவிரோத கட்டடங்கள் பல காணப்படுவதாகவும், இவற்றை அகற்றுவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வசந்த யாப்பா பண்டார தெரிவித்தார். பெரும்பாலும் நீண்டவார இறுதி நாட்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இவற்றைத் தடுப்பதற்கு உள்ளூராட்சி நிறுவனங்களுக்குக் காணப்படும் சட்டரீதியான ஏற்பாடுகள் குறைவாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுற்றாடல் சட்டமூலத்தை நிறைவேற்றும்போது இது போன்ற விடயங்களை விசேடமாகக் கவனத்தில் கொள்ளுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
மனிதர்களின் செயற்பாடுகளால் மஹாவலி கங்கைக்கு அருகில் தீவுகள் உருவாவதன் காரணமாக ஏற்படுகின்ற பாதிப்பை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார இங்கு தெரிவித்தார்.
நாடு முழுவதிலுமுள்ள 103 கங்கைகளைப் பாதுகாப்பதற்கு “கங்கைகளைப் பாதுகாப்போம்’ தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் மஹிந்த அமரவீர, கங்கைகளின் எல்லைகள் குறிப்பிடப்படாமை பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது என்றும் தெரிவித்தார். இதற்கமைய களனி கங்கையின் எல்லைகளைக் குறிப்பிடுவதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள பிரதான நகரங்களை உள்ளடக்கும் வகையில் சுற்றாடல் கணக்காய்வொன்று முன்னெடுப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான குணதிலக ராஜபக்ஷ, அமரகீர்த்தி அத்துகோரல, கிங்ஸ் நெல்சன், வீரசுமன வீரசிங்ஹ, உபுல் மஹேந்திர ராஜபக்ஷ ஆகியோரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
2026-06-19
களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-18
வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.
2026-06-17
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
2026-06-17
புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

