பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-07-21
டபிள் கெப் ரக வாகனத் தோற்றத்திற்கு சமமான முறையில் தயாரிக்கப்பட்டிருந்த ஸ்மார்ட்கெப் வாகன இறக்குமதியின்போது சிங்கல் கெப் வாகனங்களுக்கு அறவிடப்படும் குறைந்த வரி சுங்கத் திணைக்களத்தினால் அறிவிடப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாக ஒரு வாகனத்தில் தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் 3000 வாகனங்களில் 03 பில்லியன் ரூபா அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டிருப்பதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) தனது அவதானிப்பில் தெரிவித்துள்ளது.
இதனை விடவும், வாகனங்களை சுங்கத் திணைக்களத்தின் ஊடாக இறக்குமதி செய்யும்போதும் அவ்வாகனங்களை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவுசெய்யும்போதும் பாரியளவில் வரி முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் இதனால் அரசாங்கத்துக்குப் பெருமளவு வரி வருமானம் இழக்கப்படுவதாகவும் குழுவின் அவதானிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன அவர்களினால் இன்று (20) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினுடைய முதலாவது அறிக்கையிலேயே இந்த அவதானிப்புக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
விசேட செயற்பாடுகளுக்கான வாகனங்களாக சுங்கத் திணைக்களத்துக்குக் குறைந்த வரியைச் செலுத்தி இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் இரட்டை கருமமாற்றல் வாகனங்களாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்படுவது குறித்தும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட 2010-2019 காலப் பகுதியில் 44 வான்கள் குறநை்த வரியைச் செலுத்தி விசேட செயற்பாடுகளுக்கான வாகனங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்ளும் நோக்கில் அவ்வாகனங்கள் பின்னர் இரட்டை கருமமாற்றல் வாகனங்களாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டிருப்பதால் ஏறத்தாழ 1300 மில்லியன் ரூபா வரியை அரசாங்கம் இழந்துள்ளது.
பொதுஜன தொடர்பாடல் உபகரணங்கள் பொருத்தப்பட்ட விசேட செயற்பாடுகளுக்கான வாகனங்கள் பிரிவின் கீழ் 1.5 மில்லியன் ரூபா வரியைச் செலுத்தி இறக்குமதி செய்யப்படும் டொயாட்டா லான்ட் குரூஸர் ரக வாகனம் சுங்கத் திணைக்களத்தினால் உரிய முறையில் பயணிகள் போக்குவரத்துப் பிரிவின் கீழ் வெளிக்கொண்டுசெல்ல அனுமதி வழங்கப்படாமையால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட வரி இழப்பு 56 மில்லியன் ரூபா என்றும் குழுவின் அவதானிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு இடம்பெறும் மோசடிகளைத் தடுக்கும் நோக்கில் விசேட செயற்பாடுகளுக்கான வாகனங்கங்களை இறக்குமதி செய்யும்போது இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் வழங்கப்படும் இசைவாக்க குறியீடுகளின் கீழ் (Harmonized System Code – HS Code) வெளிச்செல்ல அனுமதிக்கப்படும் வாகனங்கள் மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் விசேட இலக்கத் தொடரின் கீழ் (PZA ) பதிவுசெய்யப்பட வேண்டும் என்றும் அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2026-11-20
சமையல் எரிவாயு விவகாரத்தில் பாவனையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையை வலியுறுத்தியது. சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 18) கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் தனியார் நிறுவனம் காஸ் சிலிண்டரின் விலைய கணிசமாக அதிகரித்தமை குறித்துக் கலந்துரையாடுவதற்காக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகள் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். சமையல் எரிவாயு விலை அதிகரிப்பினால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் சௌகரியம் தொடர்பிலேயே தாம் இவ்விடயத்தில் தலையிட்டதாகக் குறிப்பிட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர், சமையல் எரிவாயு தொடர்பான விலை நிர்ணயத்திற்கான அதிகாரம் தமது அதிகாரசபைக்கு இல்லையென்றும் தெரிவித்தார். இருந்தபோதும், குறித்த தனியார் நிறுவனத்துடன் கலந்துரையாடல்களை நடத்தியதன் அடிப்படையிலேயே விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் குறித்த தனியார் நிறுவனத்தின் சந்தைப் பங்கு குறைவாக இருப்பதால், தமக்கான எரிவாயுவை அதிக விலைகொடுத்துக் கொள்வனவு செய்ய நேர்வதால் கொள்வனவு செய்த விலையின் அடிப்படையில் எரிவாயு சிலிண்டலின் விலையை அதிகரிக்க நேர்ந்ததாக அந்நிறுவனம் தமக்கு விளக்கமளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.இருந்தபோதும், எதிர்காலத்தில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் உறுதிசெய்யுமாறும், விலையேற்றங்களினால் பாவனையாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறும் குழு இங்கு வலியுறுத்தியது. இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, எம்.ஏ.சீ.எஸ்.சத்துரி, சுசந்த குமார நவரத்ன, சுதத் பலகல்ல, கிட்ணன் செல்வராஜ் மற்றும் ஞானமுத்து ஸ்ரீநேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
2026-11-20
முதலாவது வாசிப்புக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குடிவரவுச் சட்டமூலத்திற்கு ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. குறித்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்மானத்திற்கு அமைவாக, குழுநிலை விவாதத்தின்போது மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களுக்கு உட்பட்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. குறித்த துறைசார் மேற்பார்வைக்குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க தலைமையில் அண்மையில் கூடியதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இக்குழுக் கூட்டத்தில் குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் உள்ளிட்ட அத்திணைக்கள அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைஞர் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.(351ஆம் அத்தியாயமான) குடிவருவோர் மற்றும் குடியல்வோர் சட்டத்தையும், 1971ஆம் ஆண்டின் 53ஆம் இலக்க கடவுச்சீட்டு (ஒழுங்குபடுத்தல்) மற்றும் வெளிச்செல்கை அனுமதிப் பத்திரச் சட்டத்தை நீகுவதற்கும், தற்போதைய சர்வதேச தரநிலைகள் மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் இந்தப் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் ள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து திருத்தங்களும் சட்டமூலத்தில் உள்ளடக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, உயிரியல் அடையாளத் தகவல்களை (Biometric Data) சேகரித்தல் மற்றும் சேமித்தல் ஆகிய நடவடிக்கைகளின்போது தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு (Personal Data Protection Act) இணங்க, சட்டரீதியான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.அத்துடன், கட்டுப்பாட்டாளர், பிரதி கட்டுப்பாட்டாளர் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தர் போன்ற பழைய பதவிப் பெயர்களுக்குப் பதிலாக, கட்டுப்பாட்டாளர் நாயகம், மேலதிக கட்டுப்பாட்டாளர் நாயகம் மற்றும் குடிவரவு உத்தியோகத்தர்கள் எனப் பதவிப் பெயர்கள் இற்றைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் நோக்கில், அவசியமான சந்தர்ப்பங்களில் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் அதிகாரம் வழங்கப்படும் முப்படையினர் மற்றும் கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் (Coast Guard) வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைச் செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், இலங்கையிலிருந்து சட்டபூர்வமாக வெளியேறி, வேறொரு நாட்டில் போலியான கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் ஆட்கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் இலங்கைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்வதற்கும், அவ்வாறான ஒழுங்கமைக்கப்பட்ட சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பான வழக்குகளை மேல் நீதிமன்றத்தில் விசாரணை செய்வதற்கும் புதிய சட்டமூலத்தின் மூலம் அதிகாரம் வழங்கப்படுகின்றது.அத்துடன், வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளில் முத்திரையிட வேண்டிய அவசியமின்றிப் பயன்படுத்தக்கூடிய தானியங்கி மின்னணு நுழைவாயில்கள் (E-Gates) உள்ளிட்ட தொழில்நுட்பத் தேவைகளைச் செயற்படுத்துவதற்கான சட்டரீதியான கட்டமைப்பும் இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இலங்கையர்களைத் திருமணம் செய்துகொள்ளும் வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் விசா வழங்கும்போது காணப்படும் சட்டரீதியான நிலைமைகள் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
2026-11-18
விவசாயத் திணைக்களத்துடன் தொடர்புடைய நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத நான்கு முற்பணக் கணக்குகளில் காணப்படும் செயற்பாட்டு நட்டங்களை நீக்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 17) பாராளுமன்றத்தில் கூடியபோதே இதற்கான இணக்கம் தெரிவிக்கப்பட்டது.அதன்படி, 1996ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்ட உருளைக்கிழங்கு பயிர்ச்செய்கை விரிவாக்கத் திட்டத்திற்குரிய முற்பணக் கணக்கில் காணப்படும் 23.97 மில்லியன் ரூபா நட்டம், வெலிசர விவசாயப் பணிமனையை நடத்துவதற்கான முற்பணக் கணக்கில் காணப்படும் 5 மில்லியன் ரூபா நட்டம், விவசாயப் பழுதுபார்ப்புப் பணிமனை முற்பணக் கணக்கில் காணப்படும் 35.7 மில்லியன் ரூபா நட்டம் மற்றும் நாரஹேன்பிட்டிய விவசாய மத்திய களஞ்சியசாலை தொடர்பான முற்பணக் கணக்கில் காணப்படும் 421,884 ரூபா நட்டம் ஆகியவற்றைத் தீர்ப்பது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டது.இந்தக் கணக்குகளில் நீண்டகாலமாக நிலவிவரும் நட்டங்கள் மற்றும் கணக்குகளின் இருப்புத் தொகைகளில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த குழு, குறித்த கணக்குகளில் காணப்படும் நட்டங்களை நீக்குவதற்கும் இருப்புத் தொகைகளில் காணப்படும் வேறுபாடுகளைத் திருத்துவதற்கும் இணக்கம் தெரிவித்தது.மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான கணக்கியல் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முறையான கணக்குகளைப் பேணுதல், உரிய கணக்காய்வு நடைமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் நிதி முகாமைத்துவத்தைக் கட்டுப்பாட்டுடன் வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா, ஹெக்டர் அப்புஹாமி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, சுசந்த குமார நவரத்ன, லால் பிரேமநாத், ஓஷானி உமங்கா, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, கவீந்திரன் கோடீஸ்வரன், சுனில் ரத்னசிறி மற்றும் ருவன்திலக ஜயக்கொடி ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-11-18
கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் மற்றும் வைப்பாளர்களின் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் நியமிக்கப்பட்ட கூட்டுறவுத் துறையில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பில் ஆராய்வதற்கான உபகுழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடியின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியது.கம்பஹா மாவட்ட “சணச” சங்கத்தின் முகாமைத்துவத்தின் பலவீனங்கள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், உரிய அனுமதியின்றி சங்கத்தின் நிதி தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டமையால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இந்த முதலீடுகள் காரணமாக உறுப்பினர்கள் மற்றும் வெளிப்புற வைப்பாளர்களின் வைப்புப் பணத்தை மீளச் செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது.மேலும், கூட்டுறவுத் திணைக்களத்தின் மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தல் செயற்பாடுகளில் காணப்பட்ட குறைபாடுகள், சங்கத்தின் சொத்துக்களைத் தீர்ப்பதில் உள்ள சிக்கல்கள், நீதிமன்றத் தடையுத்தரவுகள் மற்றும் சம்பந்தப்பட்ட பொறுப்புவாய்ந்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் பணத்தை மீள வழங்குவதற்காக, சங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மதிப்பீடு செய்து அவற்றை விற்பனை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்தல், சொத்துக்களை அகற்றுவதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவுகளை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தற்போது கையிருப்பில் உள்ள நிதியை வைப்பாளர்களிடையே நியாயமான அடிப்படையில் பகிர்ந்தளித்தல் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.அத்துடன், அங்கீகரிக்கப்படாத முதலீடுகளை மேற்கொண்டமைக்குப் பொறுப்பான முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்களிடமிருந்து அதற்கான நட்டஈட்டுத் தொகையை அறவிடுதல், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் நிறைவு செய்யப்படாத திட்டங்களைப் பூர்த்தி செய்து அவற்றின் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.வைப்பாளர்களின் முழு வைப்புத் தொகையையும் மீளச் செலுத்துவதற்கான தெளிவானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான பொறிமுறையொன்றை முன்வைக்க வேண்டியதன் அவசியம் இதன்போது வலியுறுத்தப்பட்டது. அத்துடன், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் மேல் மாகாண மற்றும் கம்பஹா மாவட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடப்பட்டது.இந்தக் கூட்டத்தில் உபகுழுவின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, டீ. கே. ஜயசுந்தர மற்றும் சுசந்த குமார நவரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks