பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-04-08
2015ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட பசுமாடுகளை பராமரிக்கும் ரிதியாகம பண்ணை 2017 மற்றும் 2018ஆம் ஆண்டு காலப்பகுதியில் 173 மில்லியன் ரூபா நஷ்டம் அடையும் நிலைக்குச் சென்றிருப்பதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் (கோப் குழு) புலப்பட்டது.
2017ஆம் ஆண்டு ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் 2018 செப்டெம்பர் 30ஆம் திகதி வரை பசுமாடுகளுக்காக 508,793,160 ரூபா செலவில் உணவு கொள்வனவு செய்யும்போது கொள்முதல் குழுவின் அனுமதிக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை குறித்தும் இங்கு தகவல்கள் வெளியாகின.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் நிதிச் செயற்பாடுகள் ஒழுங்கீனமான முறையில் காணப்படுவதாலேயே பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றியின் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் செயற்பாடுகளை நீதிக் கட்டமைப்பின் கீழ் உரிய வழிகாட்டல்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழு வலியுறுத்தியது.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையின் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கான கணக்காய்வு நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயற்றிறனை ஆராயும் நோக்கில் கூட்டப்பட்ட கோப் குழுவில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான இரான் விக்ரமரட்ன, பிரேம்நாத் சீ.தொலவத்த, எஸ்.இராசமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையில் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான வருடாந்த நிதி அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படாமை இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்நிறுவனத்தில் காணப்படும் பிரச்சினைகள் காரணமாகவே இவ்வாறு வருடாந்த அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லையென்றும், இவற்றை விரைவில் சமர்ப்பிக்குமாறும் கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.செனரத்துக்குப் பணிப்புரைவிடுத்தது.
நீண்டகாலமாக 166 பதவிகளுக்கு வெற்றிடம் காணப்படுவது பிரச்சினைக்குரியது என்றும், அவற்றை நிவர்த்தி செய்யுமாறும் தெரிவிக்கப்பட்டது. நிறைவேற்றுப் பதவிகள் கடந்த சில வருடங்களாக வெற்றிடங்களாகக் காணப்படுவது குறித்தும் குழு அதிருப்தியை வெளிப்படுத்தியது. சபைக்கென தனியான சட்ட அதிகாரி ஒருவர் இல்லையென்றும், இதற்கான புதிய பதவிநிலையொன்றை உருவாக்கி ஒருவரை உள்வாங்குமாறும் கோப் குழு சுட்டிக்காட்டியது.
1974 மற்றும் 1992 ஆகிய வருடங்களிலிருந்து சபையினால் பராமரிக்கப்பட்டுவரும் 24 பண்ணைகளுக்கு சொந்தமான காணிகளுக்கு உரிமைகள் உரிய முறையில் பெற்றுக்கொள்ளப்படாத நிலையில், 2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையில் 194,565,192 ரூபா பெறுமதியான கட்டடங்கள் மற்றும் 701,358,733 ரூபா பெறுமதியான கட்டமைப்புக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் இங்கு புலப்பட்டது.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபை, வரையறுக்கப்பட்ட மகாவலி கால்நடை நிறுவனம், வரையறுக்கப்பட்ட இலங்கை கோழி முகாமைத்துவ அபிவிருத்தி (தனியார்) நிறுவனம் போன்ற மூன்று நிறுவனங்கள் 12,617.43 ஹெக்டெயர் நிலப்பரப்பைக் கொண்டிருப்பதும் என்றும் இங்கு தெரியவந்தது.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபையிடம் ஒரேநேரத்தில் 3.75 தொன் மாட்டுத் தீவணத்தை உற்பத்தி செய்யக்கூடிய இயந்திரம் காணப்படுகின்றபோதும் இது பயன்படுத்தப்படாமல் இருப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இறக்குமதி செய்யப்படட பசுக்கள் காணப்படும் மெனிக்பள்ளம, டயகம மற்றும் ரிதியகம போன்ற பண்ணைகளில் ஆகக்குறைந்தது நேரடி செலவுகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இருப்பதும் இங்கு புலப்பட்டது.
சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வெலார்ட் திட்டம் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் இராஜாங்க அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை வழங்கினார்.
தேசிய பண்ணை விலங்கு அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான பண்ணைகளின் சில கணக்குகளில் உள்ள முரண்பாடுகளையும் குழு சுட்டிக்காட்டியதுடன், அவற்றை மறு ஆய்வு செய்யுமாறும் வலியுறுத்தியது.
2026-09-02
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக புலம்பெயரும் தொழிலாளர்களின் குடும்பங்களின் நலன்புரியையும், அவர்களின் பிள்ளைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள “இன்சா” (InSA – Integrated Systematic Approach for the Family Development of Migrant Workers) திட்டம் தொடர்பில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர அவர்களின் தலைமையில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த வேலைத்திட்டம், 2026 ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் பிரதேச செயலகப் பிரிவு மட்டத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் தொழிலாளர்களின் குடும்பங்களின் நீண்டகால நிதி முகாமைத்துவம், சிறுவர் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, தொழில் பயிற்சி, சிறுதொழில் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி ஆகிய பிரதான துறைகளில் கவனம் செலுத்தி குடும்ப அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரிப்பதே இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக, 2 முதல் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாடு செல்லும் போது, அவர்கள் வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பிள்ளைகளின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பில் முறையான திட்டமொன்றைத் தயாரிப்பதன் அவசியம் குழுவில் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், இரண்டு வயதுக்குக் குறைந்த பிள்ளைகளைக் கொண்ட தாய்மார்கள் தொடர்பில் நடைமுறையில் உள்ள சட்ட மற்றும் நிர்வாக ஏற்பாடுகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.இதற்காக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், வெளிநாடு செல்வதற்கு முன்னர், வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் மற்றும் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிய பின்னர் என மூன்று கட்டங்களிலும் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் குடும்ப நலன்புரி தொடர்பில் தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.அதன்படி, பிள்ளைகளுக்காகத் தயாரிக்கப்படும் மாற்று பராமரிப்புத் திட்டங்களை நடைமுறையில் செயற்படுத்த முடியுமா என்பதை உறுதிப்படுத்துதல், ஆபத்தான நிலைமைகளை அடையாளம் காணுதல் மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் விசேட பராமரிப்புத் திட்டங்களைத் தயாரித்தல் ஆகியவற்றில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் தலையீடு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டிலிருந்து மீண்டும் நாடு திரும்பும் குடும்பங்களுக்கு குடும்ப உறவுகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட உளவியல் மற்றும் சமூக ஆதரவுகளை வழங்குவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.அத்துடன், பிரதேச செயலக மட்டத்தில் “இன்சா குழுக்கள்” (InSA) அமைக்கப்படவுள்ளதுடன், உதவிப் பிரதேச செயலாளரின் தலைமையில் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய தொடர்புடைய துறைசார் உத்தியோகத்தர்கள் இணைந்து செயற்படவுள்ளதாக குழுவில் தெரிவிக்கப்பட்டது.சிறுவர் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை தயாரிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் அனைத்து தொழிலாளர்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துகொள்வதன் முக்கியத்துவமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது. சுற்றுலா விசா உள்ளிட்ட முறைசாரா வழிகளின் ஊடாக வெளிநாடு செல்லும் நபர்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ தரவுகள் இல்லாத காரணத்தால், அவர்களது குடும்பங்களுக்கான நலன்புரி மற்றும் பாதுகாப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். எனவே, வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் தொடர்பில் முறையான தரவுத் தொகுதியொன்றைப் பேணுவதன் அவசியமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்போது, மாவட்ட மட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஊடாக அதன் முன்னேற்றம் கண்காணிக்கப்படவுள்ளதுடன், “இன்சா” (InSA) திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையொன்றை 2027 பெப்ரவரி மாதத்திற்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
2026-09-02
பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் தலைமையதிகாரி (நீக்கல்) சட்டமூலம் தொடர்பில் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக அவர்களின் தலைமையில் குறித்த குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இந்த விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உள்ளிட்ட அதிகாரிகள் குழுவின் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.2009ஆம் ஆண்டின் 35ஆம் இலக்கப் பாதுகாப்புப் பணியாட்தொகுதியின் தலைமையதிகாரி சட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டது. காலத்திற்கேற்ற தேவைகளுக்கு அமைவாக, முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக இந்தச் சட்டம் 2009ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.எனினும், நாட்டில் தற்போது நிலவும் நிலைமையைக் கருத்திற்கொண்டு, முப்படைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக தனியான அலுவலகமொன்றையோ பதவியொன்றையோ தொடர்ந்து பேண வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தினால், தற்போது முன்னெடுக்கப்படும் முப்படைகளின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் கீழ், குறித்த ஒருங்கிணைப்புப் பணிகள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.அத்துடன், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையைக் கருத்திற்கொள்ளும்போது, குறித்த அலுவலகத்தின் பணிகளை பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவுச் சுமையைக் குறைக்க முடியும் என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் 09ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்காக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள இந்தச் சட்டமூலத்திற்கு துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-09-02
மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, தேசிய கொள்கையொன்றை துரிதமாக வகுப்பதன் அவசியம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் குறித்த குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியதுடன், Coalition for Inclusive Impact (CII), ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (UNESCO) மற்றும் வறுமை பகுப்பாய்வு நிலையம் (CEPA) ஆகியன இணைந்து முன்னெடுத்த திட்டமொன்றின் ஆய்வு முடிவுகள் மற்றும் கொள்கைப் பரிந்துரைகள் தொடர்பான விளக்கங்கள் தொடர்புடைய விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.இதன்போது, மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்தல், காட்டு யானைகளின் உணவு மற்றும் நீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்தல், முத்துராஜவெல சதுப்புநிலத் தொகுதியைப் பாதுகாத்தல், முறைசாரா மீனவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பில் சமூகப் பங்கேற்பை அதிகரித்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.காட்டு யானைகளின் வாழ்விடங்களில் காணப்படும் நீர் மூலங்கள் மற்றும் உணவு வளங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, யானைகள் மக்கள் குடியிருப்புகளுக்குள் வருவதற்கான அபாயத்தைக் குறைப்பதற்கு பொருத்தமான முகாமைத்துவ வேலைத்திட்டமொன்று அவசியம் எனவும் குழு சுட்டிக்காட்டியது.அடையாளம் காணப்பட்ட யானை வழித்தடங்களில் முன்னுரிமை அடிப்படையில் 06 யானை வழித்தடங்களைத் துரிதமாக வர்த்தமானியில் அறிவித்தல், வனவிலங்கு சரணாலயங்களில் வாழ்விடங்களை மேம்படுத்துதல் மற்றும் பிரதேச மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை வலுப்படுத்துதல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இதனிடையே, முத்துராஜவெல சதுப்புநிலத் தொகுதியைப் பாதுகாப்பதற்காக, அங்கு அரசாங்கத்துக்குச் சொந்தமான காணிகளை முறையாக அளவீடு செய்து எல்லைகளை அடையாளப்படுத்துவதுடன், சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், சிறு அளவிலான மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவ சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.மனித–யானை மோதல் உள்ளிட்ட சுற்றாடல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கைக்குப் பொருத்தமான வெற்றிகரமான வழிமுறைகளை ஆய்வு செய்தல் ஆகியவற்றின் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.இந்தக் கூட்டத்தில் குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கிங்ஸ் நெல்சன், சுசந்த குமார நவரத்ன, கிட்னன் செல்வராஜ், சட்டத்தரணி சித்ரால் பெர்னாண்டோ, சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத், சுதத் பலகல்ல மற்றும் எம்.ஏ.சி.எஸ். சதுரி கங்கானி ஆகியோருடன் அதிகாரிகள் குழுவினரும் கலந்துகொண்டனர்.
2026-09-02
தியவன்னா ஓயா மற்றும் பாராளுமன்ற வளாகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்படும் நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று, அதனைத் துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் உறுப்பினர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியதுடன், தியவன்னா ஓயா நீர் நிறமாற்றம் அடைந்தமை தொடர்பில் நியமிக்கப்பட்ட செயலணியின் இறுதி அறிக்கை இதில் பரிசீலிக்கப்பட்டது.இந்த அறிக்கையில், தியவன்னா ஓயா மற்றும் பாராளுமன்றத்தைச் சூழவுள்ள நீரியல் கட்டமைப்பில் வீட்டு மட்ட கழிவுநீர், வர்த்தக மற்றும் கைத்தொழில் கழிவுகள் கலப்பது பிரதான நீர் மாசுபாட்டு மூலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதற்குத் தீர்வாக குறுகிய, மத்திய மற்றும் நீண்டகாலம் என மூன்று கட்டங்களைக் கொண்ட முகாமைத்துவத் திட்டமும் முன்மொழியப்பட்டுள்ளது.இதற்கு அமைய, கழிவுகள் நேரடியாக நீர்வழிகளில் கலக்கும் இடங்களை அடையாளம் கண்டு அவற்றைக் கட்டுப்படுத்துதல், திடக்கழிவுகள் நீர்வழிகளில் சேர்வதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை நிறுவுதல் மற்றும் நீரின் தரத்தை தொடர்ச்சியாகக் கண்காணித்தல் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், குறைந்த வருமானம் பெறும் குடியிருப்புப் பகுதிகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல், சட்டவிரோதமான முறையில் கழிவுகளை அகற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், சம்பந்தப்பட்ட அரசாங்ஙக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசியமும் குழுவினால் வலியுறுத்தப்பட்டது.இந்த வேலைத்திட்டத்தை தேசிய முன்னுரிமையாகக் கருதி, அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்று துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியமும் குழுவில் வலியுறுத்தப்பட்டது.குழுவின் உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மஞ்சுள சுரவீர ஆரச்சி, ரவீந்திர பண்டார, சதுர கலப்பத்தி, ஷாந்த பத்ம குமார சுபசிங்ஹ, அசித நிரோஷண எகொட விதான, தனுஷ்க ரங்கநாத் மற்றும் ஜகத் விதான ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

