logo

E   |   සි   |  

2021-03-25

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

சுற்றாடலை பாதுகாக்கும் பொறுப்புவாய்ந்த அனைத்து அதிகாரிகளையும் கொண்ட ஒன்றிணைந்த அமைச்சுசார் அலகொன்றை அமைக்க நடவடிக்கை - சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர

சுற்றாடல் அழிக்கப்படுகின்றமை தொடர்பில் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்குரிய நிலையில் குறிப்பிட்ட சம்பவங்களின் போது துரிதமாகவும் வினைத்திறனாகவும் செயற்படக்கூடிய அலகொன்றை அமைக்க கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற சுற்றாடல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர யோசனை முன்வைத்தார்.

அந்த அலகில் சுற்றாடல், வனசீவரசிகள், வன பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அமைச்சுக்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை போன்ற பொறுப்பு வாய்ந்த அரச நிறுவங்களின் பொறுப்புள்ள அதிகாரிகளும் உள்ளடப்படவேண்டும் என குழுவில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு சமாந்தரமாக, சுற்றாடல் அழிப்பு தொடர்பில் நாட்டில் போலிச்செய்திகள் பரவுவதை தடுப்பதற்கும், ஊடகங்களில் வெளியாகும் முக்கிய செய்திகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துவதற்கும் புதிய ஊடக அலகொன்றை அமைப்பதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.  

சுற்றாடல் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சுற்றாடல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் இங்கு நாடு பூராகவும் ஏற்பட்டுள்ள சுற்றாடல் சார் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

விசேடமாக, மணல் அகழ்வு தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கான தீர்வாக மணல் கொள்வனவு மற்றும் விற்பனை தொடர்பில் அரச நிறுவனமொன்றான தொழிநுட்ப நிறுவனம் ஒன்றின் ஊடாக மேற்கொள்வதற்கும், மணல் அகழ்வுக்காக குறைந்த வருமானம் பெரும் சமுர்த்தி பயனாளிகளுக்கு சந்தர்ப்பங்களை வழங்கி அதன் மூலம் குறைந்த வருமானம் பெறுபவர்கள் நியாயமான வருமானம் ஈட்டிக்கொள்ள உறுதுணையாக இருக்க சந்தர்ப்பம் வழங்குவதாகவும் சுற்றாடல் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், மணல் விலை அதிகரித்து காணப்படும் நிலையில் மணல் விலையை ஸ்திரமாக பேணுவதற்கு முறையான வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மணல் அகழ்வின் போது அனுமதிப்பத்திரம் பெறுபவர்களிடம் அதிக வைப்புக் கட்டணத்தை பெறுவதன் மூலம் அதனை மேலும் முறைமைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் மொனராகலை மாவட்டத்தில் தனமல்வில, புத்தல பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜகத் புஷ்பகுமார குழுவின் கவனத்துக்கு கொண்டுவந்த அதேவேளை, விசேட குழுவொன்றை அப்பகுதிக்கு அனுப்பி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து அது தொடர்பில் பூரண அறிக்கையொன்றை தனக்கு வழங்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தினார்.
காடுகளை மீள் நடுகை செய்வதற்கு சிவில் பாதுகாப்பது அணியினர் போன்ற நிறுவனங்களின் ஆதரவை பெறுதல், மன்னார் மற்றும் திருக்கோவில் பகுதிகளில் இல்மனைட் அகழ்வுக்காக அனுமதிப்பத்திரம் வழங்குதல் மற்றும் கருங்கற்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குதல் போன்ற விடயங்களும் அமைச்சுசார் ஆலோசனைக்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஷ்பகுமார, சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், மஞ்சுளா திசாநாயக்க, மற்றும் கபில அத்துகோரல ஆகியோரும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அமைச்சின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

1 2

3

 



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks