E   |   සි   |  

2021-02-24

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

லிட்ரோ காஸ் மற்றும் லிட்ரோ டேர்மினல் நிறுவனங்களின் கணக்காய்வுகள் கணக்காய்வாளர் நாயகத்தின் ஊடாக மேற்கொள்ளப்படாமை குறித்து கோப் குழு கேள்வி

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் லிட்ரோ காஸ் லங்கா நிறுவனம் மற்றும் லிட்ரோ டேர்மினல் லங்கா நிறுவனம் ஆகியன கணக்காய்வாளர் நாயகத்தின் அறிவிப்பைப் புறக்கணித்து தனியார் நிறுவனத்தின் ஊடாக கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டமை தொடர்பில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) கவனத்தில் எடுத்துக்கொண்டது.

இந்த இரு நிறுவனங்கள் தொடர்பான கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள கணக்காய்வாளர் நாயகத்துக்கு எவ்வித தடையும் இல்லையென சட்டமா அதிபர் ஊடாக ஆலோசனை பெறப்பட்டிருந்ததுடன், இந்த நிலைப்பாடு கணக்காய்வாளர் நாயகத்தினால் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் பணிப்பாளர் சபையின் தீர்மானத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு KPMG என்ற தனியார் நிறுவனத்தின் ஊடாக கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமை குறித்து கோப் குழு கேள்வியெழுப்பியிருந்தது.

பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் நேற்று (23) கூடிய கோப் குழுக் கூட்டத்தில், சீஷேல் தீவில் இயங்கிவந்த இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கிளை மூடப்பட்டமையால் 36 மில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கணக்காய்வு நடவடிக்கைகள் கணக்காய்வாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தபோதும், அதன் 99.94 வீத உரிமையைக் கொண்ட லிட்ரோ காஸ் லங்கா லிமிடட் மற்றும் 100 வீத உரிமையைக் கொண்ட லிட்ரோ டேர்மினல் லங்கா லிமிடட் ஆகிய நிறுவனங்கள் மாத்திரம் தனியார் நிறுவனங்களினால் கணக்காய்வுகளை மேற்கொண்டமை குறித்து கோப் குழுவின் தலைவர் கவனம் செலுத்தினார்.

பணிப்பாளர் சபையின் ஊடாக எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய தனியார் துறையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றின் ஊடாக கணக்காய்வை மேற்கொள்வதற்கு சட்டரீதியாக எவ்வித தடையும் இல்லை  என இங்கு கருத்துத் தெரிவித்த லிட்ரோ காஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

விசேடமாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள ஏனைய நிர்வாக நிறுவனங்களும் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளால் பாதிக்கப்படாதிருப்பதுடன், ஏனைய அரசாங்க நிறுவனங்களிலும் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் வலியுறுத்தினார். இவ்விடயம் தொடர்பில் கோப் குழு, சட்டமா அதிபரிடம் காரணங்களைக் கேட்டறிந்து, அதனை பிரதான கணக்காளரின் ஊடாகத் தெரியப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் மாலைதீவு மற்றும் சீஷேல் தீவுகளின் கிளைகள் மூடப்பட்டமையினால் ஏற்பட்ட நஷ்டம், குறித்த கிளைகளைத் திறப்பதற்கும் மூடுவதற்கும் கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் மற்றும் செலவு குறித்து விரைவில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் கோப் குழு, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அறிவித்தது.

இக்கூட்டத்தில் இராஜங்க அமைச்சர்களான நாளக கொடஹேவா, சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, பிரேம்நாத் சீ.தொலவத்த, எஸ்.எம்.மரிக்கார், சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரும், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், லிட்ரோ காஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

1



தொடர்புடைய செய்திகள்

2026-09-01

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கைசார் முன்மொழிவுகள் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சமர்ப்பிப்பு!

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 29) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது.  ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக  நடத்தப்பட்டதுடன், இது அதன் இரண்டாவது நிகழ்ச்சியாக அமைந்தது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்காகக் கொண்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகள் பலரும் இணைந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியஆராச்சி, சட்டத்தரணி சுசந்த தொடவத்த, லால் பிரேம்நாத், சுனில் ராஜபக்ஷ, எம்.கே.எம். அஸ்லம், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், அபுபக்கர் அதம்பாவா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார, முஹம்மது பைசல், ஞானமுத்து ஸ்ரீநேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இங்கு, இளைஞர் சமூகம், கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான பிரச்சினைகள், தொடக்கக் கல்வி ஒழுங்குமுறை, இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை விரிவுபடுத்துதல், தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி மையங்களை நிறுவுதல், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்தல் மற்றும் தகவல் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல், அத்துடன் உகந்த விளையாட்டு அரங்க வசதிகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்களது யோசனைகளையும் ஆலோசனைகளையும் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.இந்த நிகழ்ச்சிக்கான அனுசரணையை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் வழங்கியிருந்தது.


2026-09-01

கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் நடத்தப்படும் “Voice to Policy” நிகழ்ச்சி செப்டெம்பர் 05ஆம் திகதி

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல் அடிப்படையிலான பிராந்திய நிகழ்ச்சித் தொடரான “Voice to Policy” மூன்றாவது நிகழ்வு, கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக செப்டெம்பர் 05ஆம் திகதி கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8   என்ற இணைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து செப்டெம்பர் 03ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், பங்கேற்பாளர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது இயக்கத்தையும் ஊக்குவிக்கும் சின்னங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும்.CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.


2026-08-21

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான “Voice to Policy” நிகழ்ச்சி ஓகஸ்ட் 29ஆம் திகதி

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி மட்டக்களப்பு ‘East Lagoon’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின்  இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (ஓக. 19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இதற்கான ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஓகஸ்ட் 24ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.மேலும், நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றும் ஒன்றியம் அறிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒன்றியத்தின் கலந்துரையாடலில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற, இத்தொடர் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கும் அபிவிருத்திப் பங்காளர்களான CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதேவேளை, இக்கூட்டத்தின்போது ‘INTER Pares’ திட்டத்தின் பிரதிநிதிகளுடன் இணையவழி கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஒன்றியத்தின் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு அந்த நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கலந்துரையாடலை ஒருங்கிணைப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்சய விக்னராஜா  அவர்களும் இதில் கலந்துகொண்டார்.


2026-08-18

உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று தலைவர்களின் நியமனங்களுக்கு அனுமதி

உயர் பதவிகள் பற்றிய குழு, அரசாங்க அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான நியமனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் (தனியார்) தலைவர் பதவிக்கு திரு. S.A.M. பீரிஸ், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவராக திரு. H.M.P. ரத்நாயக்க மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக டொக்டர் (திருமதி) W.M.V. வணசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கு குழு அனுமதி வழங்கியுள்ளது.இக்கூட்டம் கௌரவப் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குமார ஜயகொடி மற்றும் தயாசிறி ஜயசேகர (சட்டத்தரணி) ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks