E   |   සි   |  

2021-02-18

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் பதவிக்கெதிரான முறைகேடுகளை கண்டிக்கிறோம் - பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம்

இலங்கையின் முதல் பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி உயர்வு பெற்ற பிம்ஷானி ஜாசிங்காரச்சியின் தொழில்ரீதியான உரிமைகள் மற்றும் தொழிலின் பாதுகாப்புக்காக தமது ஒன்றியம் கட்சி பேதமின்றி முன்னிற்பதாகவும், அவருக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவதாவும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அறிவித்தது.

பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பணிப்பாளராக பணியாற்றிய பிம்ஷானி ஜாசிங்காரச்சியின் நியமனத்துக்கு சவால் விடுப்பதை கண்டிப்பதாக ஒன்றியத்தின் தலைவி ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தெரிவித்தார்.

இன்று (18) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி விஜேரத்ன மற்றும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும் பணியாட்கள் தொகுதியின் பிரதானியுமான குஷானி ரோஹணதீர ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபரின் நியமனம் தொடர்பில் எமது ஒன்றியம் மிக்க மகிழ்ச்சி அடைந்ததுடன், அது ஆண்களை பெரும்பான்மையாக கொண்ட பொலிஸ் திணைக்களம் போன்ற நிறுவனமொன்றில் பெண் ஒருவர் உயர் பதவியை அடைவது ஆண் - பெண் சமத்துவத்துக்கு பங்களிப்பு செய்வதாக கருதுவதாகவும் இங்கு ஒன்றியத்தின் தலைவி குறிப்பிட்டார்.  

எனினும், அவருக்கு எதிராக எழுந்துள்ள நிலைமை தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிடும் அதேவேளை, இலங்கையில் பெண்களை பொலிஸ் சேவைக்கு இணைத்துக்கொள்வதாயின் அவர்களுக்கு தமது பதவி உயர்வுகளை முறையாகப் பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்க வேண்டும் என தான் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே இங்கு சுட்டிக்காட்டினார்.

இவ்வளவு முன்னேற்றமடைந்த உலகில் பெண் என்ற ஒரு காரணத்தினால் ஏதாவதொரு துறையில் உயர்வடைவதற்கான சந்தர்ப்பத்தை பறிக்க முயற்சிப்பது நியாயமற்றது என பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு வலியுறுத்தினர்.

பிம்ஷானி ஜாசிங்காரச்சியின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியை சவாலுக்குட்படுத்தி சிலர் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை பாராளுமன்றத்திலுள்ள அனைத்து பெண் உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி கண்டிப்பதாகவும், அதற்கு எதிராக இந்நாட்டின் அனைத்து பெண்களும், தமது மகள்மாரின் வெற்றியை எதிர்பார்த்துள்ள அனைத்து பெற்றோர்களும் ஒன்றுபட வேண்டும் என இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உப தலைவி திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல தெரிவித்தார்.

இதேவேளை, பிம்ஷானி ஜாசிங்காரச்சி தனது கடமையை சரியான முறையில் செய்ததால் அவருக்கான பதவி உயர்வை பெற்றுக்கொள்வதற்கு எதிராக இந்நாட்டின் ஆண்கள் சமூகம் செயற்படுவது அதிருப்தியானதாகும் என இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற பெண்  உறுப்பினர்களின் ஒன்றியத்தின் உப தலைவி ரோஹிணி விஜேரத்ன குறிப்பிட்டார். இவ்வாறு பெண்களை வன்முறைக்குட்படுத்துவது ஒரு நாடாக முன்னேறிச் செல்வதற்கு தடையானது எனவும், விசேடமாக பணியிடங்களில் பெண்களை உடல் ரீதியாகவோ அல்லது உளரீதியாகவோ கொடுமைப்படுத்துவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் தேசிய ரீதியில் பெண்கள் தலைமைத்துவத்துக்கு நியமிக்கப்படுவதற்கான பல்வேறு உதாரணங்கள் உள்ளன எனவும், உலகின் முதல் பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையார் நியமிக்கப்பட்டமை, உலகின் முதலாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட பெண் ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் நியமிக்கப்பட்டமை, பிரதம நீதியரசராக ஷிராணி பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டமை போன்றவற்றை உதாரணமாக குறிப்பிட முடியும் எனவும் சுட்டிக்காட்டிய பெண் உறுப்பினர்கள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியை பெண்ணொருவர் வகிக்க முடியாது என கூறுவது பொருத்தமற்றது என்றனர்.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் நோக்கம் சட்டவாக்கத்தில் பெண்களின் உரிமைகளுக்காக முன்னிற்பதாகும் என பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவி இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே இங்கு தெரிவித்தார். இதனால் இந்நாட்டில் செயற்பாட்டு அரசியலில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கு ஒன்றியத்தினால் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விழிப்புணர்வூட்டி அதற்கான ஊக்குவிப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

1



தொடர்புடைய செய்திகள்

2026-11-21

இடைநடுவில் கைவிடப்பட்ட 72 கல்விஅபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் வெளிப்படுத்தப்பட்டன

கல்வி, உயர்கல்விமற்றும் தொழிற்கல்வி அமைச்சின் 2021–2023நிதியாண்டுகளுக்குரிய மூவாண்டு அறிக்கைகள், 2024 ஆம்ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை ஆகியவற்றை ஆராய்வதற்காக, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கபீர்ஹாசீம் தலைமையில் அண்மையில் (நவ. 19) பாராளுமன்றத்தில் கூடியஅரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் 2018–2021காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட 72அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டன. இடைநடுவில் கைவிடப்பட்ட இந்த 72 திட்டங்களுக்காக 1,664 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக இதன்போது தெரியவந்தது. அவற்றில் 35 திட்டங்கள் தற்போது பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன், 13 திட்டங்களின் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், நான்கு திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், ஒப்பந்தங்கள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக 20 திட்டங்களின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் தெரிவித்தனர். எவ்வாறாயினும், குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்அதிகாரிகள் குழுவுக்கு அறிவித்தனர். 2019  ஆம் ஆண்டில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் தலா மூன்று தேசிய பாடசாலைகளை நிறுவும் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் பௌதிக அபிவிருத்தி மற்றும் உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக சுமார் 1,600 மில்லியன்ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எவ்வாறாயினும், கொள்கை ரீதியான தீர்மானங்களின் அடிப்படையில் குறித்த வேலைத்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்காமலிருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட நிதி மற்றும் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் தொடர்பான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு  குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. இதற்கிடையில், அமைச்சினால் கட்டளையிடப்பட்ட கணினித் தொகுதியொன்று தொழில்நுட்ப விவரக்குறிப்புகளுக்கு அமைவாக இல்லாத காரணத்தினால் பொறுப்பேற்கப்படவில்லை என்பதுடன், அதற்கான கொடுப்பனவுகளும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரியவந்தது. இது தொடர்பில் விநியோகஸ்தரினால் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. தேசிய கல்வி முகாமைத்துவத்தகவல் கட்டமைப்பின் (NEMIS)முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், ஆசிரியர் தகவல்கள் மற்றும் மாணவர்களின் மதிப்பீட்டுத் தரவுகளை உள்ளீடுசெய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சில மாகாணங்களில் ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இந்தக் கட்டமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படுவதாகவும், இதனை நாடளாவிய ரீதியில் அனைத்து மாகாணங்களுக்கும் தேசிய பாடசாலைகளுக்கும் விரிவுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது. மேலும், மூலதனஒதுக்கீடுகளைப் பயன்படுத்துவதில் மதிப்பீடுகளைத் தயாரிப்பதில் ஏற்படும் தாமதங்கள்,தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை மற்றும்கேள்விப்பத்திர நடைமுறைகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாகத் தடைகள்ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்தது. கணக்காய்வு வினாக்களுக்குப் பதிலளிப்பதில்ஏற்படும் தாமதங்கள் தொடர்பிலும் விசாரணை செய்த குழு, அவற்றைத்துரிதமாகத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இந்தக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான நளின் ஹேவகே மற்றும் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர ஆகியோரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ், ஹெக்டர் அப்புஹாமி, சந்தன சூரியாராச்சி, சானக மாதுகொட, ருவன்திலக ஜயகொடி, ஒஷானி உமங்கா, மஞ்சுள சுரவீர ஆராச்சி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, வைத்தியர் ஜனக சேனாரத்ன, சுசந்த குமார நவரத்ன, லால் பிரேமநாத், சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க,  டீ. கே. ஜயசுந்தர மற்றும் சுனில் ரத்னசிறி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-11-21

உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவ ஜனநாயகப் பாராளுமன்றக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான சர்வதேச செயலமர்வை ஏற்பாடு செய்த பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம்

‘அனைவருக்கும் ஏற்ற பாராளுமன்றமொன்றை உருவாக்குதல்’ எனும் தலைப்பிலான இரண்டு நாள் சர்வதேச செயலமர்வை  பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் கடந்த நவம்பர் 19 மற்றும் 20ஆம் திகதிகளிலில் ஏற்பாடு செய்திருந்தது. இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள், சர்வதேச பாராளுமன்றப் பிரதிநிதிகள், பாலின சமத்துவ நிபுணர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.அனைத்துப் பிரஜைகளினதும் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்குப் பதிலளிக்கக்கூடிய, மேலும் உள்ளடக்கிய, பிரதிநிதித்துவம் மிக்க பாராளுமன்றத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்வதே இந்தச் செயலமர்வின் நோக்கமாகும். சர்வதேச அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், சமமான பங்கேற்புக்குத் தடையாக உள்ள காரணிகளை ஆராய்வதற்கும், பாராளுமன்றச் செயற்பாடுகள் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் நடைமுறைகளில் பெண்கள் உள்ளிட்ட போதிய பிரதிநிதித்துவம் இல்லாத குழுக்களுக்கு அர்த்தமுள்ள வகையில் குரல் கொடுப்பதற்கான நடைமுறை அணுகுமுறைகளை அடையாளம் காண்பதற்கும் இந்தச் செயலமர்வு தளமொன்றை ஏற்படுத்தியது.இந்தச் செயலமர்வு குறிப்பாகப் பாராளுமன்ற மகளிர் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. உலகளாவிய ரீதியில் பாராளுமன்றங்களின் ஆற்றலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் முதன்மைத் திட்டமான Inter Pares உடன் இணைந்து இந்தச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இது பெண்கள் மற்றும் இளைஞர்களை ஜனநாயகத்தில் வலுப்படுத்தும் முயற்சியின் கீழ் International IDEA நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.2026 நவம்பர் 19 ஆம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர்  வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தூதுவர் மாண்புமிகு சில்வியா ஹார்ட்லீஃப், International IDEA நிறுவனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் லீனா ரிக்கிலா தமாங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அத்துடன், பாராளுமன்ற மகளிர் உறுப்பினர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் சர்வதேசப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.நிகழ்வில் உரையாற்றிய கௌரவ சபாநாயகர், ஜனநாயகச் செயற்பாடுகளில் பெண்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத ஏனைய சமூகத்தினரின் அர்த்தமுள்ள பங்கேற்பை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்த முக்கிய முயற்சியை ஏற்பாடு செய்வதில் பங்களிப்பு வழங்கிய பாராளுமன்ற மகளிர் உறுப்பினர்கள் ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றியம், Inter Pares, International IDEA மற்றும் அனைத்து பங்காளி நிறுவனங்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.பராமரிப்புப் பொருளாதாரத்தை அங்கீகரித்து அதனை வலுப்படுத்துதல், தேசிய மகளிர் ஆணைக்குழுவை நிறுவுதல் மற்றும் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட துறைகளில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் முன்னெடுத்துவரும் முயற்சிகளையும் சபாநாயகர் பாராட்டினார்.கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவருமான சரோஜா சாவித்திரி போல்ராஜ் உரையாற்றுகையில், அனைத்துப் பிரஜைகளினதும் குறிப்பாகப் பெண்கள், சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். அத்துடன், பாராளுமன்ற மற்றும் ஜனநாயகச் செயற்பாடுகளில் உள்ளடக்கிய மற்றும் சமத்துவமான பங்கேற்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.ஆரம்ப அமர்வில் உரையாற்றிய கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் சர்வதேச அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதும், அறிவு மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதும் முக்கியமானது எனக் குறிப்பிட்டார். இந்தச் செயலமர்வை ஏற்பாடு செய்வதற்கு வசதியளித்த அனைத்து தரப்பினருக்கும் பங்காளி நிறுவனங்களுக்கும் அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.பாராளுமன்ற செயலாளர் நாயகமும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயலாளருமான குஷானி ரோஹணதீர அவர்கள்  சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசுகையில், உள்ளடக்கிய பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் சர்வதேச அனுபவங்களைப் பெற்றுக்கொள்வது, அறிவைப் பகிர்ந்துகொள்வது மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் தூதுவர் மாண்புமிகு சில்வியா ஹார்ட்லீஃப் மற்றும் International IDEA நிறுவனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் லீனா ரிக்கிலா தமாங் ஆகியோர் உள்ளடக்கிய மற்றும் பிரதிநிதித்துவம் மிக்க ஜனநாயக நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினர்.பாராளுமன்றத்தின் ஆற்றலை வலுப்படுத்துதல், பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் அரசியல் தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாடுகளில் பெண்கள் உள்ளிட்ட போதிய பிரதிநிதித்துவம் இல்லாத குழுக்கள் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், உள்ளடக்கிய பாராளுமன்ற நிர்வாகத்தை முன்னேற்றுவதில் சர்வதேச ஒத்துழைப்பு, அனுபவப் பகிர்வு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்வதன் பெறுமதியையும் வலியுறுத்தினர்.பெண்களின் குரல்கள், அனுபவங்கள் மற்றும் கண்ணோட்டங்கள் பாராளுமன்றச் செயற்பாடுகள், அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் மற்றும் தேசிய மட்டத் தீர்மானம் மேற்கொள்ளும் நடைமுறைகளில் அர்த்தமுள்ள வகையில் பிரதிபலிப்பதை உறுதிப்படுத்துவதில் பாராளுமன்றங்களின் வகிபாகம் இந்தச் செயலமர்வின் முக்கிய கருப்பொருளாக அமைந்தது. குறிப்பாக, இன மற்றும் மத சிறுபான்மையினரைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இயலாமையுடைய பெண்கள் உள்ளிட்ட போதிய பிரதிநிதித்துவம் இல்லாத சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் தடைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.பாலின உணர்வுடனான வரவு செலவுத் திட்டமிடல் தொடர்பான நடைமுறை அணுகுமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. தேசிய வரவு செலவுத் திட்டங்கள் மற்றும் பொதுக் கொள்கைகள் பெண்கள் மற்றும் ஆண்களின் வெவ்வேறான தேவைகள், முன்னுரிமைகள் மற்றும் அனுபவங்களை எவ்வாறு சிறந்த முறையில் கவனத்திற்கொள்ள முடியும் என்பதை ஆராய்வதற்கு இது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பளித்தது. பொதுநிதி வளங்கள் மற்றும் கொள்கைத் தீர்மானங்கள் ஊடாக அதிக சமத்துவத்தையும் சமூக உள்ளடக்கத்தையும் உறுதிப்படுத்துவதில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள முக்கிய பொறுப்பு குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்த அமர்வுகளில் கலந்துகொண்டு தமது கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.மேலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்றப் பிரதிநிதிகள் மற்றும் நிபுணர்களுடன் அனுபவங்களையும் சிறந்த நடைமுறைகளையும் பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்பும் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தச் செயலமர்வின் மூலம் கிடைத்தது.இச்செயலமர்வில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட முக்கிய பிரமுகர்களில், அயர்லாந்து செனட் சபையின் உறுப்பினரும் அயர்லாந்து மகளிர் பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவியுமான செனட்டர் அலிசன் கொமின், ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தின் முன்னாள் தலைமை அதிகாரி மாண்புமிகு அலிசன் ஜோன்ஸ்டன், மலேசிய செனட்டர் கௌரவ கலாநிதி ஜுபித்ரி பின் ஜோஹா, சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரமோனா விஜயராசா மற்றும் அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாராளுமன்ற ஆய்வாளர்கள் மற்றும் வரவுசெலவுத் திட்ட நிபுணர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.பெண் மேயர்கள், பிரதி மேயர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்தச் செயலமர்வுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன், இலங்கைப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இரண்டு நாள் நிகழ்ச்சித்திட்டத்தில் அவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


2026-11-21

வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதில் நடைமுறையிலுள்ள வரிக் கொள்கைகள் மற்றும் சுங்க அனுமதி நடைமுறையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்து வழிவகைகள் பற்றிய குழுவில் அவதானம்

இலங்கையின் வாகன இறக்குமதிச் செயற்பாடுகள், வாகன இறக்குமதிக்குப் பொருந்தும் வரிக் கொள்கைகள், மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களைச் சுங்கத்திலிருந்து விடுவித்துக்கொள்வதில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் வழிவகைகள் பற்றிய குழுவில் கலந்துரையாடப்பட்டது.குறித்த குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையில் அண்மையில் (நவ. 18) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.குறிப்பாக, வாகன இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை, அவற்றின் பெறுமதி மற்றும் அவற்றுக்குப் பொருந்தும் வரி விதிப்பு முறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. வாகனங்களை இறக்குமதி செய்யும்போது இயந்திரத்தின் கொள்ளளவு, CIF பெறுமதி மற்றும் உற்பத்தி வரி உள்ளிட்ட பல்வேறு வரிக் கூறுகளின் அடிப்படையில் வரிகளைக் கணக்கிடும் நடைமுறை சிக்கலானதாக இருப்பதுடன், சுங்க மதிப்பீடுகள் தொடர்பில் எழும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இறக்குமதி செய்யப்படும் பொருட்களைச் சுங்கத்திலிருந்து விடுவித்துக்கொள்வதற்கு சுங்கத் திணைக்களத்திற்கு மேலதிகமாகப் பல அரச நிறுவனங்களிடமிருந்தும் அனுமதி பெறவேண்டியிருப்பதால் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம் உள்ளிட்ட தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைந்த டிஜிட்டல் முறைமை இல்லாத காரணத்தினால் அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் ஒருங்கிணைப்புப் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.இந்தத் தாமதங்கள் காரணமாகத் துறைமுகங்களில் கொள்கலன்களைத் தடுத்து வைக்க வேண்டிய நிலை ஏற்படுவதால், இறக்குமதியாளர்கள் மேலதிக தாமதங்களையும் களஞ்சியப்படுத்தல் கட்டணங்களையும் சுமக்க வேண்டியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். எனவே, தொடர்புடைய அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, இறக்குமதி செய்யப்படும் பொருட்களை விடுவிக்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.மேலும், மின்சார வாகனங்களின் இறக்குமதி மற்றும் பயன்பாடு தொடர்பில் காணப்படும் ஒழுங்குமுறை மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, மின்சார வாகனங்களின் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் மின்கலங்களை அகற்றுதல் அல்லது மீள்சுழற்சி செய்வதற்கான தெளிவான பொறிமுறையொன்று நாட்டில் இல்லாதமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் சந்தர்ப்பத்திலேயே, அவற்றின் மின்கலங்களின் ஆயுட்காலம் முடிவடைந்த பின்னர் அவற்றை அகற்றுதல் அல்லது மீள்சுழற்சி செய்வது தொடர்பான பொறுப்பை இறக்குமதியாளர்கள் அல்லது உற்பத்தியாளர்களிடமிருந்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அத்துடன், மின்சார வாகனங்கள் மற்றும் அவற்றின் மின்கலங்களுக்குத் தேவையான தரநிலைகள் மற்றும் சுங்க வரிகளைக் கணக்கிடுவதற்குப் பயன்படுத்தப்படும் HS குறியீடுகளை முறையாக அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக நடைமுறையிலுள்ள வரிக் கொள்கைகளை எளிமைப்படுத்துவதுடன், சாதாரண மக்களுக்கும் தாங்கக்கூடிய விலையில் அவற்றைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வரிக் கொள்கைகளை வகுக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக, மின்சார வாகனங்களை மின்னேற்றம் செய்யும்போது தேசிய மின்சாரக் கட்டமைப்பின் மீது ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்காக சூரிய சக்தி மற்றும் மின்சாரத்தைச் சேமிக்கும் மின்கலக் கட்டமைப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.அதற்கமைய, மின்சார வாகனங்களின் இறக்குமதி மற்றும் பயன்பாட்டிற்குப் பொருத்தமான வரிச் சலுகைகள் மற்றும் கொள்கை ரீதியான ஊக்குவிப்புகளை அறிமுகப்படுத்துதல், சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக சுங்க வகைப்பாடு மற்றும் HS குறியீடுகளைப் புதுப்பித்தல், அத்துடன் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் மின்கலங்களைச் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் முகாமைத்துவம் செய்வதற்கான முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் ஆகியவற்றின் அவசியம் குறித்தும் மேலும் கலந்துரையாடப்பட்டது.இந்தக் குழுக் கூட்டத்தில் கௌரவ பிரதி அமைச்சர்களான எரங்க வீரரத்ன, நிஷாந்த ஜயவீர மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அசோக சபுமல் ரன்வல, கலாநிதி நந்தன மில்லகல மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.


2026-11-20

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம்

சமையல் எரிவாயு விவகாரத்தில் பாவனையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் தீர்மானங்கள் எடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையை வலியுறுத்தியது. சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி அவர்களின் தலைமையில் அண்மையில் (நவ. 18) கூடியபோதே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் சமையல் எரிவாயுவை விநியோகிக்கும் தனியார் நிறுவனம் காஸ் சிலிண்டரின் விலைய கணிசமாக அதிகரித்தமை குறித்துக் கலந்துரையாடுவதற்காக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அதிகாரிகள் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். சமையல் எரிவாயு விலை அதிகரிப்பினால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் சௌகரியம் தொடர்பிலேயே தாம் இவ்விடயத்தில் தலையிட்டதாகக் குறிப்பிட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர், சமையல் எரிவாயு தொடர்பான விலை நிர்ணயத்திற்கான அதிகாரம் தமது அதிகாரசபைக்கு இல்லையென்றும் தெரிவித்தார். இருந்தபோதும், குறித்த தனியார் நிறுவனத்துடன் கலந்துரையாடல்களை நடத்தியதன் அடிப்படையிலேயே விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் குறித்த தனியார் நிறுவனத்தின் சந்தைப் பங்கு குறைவாக இருப்பதால், தமக்கான எரிவாயுவை அதிக விலைகொடுத்துக் கொள்வனவு செய்ய நேர்வதால் கொள்வனவு செய்த விலையின் அடிப்படையில் எரிவாயு சிலிண்டலின் விலையை அதிகரிக்க நேர்ந்ததாக அந்நிறுவனம் தமக்கு விளக்கமளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.இருந்தபோதும், எதிர்காலத்தில் சமையல் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் உறுதிசெய்யுமாறும், விலையேற்றங்களினால் பாவனையாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறும் குழு இங்கு வலியுறுத்தியது. இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, எம்.ஏ.சீ.எஸ்.சத்துரி, சுசந்த குமார நவரத்ன, சுதத் பலகல்ல, கிட்ணன் செல்வராஜ் மற்றும் ஞானமுத்து ஸ்ரீநேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks