பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2021-02-12
செய்தி வகைகள் : குழு செய்திகள்
ஒட்டுமொத்த நீதிக் கட்டமைப்பில் பாரிய சீர்திருத்தம் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் பணியில் நிபுணர்கள் குழு செயற்பட்டுக்கொண்டிருக்கும் அதேநேரம், தண்டனை சட்டம், சிவில் சட்டம் மற்றும் வர்த்தக சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட பூரணகால 3 உபகுழுக்கள் செயற்படுவதாக கௌரவ நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
குற்றவியல் நீதிக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் ஆராயும் நோக்கில் நேற்று (11) நடைபெற்ற நீதி அமைச்சு தொடர்பான ஆலோசனைக் குழுவிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகமும், முன்னாள் நீதித்துறை அதிகாரியுமான திரு.டிகிரி கே.ஜயதிலகவின் முன்வைத்தைலைத் தொடர்ந்து சமுதாயஞ்சார் சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. தண்டனை சட்டம் மற்றும் நீதியின் எண்ணக்கரு என்பன ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டிருப்பதுடன், ஒரு நபரை குற்றவாளி என முத்திரை குத்துவதைவிட பொறுப்புள்ள பிரஜையாக சமூகத்தில் ஒப்படைப்பது முக்கியமானது என உதவி செயலாளர் நாயகம் குழுவில் தெரிவித்தார்.
இந்த இலக்கை அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டு சக்கரங்களின் ஊடாக அடைய முடியும் என்றும் பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். முதலாவதாக தேவையான சீர்திருத்தங்களை நோக்கிக் கொண்டு செல்வதற்கான அரசியல் தலைமைத்துவத்தை உள்ளடக்கிய அரசியல் சக்கரம் காணப்படுகிறது. இரண்டாவது சக்கரமாக உரிய மறுசீரமைப்பை ஏற்படுத்துவதற்கு பல்வேறு துறைகளில் தமது நிபுணத்துவத்தை வழங்குவதற்கான துறைசார் விற்பன்னர்கள் மற்றும் அதிகாரிகள் காணப்படுகின்றனர் என்றார்.
தீர்மானம் எடுக்கும் செயற்பாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்த பங்களிப்புச் செலுத்தக் கூடிய அனைவரையும் உள்ளடக்கிக் கொள்வதே அமைச்சின் எதிர்பார்ப்பு என கௌரவ அமைச்சர் அலி சப்ரி இங்கு தெரிவித்தார். அத்துடன், கொவிட் தொற்றுநோய்க்கு முன்னர் சாதாரண சூழ்நிலையில் 11,000 பேருக்கு மாத்திரமே இருக்கக் கூடிய இடத்தில் ஏறத்தாழ 30,000 முதல் 33,000 பேர் சிறையில் இருந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஏறத்தாழ 8,000 பேர் மாத்திரமே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும் எண்ணிக்கையானவர்கள் தடுப்புக்காவலில் உள்ளனர். 90 வீதமானவர்கள் அல்லது விளக்கமறியலில் உள்ள அதிகமானவர்கள் போதைக்கு அடிமையானவர்கள், போதையுடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் அல்ல என்றார்.
2018-2019ஆம் ஆண்டு அரசாங்க இராசயனப் பகுப்பாய்வுத் திளணக்களத்தின் புள்ளிவிபரங்களின் படி 114 வழக்குகள் மாத்திரமே தூய்மையான போதைப் பொருள்களை வைத்திருந்தமை தொடர்பானவை என அமைச்சர் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்டவர்களில் 99 வீதமானவர்கள் ஏறத்தாழ 3,300 பேர் 2.5 கிராம் போதைப் பொருளை வைத்திருந்தவர்களாகும். இதுபோன்ற சிறிய வழக்குகளால் பாரிய போதைப்பொருள் குற்றச்செயல்கள் குறிந்த வழக்குகள் மேல் நீதிமன்றத்தில் எவ்வாறு தேங்கியுள்ளன என்பதையும் அமைச்சர் விளக்கினார்.
அதேநேரம், போதைக்கு அடிமையானவர்களை பாரிய போதைப்பொருள் குற்றவாளிகளுடன் இணைவதற்கு அனுமதித்து அவர்களை பாரிய போதைப்பொருள் குற்றவாளிகளாக்குவதைவிட, சமுதாயஞ்சார் சீர்திருத்தம் மிகவும் முக்கியமானது என்றும் கௌரவ அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
வர்த்தகப் பெறுமதி மிக்க இடங்களில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலை, பெண்கள் சிறைச்சாலை மற்றும் புதிய மகசின் சிறைச்சாலை என்பவற்றை தற்பொழுதிருக்கும் அளவைவிட 10 மடங்கு விஸ்தீரனம் கொண்டதாக ஹொரணையில் அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை 250 ஏக்கர் நிலப்பரப்பை வழங்கியிருப்பதாகவும், சிறைச்சாலைகளை மாற்றுவதற்கான நடவடிக்கைள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு கௌரவ இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.
அரசாங்க இராசயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்திலிருந்து அறிக்கைகள் கிடைப்பதில் கணிசமானளவு காலதாமதம் ஏற்படுவதால் நீதி மன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படுவதிலும் காலதாமதம் ஏற்படுவதாக கௌரவ இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இங்கு குறிப்பிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதி அமைச்சர் இதனைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறினார்.
சட்டம், குற்றம் மற்றும் தண்டனை போன்ற விடயங்களை மாணவர்களின் பாடசாலை பாடநெறிகளில் உள்ளடக்கி, ஆரம்பத்திலேயே இவ்விடயங்கள் பற்றி அவர்களுக்கு அறிவூட்டுவது அவசியமானது என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தெரிவித்தார். பாடசாலை பாடத்திட்டத்தில் சட்டக் கல்வியை உள்ளடக்குவதற்கான செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் இதற்குப் பதிலளித்தனர்.
சிறுவர்களுக்கான சட்டத்தை நிறைவேற்றும்போது அது அவர்களின் எதிர்காலம் மற்றும் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் இதற்குத் தனியான பொறிமுறையின் அவசியத்தை பரிசீலிக்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.
சட்டக்கல்லூரிக்கான பரீட்சைகள் கட்டாயம் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என்ற விடயம் குறித்து கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நீதி அமைச்சர், சட்டக் கல்விப் பேரவையினாலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றார். புதிய மறுசீரமைப்புக்கள் சட்டக் கல்லூரிக்கான நுழைவுப் பரீட்சையில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், வழமைபோன்று மூன்று மொழிகளில் நடத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். துறையின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கும் சட்டக் கல்வி மற்றும் நடைமுறையின் தரத்தை மேம்படுத்துவதற்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் விளக்கமளித்தார்.
நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கௌரவ இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, சுசில் பிரேமஜயந்த மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான வீரசுமன வீரசிங்க, ஜீ.ஜீ.பொன்னம்பலம், சாகர காரியவசம், உதயன கிரிந்திகொட, மதுர விதானகே, ஜயந்த வீரசிங்க, சார்ள்ஸ் நிர்மலநாதன், கெவிந்து குமாரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
2026-09-01
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 29) மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்றது. ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வு கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக நடத்தப்பட்டதுடன், இது அதன் இரண்டாவது நிகழ்ச்சியாக அமைந்தது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதை நோக்காகக் கொண்ட இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் யுவதிகள் பலரும் இணைந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சந்தன சூரியஆராச்சி, சட்டத்தரணி சுசந்த தொடவத்த, லால் பிரேம்நாத், சுனில் ராஜபக்ஷ, எம்.கே.எம். அஸ்லம், வைத்தியர் இளையதம்பி சிறிநாத், அபுபக்கர் அதம்பாவா, லெப்டினன்ட் கொமாண்டர் (ஓய்வு) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜி.டி.சூரியபண்டார, முஹம்மது பைசல், ஞானமுத்து ஸ்ரீநேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.இங்கு, இளைஞர் சமூகம், கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான பிரச்சினைகள், தொடக்கக் கல்வி ஒழுங்குமுறை, இளைஞர்களின் அரசியல் பங்கேற்பை விரிவுபடுத்துதல், தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி மையங்களை நிறுவுதல், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்தல் மற்றும் தகவல் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்தல், அத்துடன் உகந்த விளையாட்டு அரங்க வசதிகளின் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்களது யோசனைகளையும் ஆலோசனைகளையும் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.இந்த நிகழ்ச்சிக்கான அனுசரணையை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் வழங்கியிருந்தது.
2026-09-01
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல் அடிப்படையிலான பிராந்திய நிகழ்ச்சித் தொடரான “Voice to Policy” மூன்றாவது நிகழ்வு, கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக செப்டெம்பர் 05ஆம் திகதி கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து செப்டெம்பர் 03ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், பங்கேற்பாளர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது இயக்கத்தையும் ஊக்குவிக்கும் சின்னங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும்.CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
2026-08-21
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி மட்டக்களப்பு ‘East Lagoon’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (ஓக. 19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இதற்கான ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஓகஸ்ட் 24ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.மேலும், நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றும் ஒன்றியம் அறிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒன்றியத்தின் கலந்துரையாடலில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற, இத்தொடர் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கும் அபிவிருத்திப் பங்காளர்களான CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதேவேளை, இக்கூட்டத்தின்போது ‘INTER Pares’ திட்டத்தின் பிரதிநிதிகளுடன் இணையவழி கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஒன்றியத்தின் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு அந்த நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கலந்துரையாடலை ஒருங்கிணைப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்சய விக்னராஜா அவர்களும் இதில் கலந்துகொண்டார்.
2026-08-18
உயர் பதவிகள் பற்றிய குழு, அரசாங்க அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான நியமனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் (தனியார்) தலைவர் பதவிக்கு திரு. S.A.M. பீரிஸ், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவராக திரு. H.M.P. ரத்நாயக்க மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக டொக்டர் (திருமதி) W.M.V. வணசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கு குழு அனுமதி வழங்கியுள்ளது.இக்கூட்டம் கௌரவப் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குமார ஜயகொடி மற்றும் தயாசிறி ஜயசேகர (சட்டத்தரணி) ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

