logo

E   |   සි   |  

2020-12-02

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

சுகாதார அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன் கொவிட் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய விமான நிலையங்கள் திறக்கப்படும் – சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏதுவாக கொவிட் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும், இதற்கு சுகாதார அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன் விமான நிலையங்களை திறக்க முடியும் என்றும் சுகாதார அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று (03) பிற்பகல் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்படவிருப்பதாகவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறை அமைச்சு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் நேற்று (02) நடைபெற்றபோது, சந்திம வீரக்கொடி, பிரமித பண்டார தென்னக்கோன், தயான் கமகே உள்ளிட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினரக்ள் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கொவிட் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகளை வழங்க 80 சுற்றுலா சேவை வழங்கும் நிலையங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுற்றூலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவி கிமார்லி பெர்னாந்து சுட்டிக்காட்டினார்.

கொவிட் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய சுற்றுலா சேவை வழங்கக் கூடிய ஹோட்டல்கள் மற்றும் சுற்றூலத்துறை நிறுவனங்கள் இதற்காக பதிவுசெய்ய முடியும் என்றும், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து அவற்றின் தரத்தை ஆராய்ந்து அனுமதி வழங்க முடியும் என்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவி தெரிவித்தார்.

பைசர் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியை அனுமதித்த முதலாவது நாடாக ஐக்கிய இராச்சியம் அறிவிக்கப்பட்டுள்ள பின்புலத்தில் எதிர்காலத்தில் இந்தத் தடுப்பூசி வெற்றியளித்தால் விமான நிலையங்களை விரைவில் திறக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கீதா குமாரசிங்க, டயானா கமகே, எம்.உதயகுமார், சந்திம வீரகொடி, சாணக்கியன் இராசமாணிக்கம், மதுர விதானகே, பிரமித்த பண்டார தென்னக்கோன் உள்ளிட்ட 18ற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புத் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே சுட்டிக்காட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்த சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவி, முதல் தடவையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களே சுற்றுலாத்துறைக்கு பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமித்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.

முன்னேறிவரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகளுக்காக இலங்கையின் முதலாவது கையடக்கத் தொலைபேசி செயலியொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். குறித்த செயலியில் உள்ள அவசர பொத்தானை அழுத்துவதன் ஊடாக சுற்றுலா பயணிகள் தாம் இருக்கும் பகுதியின் விபரத்தை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துடன் பகிர்ந்துகொள்ள முடியும் எனவும், இதன் முதலாவது பதிப்பு 2021ஆம் ஆண்டு மூன்றாவது காலாண்டில் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வடக்கு, கிழக்கில் திட்டவரைபுகள் தயாரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய தலைமன்னாரிலிருந்து கப்பல் சேவையை ஆரம்பிக்குமாறும் அவர் முன்மொழிந்தார்.

இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்புபட்ட 4956 புதிய சுற்றுலா தலங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், இதனை ஊக்குவிக்க இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடியிருப்பதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவி சுட்டிக்காட்டினார். வடக்கு, கிழக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் தனியான கூட்டமொன்றை நடத்துவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

முதல்தர வகுப்பு பயணிகள் மற்றும் வர்த்தக வகுப்புப் பயணிகளுக்காக விமான நிலையத்தில் விசேடமான இரண்டு வசதிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதும் இவை இயங்கும் என்றும் விமானநிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். குடிவரவு, குடியகல்வு பகுதியில் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே சுட்டிக்காட்டியதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

1

2

 



தொடர்புடைய செய்திகள்

2026-06-19

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடல்

களனி ஆற்றின் நீர் மாசடைவது தொடர்பில் சுற்றாடல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம்  கௌரவ சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க பட்டபெந்திகே அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 10) பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இவ்விடயம் கவனத்தில் எடுக்கப்பட்டது.இதற்கமைய, களனி ஆற்று நீரைச் சுத்திகரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்குழுக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-18

அரசாங்க வரவுசெலவுத் திட்டத்தில் பாலின உணர்திறன் அணுகுமுறையை உள்ளடக்குவது குறித்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தில் கலந்துரையாடல்

வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது, பாலின அடிப்படையிலான பகுப்பாய்விற்கான (Gender-Responsive Budgeting) தேவை மற்றும் அது சார்ந்த தற்போதைய சவால்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் கூட்டமொன்று அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.இக்கூட்டம் ஒன்றியத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், இதில் கௌரவ பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களும் கலந்துகொண்டார்.வரவுசெலவுத் திட்டச் செயன்முறையின் போது பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பை சரியான முறையில் கணிப்பிடுவதற்கு, தற்போதுள்ள தரவுகள் மற்றும் குறிகாட்டிகளின் பற்றாக்குறையே பிரதான பிரச்சினையாக இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் பின்பற்றும் வழிமுறைகளை உதாரணம் காட்டி, இந்நாட்டின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளை இனங்காண வேண்டியதன் அவசியத்தையும் ஒன்றியம் சுட்டிக்காட்டியது.மேலும், கருத்திட்ட அறிக்கையிடலின் போது பாலின ரீதியாக தரவுகளை வேறுபடுத்தி இனங்காண்பதன் தேவை மற்றும் அதற்காக இணையவழி தரவு முறைமைகளை வலுப்படுத்துவதன் அவசியம் மற்றும் அமைச்சுகளின் மட்டத்தில் கருத்திட்டங்களின் ஆரம்பத்திலேயே விடயங்களைச் சரியாக இனங்கண்டு நடைமுறைப்படுத்துவதன் மூலம், கருத்திட்ட பகுப்பாய்வு மற்றும் விளைவுகளை அளவிடுவது மிகவும் இலகுவாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.அதேபோன்று, தற்போது நடைமுறையிலுள்ள பாரம்பரிய மற்றும் நேரத்தைச் செலவிடும் வழிமுறைகளுக்குப் பதிலாக, முறையான இணையவழி முறைமைகள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வுக் கருவிகளை நோக்கி நகர்வதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை இலங்கையின் பொது நிதிக் கொள்கையுடன் ஒருங்கிணைப்பதில் உள்ள தற்போதைய முன்னேற்றம் மற்றும் சவால்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அத்துடன், இத்தகைய வரவுசெலவுத் திட்டமிடலானது ஆவணங்களிலுள்ள பெயரளவு சதவீதங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், உண்மையாகவே நடைமுறை ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக முறையானதொரு கட்டமைப்பினையும் தரவு முறைமையையும் நிறுவுவதன் அவசியமும் இங்கு வலியுறுத்தப்பட்டது.இதற்கமைய, முதற்கட்டமாக அமைச்சுகளின் வரவுசெலவுத் திட்ட தயாரிப்பு அதிகாரிகளை அழைத்து, பாலினப் பதிற்செயற்பாட்டு வரவுசெலவுத் திட்டமிடலை நடைமுறைப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு ஒன்றியம் தீர்மானித்தது.இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சமிந்திரானி கிரிஎல்லே மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலீ குணசிங்க ஆகியோருடன் கௌரவ பாராளுமன்ற பெண் உறுப்பினர்களான சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, கிருஷ்ணன் கலைச்செல்வி, சட்டத்தரணி சாகரிகா அதாவுத, சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி, அம்பிகா சாமிவெல், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோரும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பெண் அதிகாரிகள் குழுவொன்றும் கலந்துகொண்டனர்.


2026-06-17

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் கௌரவ பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன அவர்கள் தலைமையில் அண்மையில் (ஜுன் 12) பாராளுமன்றத்தில் கூடியது.இக்கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பிரதேசங்களில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-06-17

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சுசார் ஆலோசனைக்குழு கௌரவ புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்களுக்கான அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி  அவர்களின் தலைமையில் அண்மையில் (ஜுன் 09) பாராளுமன்றத்தில் கூடியது.ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிப் பாடசாலைகளை நடத்துவதற்கு ஏதுவாக ஞாயிற்றுக்கிழமை காலை நேரங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதைத் தடுப்பதற்கான விதிமுறைகளைத் தயாரிப்பது தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்துடன் ஆரம்பித்துள்ள கலந்துரையாடல்களின் முன்னேற்றம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டன.இக்கூட்டத்தில், கௌரவ பிரதியமைச்சர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks