E   |   සි   |  

2020-11-26

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

கோப் குழு முதல் தடவையாக ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முதற் தடவையாக ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி (zoom) மூன்று அமைச்சின் செயலாளர்களை இன்றைய (26) கூட்டத்தில்  இணைத்துக்கொண்டிருந்தது.

கோப் குழு அதன் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் இன்று (26) பிற்பகல் ஆரம்பமான பின்னர், சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியகலாநிதி சஞ்சீவ முணசிங்க, கைத்தொழில் அமைச்சின் செயாளர் டபிள்யூ.ஏ.சூலானந்த பெரேரா மற்றும் பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி ஆகியோர் ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைத்து கொண்டனர்.
களனி கங்கையின் நீர் மாசுபடுவது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோப் குழுவினால் கவனத்தில் கொள்ளப்பட்டதுடன், இதன்போது எவ்வித தொழில்நுட்ப தடங்கல்களும் இன்றி கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் மற்றும் கோப் குழுவின் உறுப்பினர்கள் அமைச்சின் செயலாளர்களுடன் ஒன்லைன் முறையில் கலந்துரையாடினர்.

பாராளுமன்றத்திலுள்ள குழு அறைகளில் இரண்டு அறைகள் ஒன்லைன் தொழில்நுட்பத்தில் கூட்டங்களை நடத்தக்கூடிய வசதிகளைக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார். பாராளுமன்ற அதிகாரிகள் பல மாதங்களுக்கு முன்னர் இந்தத் தொழில்நுட்பத்தை நிறுவுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்ததுடன், இந்த முயற்சிகள் தற்பொழுது வெற்றியளித்திருப்பதால் எதிர்காலத்தில் பாராளுமன்ற கூட்டங்களை ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்க முடியும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் தலைமையில் கூடிய உயர் பதவிகள் பற்றிய குழு, ஒன்லைன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உகண்டாவில் தங்கியுள்ள கென்யாவுக்கான இலங்கையின் புதிய தூதுவருடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது.

 

1 2

3

 



தொடர்புடைய செய்திகள்

2026-09-01

கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் நடத்தப்படும் “Voice to Policy” நிகழ்ச்சி செப்டெம்பர் 05ஆம் திகதி

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் கலந்துரையாடல் அடிப்படையிலான பிராந்திய நிகழ்ச்சித் தொடரான “Voice to Policy” மூன்றாவது நிகழ்வு, கண்டி மாவட்ட இளைஞர்களுக்காக செப்டெம்பர் 05ஆம் திகதி கண்டி ‘கோல்டன் கிரவுன்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வு, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8   என்ற இணைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து செப்டெம்பர் 03ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும். அத்துடன், பங்கேற்பாளர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது இயக்கத்தையும் ஊக்குவிக்கும் சின்னங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும். நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும்.CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.


2026-08-21

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான “Voice to Policy” நிகழ்ச்சி ஓகஸ்ட் 29ஆம் திகதி

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி மட்டக்களப்பு ‘East Lagoon’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின்  இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (ஓக. 19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இதற்கான ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஓகஸ்ட் 24ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.மேலும், நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றும் ஒன்றியம் அறிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒன்றியத்தின் கலந்துரையாடலில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற, இத்தொடர் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கும் அபிவிருத்திப் பங்காளர்களான CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதேவேளை, இக்கூட்டத்தின்போது ‘INTER Pares’ திட்டத்தின் பிரதிநிதிகளுடன் இணையவழி கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஒன்றியத்தின் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு அந்த நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கலந்துரையாடலை ஒருங்கிணைப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்சய விக்னராஜா  அவர்களும் இதில் கலந்துகொண்டார்.


2026-08-18

உயர் பதவிகள் பற்றிய குழுவினால் அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று தலைவர்களின் நியமனங்களுக்கு அனுமதி

உயர் பதவிகள் பற்றிய குழு, அரசாங்க அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான நியமனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் (தனியார்) தலைவர் பதவிக்கு திரு. S.A.M. பீரிஸ், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவராக திரு. H.M.P. ரத்நாயக்க மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக டொக்டர் (திருமதி) W.M.V. வணசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கு குழு அனுமதி வழங்கியுள்ளது.இக்கூட்டம் கௌரவப் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குமார ஜயகொடி மற்றும் தயாசிறி ஜயசேகர (சட்டத்தரணி) ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.


2026-08-18

கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகள் “Voice to Policy“ பாராளுமன்ற உறுப்பினர்களிடம் நேரடியாகக் கையளிப்பு

கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 16) நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் செயலமர்வுகளின் முதலாவது நிகழ்ச்சித்திட்டமாக கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும். இந்த செயலமர்வில் கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர், யுவதிகள் பலர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திராணி கிரிஎல்லே, எஸ். எம். மரிக்கார், லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.இளைஞர் சமூகத்தினர் கல்வி மற்றும் உயர் கல்வி, அரசியல் பங்கேற்பு, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம், தொழில்முனைவோர் நடவடிக்கைகள், இளைஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் இளைஞர் பிரதிநிதிகள் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட இளைஞர்களின் முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் எதிர்கால பரிசீலனைக்காக சமர்ப்பிப்பது தொடர்பில் ஒன்றியம் கவனம் செலுத்தியது. அத்துடன், குறித்த விடயங்கள் தொடர்பில் இளைஞர் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் சம்பந்தப்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும், நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை ஆவணப்படுத்தி, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்திடம் திறந்த இளைஞர் அறிக்கையாளர்கள் (Youth Rapporteurs) நியமிக்கப்பட்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் மேற்கொண்டிருந்ததுடன், இதற்கான நிதியுதவியை தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) வழங்கியிருந்தது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks