பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2020-10-06
செய்தி வகைகள் : குழு செய்திகள்
அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு உடனடியாக அறிவிப்பதற்கான முறைமையை அமைப்பது தொடர்பில் குறித்த குழுவின் அவதானம் செலுத்தப்பட்டது. குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் பாராளுமன்றத்தில் இன்று (06) கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
குழு பற்றி அதன் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும் நோக்கில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் மேலும் கருத்து தெரிவித்த குழுவின் தலைவர் எதிர்வரும் கூட்டங்களை ஊடகங்களுக்கு அனுமதிப்பதாகத் தெரிவித்தார்.
கணக்காய்வு அறிக்கைகளில் காணப்படும் சிக்கல்களுக்கான உண்மையான காரணங்களை கண்டறிவது தொடர்பில் குழு விசேட அவதானத்தை செலுத்த வேண்டும் என தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார். பாராளுமன்றம் மற்றும் குழுவுக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய அரச நிறுவனங்களில் காணப்படும் சிக்கல்களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் நிதி சரியான முறையில் செலவு செய்யப்படுகின்றதா மற்றும் அதன் செயல்திறன் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இங்கு கருத்து தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், நிதிக் கணக்காய்வு உள்ளிட்ட நிறுவனங்களின் செயல்திறன் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தவேண்டும் என தெரிவித்தார். குழு நடவடிக்கைகளை ஊடகங்களுக்கு திறப்பதன் மூலம் குழு நடவடிக்கைகள் எளிதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
8வது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினால் சிறப்பான பணியொன்று மேற்கொள்ளப்பட்டதாக குழுவின் முன்னாள் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன இதன்போது தெரிவித்தார். 844 அரச நிறுவனங்களை மதிப்பீடு செய்வதற்கு முறையான வேலைத்திட்டமொன்று மேற்கொண்டதாகவும், அதனை முன்னெடுத்து செல்வது முக்கியமானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
வருமானமீட்டும் நிறுவனங்களை விரைவாக குழுவின் முன்னிலையில் அழைத்து விசாரணை செய்ய வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, உள்நாட்டு இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் என்பவற்றை நவம்பர் மாதம் 03, 04 மற்றும் 05 ஆகிய மூன்று நாட்களும் குழுவின் முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
பாராளுமன்றம் மற்றும் குழுவுக்கிடையிலான தொடர்பை மேலும் விருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உதவி செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பர்னாந்துபுள்ளே, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, நிரோஷான் பெரேரா, பைஸல் காஸீம், அஷோக் அபேசிங்க, புத்திக பதிரண, காதர் மஸ்தான், உபுல் கலப்பத்தி, பேராசிரியர் ரஞ்சித் பண்டார மற்றும் ஹரிணி அமரசூரிய ஆகியோர் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
2026-08-21
திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியின் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் 29ஆம் திகதி மட்டக்களப்பு ‘East Lagoon’ ஹோட்டலில் நடைபெறவுள்ளது.திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரின் தலைமையில் அண்மையில் (ஓக. 19) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, இதற்கான ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கப்பட்டது.இளைஞர் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் திறந்த பாராளுமன்றம் எண்ணக்கருவை மேலும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தொடர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.இந்த நிகழ்வின் ஊடாக, குறிப்பாக இளைஞர்களுக்குப் பாராளுமன்ற செயற்பாடுகள், சட்டவாக்கச் செயன்முறை மற்றும் திறந்த பாராளுமன்றக் கொள்கைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிகழ்வில் கலந்துகொள்ள விரும்பும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகள், https://forms.gle/aVp5UzhLbtPSmVap8 என்ற இணைப்பின் ஊடாக உரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஓகஸ்ட் 24ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்ய வேண்டும்.மேலும், நிகழ்வில் பங்கேற்பவர்கள் எந்தவொரு அரசியல் கட்சி அல்லது அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அல்லது ஊக்குவிக்கும் அடையாளங்கள் இல்லாத ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றும் ஒன்றியம் அறிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒன்றியத்தின் கலந்துரையாடலில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான பாராளுமன்ற, இத்தொடர் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கும் அபிவிருத்திப் பங்காளர்களான CII (Coalition for Inclusive Impact) நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.இதேவேளை, இக்கூட்டத்தின்போது ‘INTER Pares’ திட்டத்தின் பிரதிநிதிகளுடன் இணையவழி கலந்துரையாடலும் இடம்பெற்றது. ஒன்றியத்தின் எதிர்கால நிகழ்ச்சிகளுக்கு அந்த நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இந்தக் கலந்துரையாடலை ஒருங்கிணைப்பதற்கு பங்களிப்பு வழங்கிய ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் மன்றத்தின் (WFD) இலங்கைக்கான பணிப்பாளர் சஞ்சய விக்னராஜா அவர்களும் இதில் கலந்துகொண்டார்.
2026-08-18
உயர் பதவிகள் பற்றிய குழு, அரசாங்க அமைச்சின் செயலாளரொருவர் மற்றும் மூன்று அரசாங்கக் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுக்கான நியமனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக டொக்டர் அனில் ஜாசிங்க, கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனத்தின் (தனியார்) தலைவர் பதவிக்கு திரு. S.A.M. பீரிஸ், குருநாகல் பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைவராக திரு. H.M.P. ரத்நாயக்க மற்றும் தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் தலைவராக டொக்டர் (திருமதி) W.M.V. வணசிங்க ஆகியோரின் நியமனங்களுக்கு குழு அனுமதி வழங்கியுள்ளது.இக்கூட்டம் கௌரவப் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான குமார ஜயகொடி மற்றும் தயாசிறி ஜயசேகர (சட்டத்தரணி) ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
2026-08-18
கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் (ஆக. 16) நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்தின் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.திறந்த பாராளுமன்றக் கருத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தொடர் செயலமர்வுகளின் முதலாவது நிகழ்ச்சித்திட்டமாக கம்பஹா மாவட்ட இளைஞர் சமூகத்திற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இளைஞர் சமூகத்தினர் தமது கருத்துக்கள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நேரடியாகப் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும். இந்த செயலமர்வில் கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர், யுவதிகள் பலர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்வில் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர் கௌரவ அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்திராணி கிரிஎல்லே, எஸ். எம். மரிக்கார், லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார மற்றும் சம்பிக ஹெட்டிஆரச்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.இளைஞர் சமூகத்தினர் கல்வி மற்றும் உயர் கல்வி, அரசியல் பங்கேற்பு, தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்பம், தொழில்முனைவோர் நடவடிக்கைகள், இளைஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான அணுகல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் இளைஞர் பிரதிநிதிகள் ஒன்றியத்திடம் முன்வைத்தனர்.குறிப்பாக, உயர் கல்விப் பாடநெறிகள் மற்றும் பட்டப்படிப்புகளை நிறைவு செய்வதற்கு எடுக்கும் காலத்தை குறைத்தல், அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்களுக்காக அதிக வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர் தொழில்முனைவோர் நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.இளைஞர் சமூகத்தினரே தமது முன்னுரிமை பெறும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றை கலந்துரையாடி, பொதுவான விடயங்களாக வகைப்படுத்தி, கொள்கை ரீதியான கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளைத் தெரிவுசெய்ததன் பின்னர், அவை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரடிக் கலந்துரையாடலை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டமை இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் சிறப்பம்சமாக அமைந்தது.நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட இளைஞர்களின் முன்மொழிவுகளை பாராளுமன்றத்தில் எதிர்கால பரிசீலனைக்காக சமர்ப்பிப்பது தொடர்பில் ஒன்றியம் கவனம் செலுத்தியது. அத்துடன், குறித்த விடயங்கள் தொடர்பில் இளைஞர் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் சம்பந்தப்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.மேலும், நிகழ்ச்சித்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளை ஆவணப்படுத்தி, திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்திடம் திறந்த இளைஞர் அறிக்கையாளர்கள் (Youth Rapporteurs) நியமிக்கப்பட்டனர்.இந்த நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் மேற்கொண்டிருந்ததுடன், இதற்கான நிதியுதவியை தேசிய ஜனநாயக நிறுவனம் (NDI) வழங்கியிருந்தது.
2026-08-11
இலங்கையில் காணி முகாமைத்துவக் கட்டமைப்பை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், வினைத்திறனுடனும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நவீனமயப்படுத்த வேண்டியதன் அவசியம் சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய குறித்த மேற்பார்வைக் குழுவில், காணித் துறையில் நிறுவனங்களின் பங்களிப்பு, அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் காணி முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புக்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.இதன்போது, அரச காணிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் போலி உறுதிப்பத்திரங்கள் மூலம் இடம்பெறும் மோசடிகளைக் குறைப்பதற்காக அனைத்து காணித் தரவுகளையும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் கட்டமைப்பொன்றின் ஊடாக வலையமைப்பில் இணைப்பதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அரச காணிகளின் உரிமை, எல்லை நிர்ணயம் மற்றும் தொடர்புடைய தகவல்களை ஒரே தரவுக் கட்டமைப்பின் கீழ் பேணுவதன் மூலம் காணி முகாமைத்துவத்தை மேலும் ஒழுங்குமறைப்படுத்த முடியும் எனவும், GPS ஆயத்தொலைவுகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய டிஜிட்டல் காணித் தரவுக் கட்டமைப்பொன்றை நிறுவுவதன் மூலம் காணி மோசடிகளைக் குறைக்க முடியும் எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.மேலும், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு, மகாவலி அதிகாரசபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு இடையில் காணி உரிமை மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பில் காணப்படும் ஒருங்கிணைப்புச் சிக்கல்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. காணி முகாமைத்துவத் துறையில் தேவையான சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துதல், டிஜிட்டல் தரவுக் கட்டமைப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இத்துறையின் வெளிப்படைத்தன்மையையும் வினைத்திறனையும் மேலும் அதிகரிக்க முடியும் என குழு வலியுறுத்தியது.அத்துடன், 1958 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க விலங்குகள் (திருத்தச்) சட்டமூலமும் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட திருத்தங்களின் மூலம் ஆடுகள், பன்றிகள் மற்றும் செம்மறியாடுகளைப் போக்குவரத்து செய்வதையும் சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்துவதற்கும், விலங்குகளின் போக்குவரத்தை முறையாக ஒழுங்குபடுத்துவதன் மூலம் கால் மற்றும் வாய் நோய் போன்ற விலங்கு நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், 2002 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க அளவீட்டுச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பான முன்மொழிவொன்றும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளர்களால் தயாரிக்கப்படும் தனியார் காணி வரைபடங்களை இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் ஆவணக் காப்பகத்தில் வைப்பது, அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பது மற்றும் பொதுமக்களுக்கு சான்றளிக்கப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவையான சட்டக் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.இக்குழுக் கூட்டத்தில் குழு உறுப்பினர்களான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் கித்சிறி, ரொஷான் அக்மீமன, சுசந்த குமார நவரத்ன, கிட்டினன் செல்வராஜ், சட்டத்தரணி பாக்ய ஸ்ரீ ஹேரத் மற்றும் ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோரும், குழுத் தலைவரின் அனுமதியுடன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி. பெரேரா மற்றும் ருவன்திலக ஜயகொடி ஆகியோரும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks
