2020-08-25
செய்தி வகைகள் : செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது தொழில்சார் நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் எப்போதும் பாராளுமன்ற அமர்வுகளுக்கு வருகைத்தருவதன் மூலமும் பாராளுமன்ற நூலகத்தை பயன்படுத்துவதன் மூலமும் தொழில்சார் நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ளலாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கான பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் இரண்டுநாள் திசைமுகப்படுத்தல் கருத்தரங்கில் பிரதமர் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனக்கு ஞாபகம் இருக்கின்றது எனது தந்தை 1945 இல் முதன்முதலாக அரச பேரவைக்கு தெரிவுசெய்யப்பட்டு வந்தபோது, பண்டாரநாயக்க அவர்கள் பாராளுமன்றம் முழுவதும் அழைத்துச்சென்று தெளிவுப்படுத்தினார். உங்கள் அனைவருக்கும் பாராளுமன்றத்தில்தான் சிறந்த அனுபவத்தை பெற்றுக்கொள்ள முடியும். பாராளுமன்றத்தில் செற்பாடுகளை மேற்கொள்ளும் போதே அந்த அனுபவம் கிடைக்கப்பெறும். அந்த அனுபவத்தின்மூலமே முன்னோக்கி செல்ல முடியும். பல இனங்கள், பல மதங்கள், பல வகுப்புகள் மற்றும் பல அணிகளைச் சேர்ந்தவர்கள் அரசியல் உலகில் நுழைந்துள்ளனர். நாங்கள் இந்த அரசியலுக்கு புதிய வர்ணமளித்துள்ளோம். புதிய முகங்கள் பலரும் வருகைத்தந்துள்ளமை இந்த நாட்டு அரசியலில் நான் காணும் மிகவும் அதிர்ஷ்டகரமான விடயமாக பார்க்கின்றேன். இந்த புதிய முகங்கள்தான் எதிர்வரும் காலங்களில் இந்நாட்டை பொறுப்பேற்று வழிநடத்தவுள்ளனர்.
கடந்த பாராளுமன்ற தேர்தல் இந்நாட்டு அரசியல் வரலாற்றில் மற்க்க முடியாத தேர்தலாக அமைந்தது. விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்படி 2/3 பெரும்பான்மையை பெற முடிந்ததால் மட்டுமல்ல. 1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மிகவும் புராதனமான கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசியக்கட்சியால் இந்த தேர்தலில் ஒரு ஆசனமேனும் பெற்றுக்கொள்ள முடியாமல் போனதால் மட்டுமல்ல. இதன்மூலம் மக்கள் எமக்கு நல்லதொரு செய்தியொன்றை வழங்கியுள்ளனர்.
இந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பணத்தை பலவந்தமாகக் கொடுத்து பெரிய விளம்பர பணிகளை செய்யவில்லை. போஸ்டர் கட்டவுட் வைக்க முடியாமல் போனது. பணம்கொடுத்து பஸ்ஸில் மக்களை கொண்டுவந்து மக்கள் பலத்தை வெளிப்படுத்தவில்லை. எல்லா இடங்களிலும் சட்டத்திற்குட்பட்டே அனைவரும் வேலை செய்திருந்தார்கள். ஆனாலும் மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து 71 சதவீதம் வாக்களித்திருந்தனர். இதன்மூலம் மக்கள் இந்நாட்டின் மீது வைத்துள்ள அன்பை வெளிக்காட்டியது மட்டுமல்லாது முறையான வேலைத்திட்டத்திற்கு ஜனநாயகத்திற்கு உள்ள மதிப்பை தெரியப்படுத்திருந்தனர். இதன்மூலம் மிகப்பெரிய செய்தியொன்றை மக்கள் எமக்கு வழங்கியுள்ளார்கள்.
இம்முறை மக்கள் யாருக்கு பலத்தை கொடுத்துள்ளார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். எவ்வாறான அரசியல் பின்புலத்திலிருந்து வந்திருந்தாலும் வேலை செய்யாவிட்டால் வேலை செய்ய முடியாவிட்டால் மக்கள் அவர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள். அதுமட்டுமல்லாது கல்வியறிவுக்காக மட்டும் மக்கள் வாக்களித்தார்கள் என்று நினைக்க முடியாது. கல்வியறிவோடு இந்நாட்டை நேசித்து வேலை செய்ய முடியுமாயின் மட்டுமே மக்கள் வாக்களிப்பார்கள்.
படித்திருந்தால் மட்டும் போதாது. மக்கள் அளித்த பணியை சரியாக செய்யாவிட்டால் பெரிய சிறிய என்ற வித்தியாசம் இல்லாது துறைமுகமோ கைத்தொழில்துறையோ எனப்பார்க்காது இந்நாட்டுக்காக வேலை செய்ய வேண்டுமென நாம் நம்பிக்கைக் கொள்ள வேண்டும். பொதுமக்களுடன் தொடர்பை வைத்துக்கொள்ள மக்களுக்கு வேலை செய்யவே வேண்டும்.
முன்புபோல இப்போதில்லை. இப்போது பாராளுமன்ற உறுப்பினராகிவிட்டோம் என்பதற்காகமக்களிடத்தில் விசேட கவனிப்பு வழங்கப்படுவதில்லை. தமது தொழில்வான்மையை விருத்திசெய்துக்கொள்ள வேண்டுமென நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். தொழில்வான்மையை விருத்திசெய்துக்கொள்ள பாராளுமன்ற உறுப்பினர், வயது போன்றவற்றை தடையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
நான் பாராளுமன்றத்திற்கு 1970 ஆம் ஆண்டு பிரவேசித்த பின்னரே சட்டக்கல்லூரிக்குள் நுழைந்தேன். பாராளுமன்றத்திலிருக்கும்போதே இலங்கைச் சட்ட கல்லூரியில் சட்டக்கல்வியை மேற்கொண்டேன். அப்போது இணைய வசதி இருக்கவில்லை. இப்போது சர்வதேச பல்கழைக்கழகங்களில்கூட இணைந்து கல்வியை தொடர முடியும்.இவை எதுவும் இல்லாத காலத்தில் நாம் பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வெழுதியிருந்தோம். எப்போதும் வெற்றிபெறுவோம் என்றில்லை. நான் தோற்றபோது சட்டத்தரணியாக என்னால் நன்மைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
இப்போது பாராளுமன்றத்துக்கு வந்தவுடன் அமைச்சு பதவியொன்றை எதிர்பார்க்கிறார்கள். இராஜாங்க அமைச்சு ஒன்றை எதிர்பார்க்கிறார்கள். நாட்டுக்கு வேலை செய்யக்கூடிய அமைச்சு ஒன்றை தாருங்கள் என்கிறார்கள். எல்லோரும் எதிர்பார்ப்பது நல்லது. ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அமைச்சர் ஒருவரை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்து அனுப்புவதில்லை, மந்திரி ஒருவரைத் தான். மக்கள் அமைச்சர் ஒருவரை உருவாக்க நினைப்பதில்லை. தங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மந்திரி ஒருவரையே உருவாக்குகிறார்கள். எந்தவொரு பலமான அமைச்சு இருந்தாலும் தனது மந்திரி பதவியை ஒழுங்காக செய்யாதவர்களை மக்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுவர். அதனால் பாராளுமன்றத்தில் சிறந்த மந்திரியாகவும், மக்கள் பிரதிநிதியாகவும் இருப்பதே நாட்டுக்கு இந்த நேரத்தில் முக்கியமானதாகிறது. அமைச்சு பதவி ஒன்று இல்லாமல் ஆளும் தரப்பில் இருக்க முடியாதவர்களுக்கு ஒருபோதும் எதிர்க்கட்சியிலிருந்து அரசியல் செய்ய முடியாது. அமைச்சுப்பதவிக்காக அரசியல் செய்வோரால் மந்திரி பதவியின் பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாது. அவ்வாறானவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
நான் அரசாங்கத்தில் இருந்த காலத்தை போலவே சில காலம் எதிர்க்கட்சியிலும் இருந்துள்ளேன். எதிர்க்கட்சிகளில் மந்திரியாக நீண்ட காலம் சேவையாற்றிய அனுபவமும் உள்ளது. அதனால் தான் 2015இல் தேர்தல் முடிவுகள் வெளிவர முன்பாக வீட்டுக்கு சென்றேன். எனது வாழ்க்கை வரலாற்றில் மிகப்பெரிய பொறுப்புக்கள் சாட்டப்பட்ட தேர்தல் இரண்டு இருந்தது.
ஒன்று 2005 ஜனாதிபதி தேர்தல். அன்று சாட்டப்பட்டிருந்தது இரண்டுபட்டு கிடக்கும் நாட்டை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற பெரும் பொறுப்பு அந்த பொறுப்பை சரியாக நிறைவேற்றினேன். அதற்காக புதிய மந்திரிகள் பக்கபலமாக இருந்தனர். அடுத்ததாக பெரிய பொறுப்பு இந்த தேர்தலிலேயே சாட்டப்பட்டுள்ளது. விகிதாசார முறையின் கீழ் கிடைத்த 2/3 பெரும் மக்கள் ஆணையை நம்மீது சாட்டப்பட்டுள்ள பொறுப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். கோபத்தை தீர்த்துக்கொள்ள, என்னை கண்டுகொள்ளவில்லை என்னை தனிமைப்படுத்தினரென கூறிக்கொண்டிருக்க நேரமில்லை.
பாரிய அரசியலமைப்பு மாற்றம் ஒன்றை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். புதிய அரசியலமைப்பு வரலாற்றில் நடந்த தவறுகளை திருத்திக்கொள்ளும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். நாம் சகலரும் தனிப்பட்ட நியாயங்களை புறந்தள்ளிவிட்டு மக்கள் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்ய முதலில் பூர்த்தி செய்ய வேண்டும்.
அரசியலமைப்பு என்பது ஒரு சாராரின் உரிமை அல்ல. நாம் சகலருக்குமான சட்டம். அதிலுள்ள சகல குறுந்தரிப்புக்களும் முற்றுப்புள்ளிகளும் எமது வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும். அதனால் மக்கள் கோரும் அரசமைப்பு உருவாக்கத்தின் போது, கட்சி வேறுபாடுகளை வைத்துக்கொள்ள வேண்டாம். இது எமது பொறுப்பு. இதுவரை இருந்த அரசியலமைப்புக்களிலுள்ள சாதகமான அம்சங்களை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நேர்மமையாக தமது கருத்துகளை முன்மொழிய வேண்டும். ஒத்துழைக்க வேண்டும். இறுதியாக பாராளுமன்ற மந்திரியாக தெரிவாகியுள்ள உங்களுடைய அரசியல் பயணத்துக்கு வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.
செயலமர்வு தொடர்பாக கருத்து வெளியிட்ட சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன நாட்டில் காணப்படும் பிரச்சினைகள் பலவற்றை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற சவால் புதிய பாராளுமன்றத்தின் முன் உள்ளது என்றார். பாராளுமன்றம் முழு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்டமைப்பாவதால் பொறுப்புடன் கடமையை நிறைவேற்ற இந்த செயளமர்வு முன்னோடியாக அமையும். எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல இங்கு கருத்து தெரிவித்துந்ததுடன், ஒழுக்கமான பாராளுமன்றத்துக்குள் மந்திரிகள் கௌரவமாக கடமைகளை நிறைவேற்ற வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் அலுவலகத்தின் ஏற்பட்டில் ஏற்பாடு செய்யப்ட்டிருந்த இந்த நிகழ்வின் ஊடாக, இன்று பாராளுமன்ற சபை ஒழுங்கு மற்றும் செயன்முறை, நிலையியற் கட்டளைகள், வரப்பிரசாதங்கள், சம்பிரதாயங்கள், ஒழுக்க விதிகள், செயற்குழு, பாராளுமன்ற ஆவணங்கள், நிறைவேற்றுச் செயன்முறை தொடர்பாக பெரும் தெரிவை புதிதாக தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் உட்பட சிறப்பு விருந்தினர்களுக்கு பாராளுமன்ற செயன்முறை குறித்த தகவல்களைத் கொண்ட 'பாராளுமன்றக் தகவல்திரட்டு' நூலை பாராளுமன்ற செயலாளர் நாயகம் அவர்கள் வழங்கிவைத்தார். புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான இந்த திசைமுகப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டம் நாளைய தினமும் பாராளுமன்றத்தின் குழு அறை இலக்கம் 01 இல் நடைபெற உள்ளது.
2026-08-28
இலங்கை பாராளுமன்றத்தின் ஒன்பது திணைக்களங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற அதிகாரிகள் 25 பேர் கொண்ட குழுவினர், புதுடில்லியில் உள்ள இந்தியப் பாராளுமன்றமான லோக்சபா செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர அவர்களின் கோரிக்கையின் பேரில் இந்த ஆளுமை விருத்தி நிகழ்ச்சித் திட்டம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டது. லோக்சபாவின் கௌரவ சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், லோக்சபா செயலகத்தின் செயலாளர் நாயகம் ஸ்ரீ உத்பல் குமார் சிங் அவர்களால் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. இந்த ஒத்துழைப்பின் பயனாக, இலங்கைப் பாராளுமன்றத்தைச் சேர்ந்த 50 அதிகாரிகளுக்கு இத்திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சி திட்டத்தில் முதல் தொகுதியைச் சேர்ந்த 25 இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஆளுமை விருத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இக்குழுவுக்கு இலங்கை பாராளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன அவர்கள் தலைமை தாங்கினார். இரண்டாவது தொகுதியைச் சேர்ந்த 25 இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள், இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி அனுஷா ரோஹணதீர அவர்களின் தலைமையில், தற்போது புதுடில்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.இரு கட்டங்களாக நடத்தப்படும் இத்திட்டங்களும் லோக்சபா செயலகத்தின் ஜனநாயகங்களுக்கான பாராளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (PRIDE) மூலம் முன்னெடுக்கப்படுகின்றன. பாராளுமன்ற அதிகாரிகளின் தொழில்சார் அறிவு, திறன்கள் மற்றும் நிறுவன ரீதியான ஆற்றலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் விசேட விருந்தினர் முனையத்தை வந்தடைந்த இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் குழுவை, லோக்சபா செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.ஆரம்ப தினத்தன்று இலங்கைப் பாராளுமன்ற அதிகாரிகள் குழுவினர், இந்திய பாராளுமன்ற கட்டட வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.ஆளுமை விருத்தித் திட்டத்தின் கீழ் பாராளுமன்ற நிர்வாகம் மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பான பரந்தளவிலான விடயங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. சர்வதேச பாராளுமன்ற உறவுகள் மற்றும் நெறிமுறைகள், பாராளுமன்றத்திற்கான நிர்வாகத்தின் பொறுப்புக்கூறல், பாராளுமன்றக் குழுக்களின் பங்கு மற்றும் பணிகள், லோக்சபா செயலகத்தின் நிறுவன அமைப்பு மற்றும் அதன் நிர்வாகப் பிரிவின் செயற்பாடுகள் ஆகியவை குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் இதில் அடங்குகின்றன.மேலும், பாராளுமன்ற குழுச் செயலகங்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் செயற்பாடு மற்றும் நிர்வாகம், பாராளுமன்ற சிறப்புரிமைகள் மற்றும் ஒழுக்கநெறிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சேவைகள், கொடுப்பனவுகள் மற்றும் நலன்புரிச் சேவைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் பங்கேற்பாளர்களுக்கு தெளிவூட்டல் வழங்கப்படுகிறது.செயலகத்தின் வரவு–செலவுத் திட்டத்தைத் தயாரித்தல், ஒருங்கிணைந்த நிதிப் பிரிவின் (IFU) பணிகள், வரவுசெலவு மற்றும் கொடுப்பனவுக் (B&P) கிளை, அத்துடன் சட்டவாக்க மன்றங்களின் தலைமைதாங்கும் அதிகாரிகளின் பங்கு மற்றும் அதிகாரங்கள் ஆகியவை பற்றிய கலந்துரையாடல்களும் இதில் அடங்கியுள்ளன.இலங்கை பாராளுமன்ற அதிகாரிகள் இந்திய பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள லோக்சபா மற்றும் ராஜ்ய சபா ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.இதன் மூலம் இந்திய பாராளுமன்ற உட்கட்டமைப்பு மற்றும் ஆதரவுச் சேவைகள் தொடர்பில் இலங்கை பாராளுமன்ற அதிகாரிகளுக்கு நேரடி அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.கல்வி மற்றும் நிறுவன ரீதியான பயிற்சி அமர்வுகளுக்கு மேலதிகமாக, இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆக்ராவிற்கான கலாசார விஜயமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்தத் திட்டமானது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான பாராளுமன்ற ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இதன் மூலம் இரு பாராளுமன்றங்களின் அதிகாரிகளும் தமது அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதுடன், பாராளுமன்ற நடைமுறைகள், நிர்வாகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் தொடர்பான ஆழமான புரிதலைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பையும் பெறுகின்றனர்.இலங்கைப் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம், தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் சன்சத் தொலைக்காட்சி நிலையத்திற்கு விஜயம் செய்து அதன் செயற்பாடுகளைப் பார்வையிட்டனர்.தொடர்ச்சியான தொகுதிகளாக இரு நாட்டு பாராளுமன்ற செயலகள்க்கு இடையிலான வளர்ந்து வரும் நிறுவன ரீதியான ஈடுபாட்டை எடுத்துக்காட்டுகிறது. அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் பாராளுமன்ற நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் இத்திட்டம் முக்கிய பங்களிப்பை வழங்குகிறது.
2026-08-21
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீட்டிற்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) அங்கீகாரம் வழங்கப்பட்டது. இது தொடர்பான விவாதம் இன்று மு.ப 11.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
2026-08-21
சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலிபிரபல பாடகர் கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் இன்று (ஆக. 21) இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கௌரவ பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களின் முன்மொழிவுக்கு அமைய சபையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து கௌரவ பிரதமர் பாராளுமன்றத்தில் இரங்கல் உரையாற்றினார். இலங்கையின் இசைத்துறையின் பொற்குரலாகப் போற்றப்பட்டு, எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தனித்துவமான குரலாலும் பாடல் ஆளுமையாலும் நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வளப்படுத்திய கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு தாம் மிகுந்த துயரடைந்ததாகத் தெரிவித்தார்.நந்தா மாலினி அவர்களின் பல்வேறு பாடல்களைக் கேட்டு, அந்தப் பாடல்களுடன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களைக் கடந்து வந்த ஒரு இரசிகையாக, அவரது மறைவு என்பது இலங்கை இசைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத கலை ஆளுமை ஒன்றை இழந்தது மட்டுமல்லாது, எமது வாழ்க்கையுடன் நெருக்கமாக இணைந்து, எமது நினைவுகளோடு பின்னிப் பிணைந்து, மகிழ்ச்சியிலும் துயரத்திலும் எம்முடன் இருந்த பரிச்சயமான ஒரு குரல் எம்மைவிட்டு பிரிந்ததற்கு ஒப்பானதாகும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.அவரது பாடல்கள் தனது தலைமுறையின் அனுபவங்களுடன் பின்னிப் பிணைந்திருந்ததாகவும், அவரது இனிமையான குரலுடன் இணைந்த நினைவுகள் அவரது மறைவுடன் மேலும் ஆழமாக உணரப்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். நந்தா மாலினியின் பாடல் பயணம் இலங்கைப் பாடல் கலையின் ஒரு காலகட்டம் மட்டுமல்லாது, நாட்டின் மக்களின் வாழ்க்கை, சமூக மாற்றங்கள் மற்றும் மனித உணர்வுகளின் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.அன்பு மற்றும் பிரிவு போன்ற மனித உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கு அப்பால் நந்தா மாலினி, பொதுமக்களின் துயரம், அச்சம், நம்பிக்கை மற்றும் போராட்டங்களுக்கு தனது பாடல்கள் மூலம் குரல் கொடுத்தார் என்றும், அதனாலேயே அவரது பாடல்களைக் கேட்கும்போது ஒரு பாடகியின் குரலை மட்டுமல்லாது, எமது சமூகத்தின் சொந்தக் குரலையே உணரக் கூடியதாக இருந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.இன்று நந்தா மாலினியின் மறைவையொட்டி துயரப்படும் இந்தத் தருணத்தில், இலங்கை இசைத்துறைக்கு இழக்கப்பட்ட ஈடுசெய்ய முடியாத கலைஞரைப் பற்றி மட்டுமல்லாது, எமது வாழ்க்கையின் பல நினைவுகளுடன் பின்னிப் பிணைந்திருந்த அன்பான ஒரு குரலையும் தாம் நினைவுகூருவதாக பிரதமர் தெரிவித்தார்.பல தசாப்தங்களாக எம்முடன் பயணித்த அந்தக் குரல் இன்று மௌனித்துவிட்டாலும், அவர் பாடிய பாடல்கள் எமது நினைவுகளிலும் எமது இதயங்களிலும் தொடர்ந்தும் வாழும் என பிரதமர் நினைவுகூர்ந்தார். மேலும், நந்தா மாலினி அவர்களின் இரு புதல்விகள் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும், அவரது குரலை நேசித்த ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.இந்தச் சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், நந்தா மாலினி அவர்களைத் தாம் தனிப்பட்ட ரீதியில் நன்கு அறிந்திருந்ததாகவும், எதற்கும் தலைவணங்காமல் எப்போதும் மக்களுக்காக உறுதியாக நின்ற ஒரு கலைஞராக அவர் திகழ்ந்ததாகவும் தெரிவித்தார். மனித நேயம், கருணை மற்றும் இரக்க உணர்வு மிக உயர்ந்த அளவில் நிறைந்திருந்த, எமது நாட்டில் உருவான தலைசிறந்த பாடகிகளில் ஒருவராக நந்தா மாலினி அவர்கள் விளங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.தனது இரங்கலைத் தெரிவித்த கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்கள், காலமான கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி சபையில் வெளியிடப்பட்ட கருத்துகளுடன் தாமும் இணைந்து கொள்வதாகத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய ஆத்மா சாந்தியடைய இலங்கை பாராளுமன்றத்தின் சார்பில் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.
2026-08-20
2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் இன்று (ஆக. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.2026 ஆம் ஆண்டிற்காக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், இவ்வருடத்தில் பயன்படுத்தப்படாது என எதிர்பார்க்கப்படும் 7,500 மில்லியன் ரூபா நிதியை இதற்காக ஒதுக்குவதற்காக குறித்த குறைநிரப்பு மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை, பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.