பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2020-07-22
பொதுத் தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் கொவிட் -19 சவாலுக்கு முகங்கொடுத்து சுகாதாரப் பாதுகாப்புடன் அமர்வுகளை முன்னெடுப்பதற்குத் தேவையான சுகாதார வழிகாட்டல் தொகுப்பொன்றைத் தயாரிக்கும் நடவடிக்கைகளை ஆராய்வதற்கு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லக்ஷ்மன் கம்லத் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் குழு இன்று (22) பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தது.
பொதுத் தேர்தலின் பின்னர் ஆரம்பிக்கவிருக்கும் பாராளுமன்றத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் மற்றும் பிரபுக்கள், பாராளுமன்ற பணியாளர்கள், பாதுகாப்புப் பிரிவினர்களை கொவிட் -19 சூழலிலிருந்து பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களைத் தயாரிப்பதற்கு இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதானியுமான நீல் இத்தவல உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் இந்த விஜயத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த வைத்தியர்கள் குழு பாராளுமன்ற சபாமண்டபம், உறுப்பினர்களின் முகப்புக் கூடம், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விசேட விருந்தினர்களுக்கான கலரிகள், உறுப்பினர்களின் உணவுக் கூடம், நூலகம் என்பவற்றை பார்வையிட்டனர். இதனைவிடவும் பாராளுமன்றப் பணியாளர்களின் உணவுக் கூடம், விசேட விருந்தினர்களின் உணவுக் கூடம் உள்ளிட்ட பாராளுமன்ற வளாகத்திலுள்ள முக்கிய இடங்களையும் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்த விஜயத்தின் பின்னர் வைத்தியர் குழுவுக்கும், பாராளுமன்ற அதிகாரிகள் குழுவுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தற்பொழுது பாராளுமன்றத்தில் கடைப்பிடிக்கப்படும் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் காணப்படும் நடைமுறை சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் விஜயத்தின் அவதானிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் எதிர்வரும் நாட்களில் சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைய அமர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டல் தொகுப்பொன்று பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படும்.
கொவிட் சூழ்நிலை மாற்றமடையும்வரை விசேட விருந்தினர்களை பாராளுமன்றத்துக்கு அனுமதிப்பதை வரையறுப்பது முக்கியமானதாகும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
சுகாதார அமைச்சு முன்வைக்கும் வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளை சுகாதாரப் பாதுகாப்பு முறையின் கீழ் முன்னெடுப்பதற்கு சகல நடவடிக்கையும் எடுக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க இங்கு வலியுறுத்தினார்.
2026-11-21
வரவுசெலவுத்திட்ட காலப்பகுதியில் மூன்று சட்டமூலங்களை இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (நவ. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.இதற்கமைய நவம்பர் 23ஆம் திகதி திங்கட்கிழமை, மு.ப 11.00 பி.ப 6.00 மணி வரை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தை நடத்துவதற்கும், பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணி வரை வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.அத்துடன், டிசம்பர் 05ஆம் திகதி சனிக்கிழமை, மு.ப 11.00 மணி முதல் பி.ப 6.00 மணிவரை இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்தையடுத்து பி.ப 6.00 மணி முதல் பி.ப 9.00 மணிவரை இலங்கை கிரிக்கெட் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நடத்தப்படவுள்ளது.டிசம்பர் 07ஆம் திகதி திங்கட்கிழமை, மு.ப 11.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரை பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு ஆகியவற்றின் செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்தையடுத்து பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணி வரை விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல் சட்டமூலம் தொடர்பான குழுநிலை விவாதம் மற்றும் மூன்றாவது மதிப்பீட்டை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. (இச்சட்டமூலம் 2026 ஒக்டோபர் 23ஆம் திகதி இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது) அதற்கமைய, மேற்குறிப்பிட்ட தினங்களில் சபை ஒத்திவைக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.அதேநேரம், பாராளுமன்ற விசேட குழுக்களை நியமிப்பது தொடர்பான மூன்று பிரேரணைகளுக்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அகற்றும் நடவடிக்கையின்போது, பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள், கலாசார விழுமியங்கள் மற்றும் மதச் சுதந்திரம் ஆகியவற்றை மீறிச் செயற்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட அது தொடர்பான விடயங்கள் குறித்து விசாரணை செய்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகப் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல்; சுயாதீன இளைஞர் ஆணைக்குழுவொன்றை நிறுவுவது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காகப் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல்; காவந்திஸ்ஸ யானையின் மரணம், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை ஆராய்ந்து, இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விசேட குழுவொன்றை நியமித்தல் ஆகிய எனும் மூன்று பிரேரணைகளுக்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
2026-11-20
2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 97 மேலதிக வாக்குகளால் இன்று (20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது மதிப்பிடு மீதான வாக்கெடுப்பு பி.ப 6.50 மணிக்கு நடைபெற்றதுடன், இதில் இதற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் பதிவாகின.2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீ்ட்டை வரவுசெலவுத்திட்ட உரை நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் கடந்த 12ஆம் திகதி முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் இன்று வரை (20) வரை 07 நாட்கள் இடம்பெற்றன.இதனைத் தொடர்ந்து குழு நிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்கள் நடைபெறவுள்ளன. இதற்கு அமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
2026-11-20
குளங்களின் நீர்த்தேக்கப் பாதுகாப்பு எல்லையின் அடிப்பகுதியிலோ அல்லது பாதுகாப்பு வலயத்திற்குள்ளோ சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 2,196 வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளில், 1,417 கட்டடங்கள் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளிலும், ஏனைய 779 கட்டடங்கள் இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளிலும் அமைந்துள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்கவினால் வாய்மூல விடைக்காக முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டிருந்த 102 சட்டவிரோதக் கட்டடங்கள் 2022ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் அகற்றப்பட்டுள்ளதாகவும், இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 779 கட்டடங்கள் இன்னும் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் 700 குளங்களும், இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழ் 483 குளங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், சட்டவிரோதக் கட்டடங்களை அகற்றி, குளங்களின் பாதுகாப்பு வலயங்களைச் சட்டரீதியாகப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களமும் இலங்கை மகாவலி அதிகாரசபையும் முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவித்தார்.
2026-11-20
தொல்பொருள் திணைக்களத்தினால் மொனராகலை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் இடங்களில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்காக ஐந்து இடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.அதன்படி, புத்துருவகல, மாளிகாவில, யுதகனாவ மற்றும் கலபெத்த ஆகிய தொல்பொருள் இடங்களும், தெமடமல் விகாரையும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சரத் குமார அவர்களினால் வாய்மூல விடைக்காக முன்வைக்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.மொனராகலை மாவட்டத்தில் இதுவரை 137 தொல்பொருள் இடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவை கலபெத்த, மாளிகாவில, புத்துருவகல மற்றும் பிபில ஆகிய நான்கு தொல்பொருள் வலயங்களுக்குள் அமைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இந்தத் தொல்பொருள் வலயங்களுக்குச் சொந்தமான நிலப்பரப்புகள் குறித்து விளக்கிய அமைச்சர், கலபெத்த வலயத்தில் 2,000.1 சதுர கிலோமீற்றர் பரப்பளவும், மாளிகாவில வலயத்தில் 1,199.2 சதுர கிலோமீற்றர் பரப்பளவும், புத்துருவகல வலயத்தில் 1,426.2 சதுர கிலோமீற்றர் பரப்பளவும், பிபில வலயத்தில் 713.1 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.இந்தத் தொல்பொருள் இடங்களைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள், புத்துருவகல தொல்பொருள் இடத்தில் மத்திய கலாசார நிதியத்தினாலும், யுதகனாவ தொல்பொருள் இடத்தில் விகாரை நிர்வாகத்தினாலும், தெமடமல் விகாரையில் விகாரை நிர்வாகத்தினாலும் போதியளவில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.எனினும், மாளிகாவில மற்றும் கலபெத்த தொல்பொருள் இடங்களில் காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks

