01

E   |   සි   |  

2020-03-03

செய்தி வகைகள் : செய்திகள் 

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 33 ஆம் உறுப்புரையின் பநதி (2) இன் உப பந்தி (இ) உடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் 70 ஆம் உறுப்புரையினால் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டும், 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் ஏற்பாடுகளைப் பின்பற்றியும், 2020 மார்ச் 02 ஆம் திகதி நள்ளிரவிலிருந்து பாராளுமன்றத்தைக் கலைத்து, 2020 மே மாதம் 14 ஆம் திகதியன்று பாராளுமன்றமொன்றைக் கூடுமாறு அழைக்கிறார்.

 

இதற்கு மேலதிகமாக, 2020.04.25 ஆம் திகதி பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடாத்துவதற்கும், 2020.03.12 ஆம் திகதி முதல் 2020.03.19 ஆம் திகதி வரையான காலப் பகுதி பெயர்குறித்த நியமனக் காலப்பகுதியாகவும் குறித்துரைக்கப்படுகிறது.

 

[ 2020 மே 02ஆம் திகதிய 2165/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி ]

 

 



தொடர்புடைய செய்திகள்

2026-10-27

கட்டார் தூதுவர் இலங்கைப் பாராளுமன்ற சபாநாயகரைச் சந்தித்தார்

கட்டார் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மாண்புமிகு ஹமாட் பின் மொஹமட் அல் – டொசாரி அவர்கள், கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (23) இலங்கைப் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது பொதுவான அர்ப்பணிப்பும் வலியுறுத்தப்பட்டது.கட்டார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு இவ்வருடத்துடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெற்ற இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நிலையான பங்காளித்துவம் வலியுறுத்தப்பட்டது. அத்துடன், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மையளிக்கும் வகையில் புதிய தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வதற்குமான தமது அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.தூதுவரை வரவேற்ற கௌரவ சபாநாயகர், கட்டார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவும் வலுவான மற்றும் சுமுகமான உறவுகளைச் சுட்டிக்காட்டியதுடன், இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதில் உயர்மட்டப் பரிமாற்றங்களின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். அண்மைக் காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற உயர்மட்ட விஜயங்களை நினைவுகூர்ந்த அவர், பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதற்கும் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் அவை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.கட்டாரில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்கள் வழங்கும் பெறுமதிமிக்க பங்களிப்பையும் சபாநாயகர் பாராட்டினார். குறிப்பாக, கட்டாரின் அபிவிருத்திக்கு அவர்கள் வழங்கும் பங்களிப்பு மற்றும் அவர்கள் அனுப்பும் பணத்தின் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு கிடைக்கும் ஆதரவு ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார். இலங்கைக்கு கட்டார் அரசு வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றியைத் தெரிவித்த அவர், இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மையளிக்கும் வகையில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.சர்வதேச பங்காளித்துவத்தை நெருக்கமாக்குவதில் பாராளுமன்ற இராஜதந்திரத்தின் பங்கை எடுத்துரைத்த கௌரவ சபாநாயகர், இலங்கை–கட்டார் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை அமைப்பதற்கான இலங்கையின் விருப்பத்தையும் தெரிவித்தார். இத்தகைய முயற்சியானது இரு நாடுகளின் பாராளுமன்ற நிறுவனங்களுக்கிடையில் கலந்துரையாடல், அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளுதல், மேலும் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கான பயனுள்ள தளமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.இங்கு கருத்துத் தெரிவித்த தூதுவர் அல் – டொசாரி, நம்பகமான நண்பராகவும் பங்காளியாகவும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கான கட்டாரின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், இரு நாட்டு மக்களுக்கிடையிலான நெருக்கமான தொடர்புகளை மேம்படுத்துவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். சுற்றுலா, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட முக்கிய துறைகளிலும், பரஸ்பர அக்கறைக்குரிய ஏனைய துறைகளிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை ஆராய்தல், தற்போதுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை இரு நாட்டு மக்களுக்கும் நடைமுறை நன்மைகளை வழங்கும் வகையில் மாற்றியமைத்தல் ஆகியவற்றுக்கான தமது பொதுவான அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.இந்த விஜயத்தின்போது, பாராளுமன்றக் கட்டடத்தின் கட்டடக்கலைச் சிறப்பையும் அதனைச் சூழவுள்ள இயற்கை அழகையும் தூதுவர் பாராட்டினார். அத்துடன், பாராளுமன்ற வளாகத்தில் சுற்றுப்பயணத்திலும் அவர் கலந்துகொண்டார்.


2026-10-27

நேர்மையான அரசியல் தலைமைகளை உருவாக்க நேர்மையான சமூகம் அவசியம் – பிரதி சபாநாயகர்

அரசியல் தலைவர்கள் ஊழலற்றவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும் எனச் சமூகம் எதிர்பார்க்குமானால், அவ்வாறான தலைமைத்துவம் உருவாவதற்கு ஒட்டுமொத்த சமூகத்திலும் நேர்மையும் ஒழுக்க விழுமியங்களும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனப் பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி தெரிவித்தார்.ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பாராளுமன்ற சபா மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற வெள்ளவத்தை சைவ மங்கையர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற கன்னி அமர்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதி சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார்.நாட்டின் அரசியல் வாதிகள் சமூகத்திலிருந்தே தெரிவுசெய்யப்படுகின்றனர் எனச் சுட்டிக்காட்டிய பிரதி சபாநாயகர், எதிர்காலத் தலைவர்களான மாணவ சமூகத்தினர் பாடசாலைப் பருவத்திலிருந்தே நேர்மையானவர்களாக உருவாக வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தின் மாணவியருக்குப் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பில் நடைமுறை அனுபவங்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் குறித்த பாடசாலை, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் ஆகியன இணைந்து இந்நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (ஜனாதிபதி நிதியம்) சுபாஷ் ரோஷன் அவர்கள், ஜனாதிபதி நிதியத்தினால் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் சேவைகளை விளக்கினார்.கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஆ.சர்வேஸ்வரன் அவர்கள் இலங்கையின் அரசியலமைப்புத் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளித்தார். அத்துடன், பாராளுமன்றத்தின் பிரதான உத்தியோகத்தர் ரீ.என்.எம்.பி.ஷஹீட்  பாராளுமன்றத்தின் வகிபாகம் மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றிய விளக்கவுரையொன்றை நிகழ்த்தினார்.மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு, சபாநாயகர் தேர்தல் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்புடன் தொடங்கியது. இதன் அமைச்சர்கள் தங்கள் அமைச்சுக்களின் சார்பில் பாடசாலையில் செயற்படுத்த உத்தேசித்துள்ள திட்டங்கள் குறித்த முன்மொழிவுகளை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினர்.இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கௌரவ பிரதிசபாநாயகர், கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்திற்குப் பொறுப்பான ஆசிரியை சிந்தூரி பத்மராஜ் நன்றியுரையாற்றினார்.இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றால் கூட்டாக நிகழ்த்தப்படும் தொடர் மாணவர் பாராளுமன்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில்  ஜனாதிபதியின் மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதி செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன்ட் கேணல் நதீக தங்கொல்ல, சைவ மங்கையர் வித்தியாலயத்தின் அதிபர் அருந்ததி ராஜவிஜயன் சார்பில் பிரதியதிபர் மலர்விழி ஸ்ரீகுமார், பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


2026-10-23

‘பிரஜா சக்தி’ தேசிய இயக்கத்தின் கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 25 பில்லியன் ரூபா

‘பிரஜா சக்தி’ வறுமையை ஒழிப்பதற்கான தேசிய இயக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 25,000 மில்லியன் ரூபா நிதியில், 23,000 மில்லியன் ரூபா மாவட்ட மட்டத்தில் சமூக அபிவிருத்திச் சபைகளால் அடையாளம் காணப்படும் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 2,000 மில்லியன் ரூபாவிலிருந்து தேசிய மட்டத்தில் அடையாளம் காணப்படும் நடுத்தர அளவிலான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான்  அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விக்குப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பதிலிலேயே அமைச்சர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.‘பிரஜா சக்தி’ தேசிய இயக்கத்தின் கீழ் 24,221.38 மில்லியன் ரூபா செலவில் 15,725 திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 15,316 திட்டங்கள் வாழ்வாதார அபிவிருத்தியின் கீழும், 273 திட்டங்கள் கல்வியின் கீழும், 136 திட்டங்கள் சுகாதாரத்தின் கீழும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அனைத்துத் திட்டங்களையும் 2026.12.31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள சமூக அபிவிருத்திச் சபைகள் ஊடாக, அந்தந்த மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலவும் பல்பரிமாண வறுமையை ஒழிப்பதற்கு நேரடியாகப் பங்களிக்கும் திட்டங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. உற்பத்திப் பொருளாதாரம், உணவுப் பாதுகாப்பு, சமூகச் சூழல், மனித வள அபிவிருத்தி, பராமரிப்பு, விநியோக வலையமைப்புகள் மற்றும் அணுகல் வசதிகள் ஆகிய துறைகளின் கீழ் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகம் ஆகியவற்றின் ஊடாக மாற்றுத்திறன்களைக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான விசேட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கல்வி அமைச்சு மற்றும் ஏனைய தொடர்புடைய அமைச்சுகள் ஊடாகவும் மாற்றுத்திறன்களைக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கு நிதியுதவி அல்லது ஏனைய நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.அத்துடன், மாற்றுத்திறனாளிகளையும் அவர்களது குடும்ப அலகுகளையும் வலுவூட்டும் நோக்கில், அவர்களுக்கென விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், நிதியுதவி வழங்குதல், நிவாரண உதவிகளை வழங்குதல் மற்றும் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.


2026-10-22

மிளகு பயிர்ச்செய்கையின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காகப் பல்வேறு ஆய்வுகள்

மிளகு பயிர்ச்செய்கையின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக மரபியல் பண்புகளின் மதிப்பீடு, நோய்கள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், பயிர் மேம்பாடு, தாவரப் போசணை முகாமைத்துவம், பயிரியல் ஆய்வுகள், அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பம், பெறுமதி சேர்த்தல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களைக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சரத் குமார அவர்கள் வாய்மூல விடைக்காக எழுப்பிய கேள்விகளுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.இலங்கையின் மிளகு உற்பத்திக்கு முக்கிய பங்களிப்பை வழங்கும் மாவட்டங்களாக கம்பஹா, கண்டி, மாத்தளை, நுவரெலியா, ஹம்பாந்தோட்டை, குருநாகல், பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.தற்போது நாட்டில் பயிரிடப்படும் மிளகு வகைகளில் உள்ளூர் மிளகு வகை, பன்னியூர் 1 மற்றும் டிங்கிரி ரால, கொஹுகும்புரே ரால, பூட்டாவே ரால ஆகிய உள்ளூர் தெரிவு வகைகளும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.மிளகு பயிர்ச்செய்கையை மேலும் விரிவுபடுத்துவதற்காக நடுகைப் பொருட்களை இலவசமாக வழங்குதல், முதலீட்டு உதவிகளை வழங்குதல், சிறிய அளவிலான வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கைத் திட்டங்களின் கீழ் மிளகுச் செடிகளை இலவசமாக வழங்குதல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்குத் தேவையான அறிவையும் உதவிகளையும் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.அத்துடன், காலநிலை மாற்றங்களுக்கு மிளகு பயிர்ச்செய்கையை ஏற்புடையதாக்குவதற்குப் பொருத்தமான நீர்ப்பாசன முறைகளை அறிமுகப்படுத்துதல், நோய்கள் மற்றும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல், விலங்குகளால் ஏற்படும் சேதங்களைத் தடுப்பதற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான முதலீட்டு உதவிகளை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.மிளகு உற்பத்திகளை சர்வதேச தரங்களுக்கு அமைவாகத் தயாரிப்பதற்காகச் சிறந்த விவசாய நடைமுறைகள் மற்றும் சிறந்த உற்பத்தி நடைமுறைகள் ஊக்குவிக்கப்படுகின்றன. மேலும், உற்பத்திகளின் தரத்தை மேம்படுத்தி, பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை உருவாக்குவதற்குத் தேவையான அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் முதலீட்டு உதவிகள் வழங்கப்படுவதாகப் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.மேலும், மிளகு உற்பத்திகளை வெளிநாட்டுச் சந்தைகளில் சேதன உற்பத்திகளாகச் சந்தைப்படுத்தும் நோக்கில், பயிர்ச்செய்கைகளைச் சேதனப் பயிர்ச்செய்கைகளாக மாற்றுதல், அதற்குத் தேவையான சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் முதலீட்டு உதவிகளை வழங்குதல், அத்துடன் ஏற்றுமதி விவசாயக் கிராமங்களை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.பல்வேறு ஊடகங்கள் ஊடாக மிளகு பயிர்ச்செய்கை தொடர்பான அறிவு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், மிளகு உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதிக்குத் தேவையான ஆலோசனைச் சேவைகளை வழங்குதல் மற்றும் விநியோகஸ்தர்களையும் கொள்வனவாளர்களையும் தொடர்புபடுத்துதல் உள்ளிட்ட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதாக மேலும் தெரிவித்தார்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks