E   |   සි   |  

2019-03-27

செய்தி வகைகள் : குழு செய்திகள் 

இலங்கையில் மாற்றத்தை உருவாக்கிய பெண்களை கொண்டாடுதல்

பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் பெண்கள் பாராளுமன்ற ஒன்றியத்தினால் USAID/SDGAP எனும் அமைப்புக்களுடன் இணைந்து சிறப்பான சேவையாற்றிய விசேட தனிச் சிறப்புவாய்ந்த இலங்கைப் பெண்களைப் பாராட்டுவதற்கான விழா 2019 மார்ச் மாதம் 27 ஆம் திகதி, புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

 

அதன்பிரகாரம், கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களின் தலைமையில் சிறப்பான சேவையாற்றிய விசேட தனிச் சிறப்புவாய்ந்த பன்னிரண்டு பெண்களின் உருவப்படங்கள் பாராளுமன்றத்தின் கீழ் மாடியில் அமைந்துள்ள பொதுமக்கள் வரவேற்பு மண்டபத்தில் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டன. உருவப்படங்களின் கண்காட்சி 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரை பாராளுமன்றத்தின் பொதுமக்கள் வரவேற்பு மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

 

விசேட தனிச் சிறப்புவாய்ந்த 12 பெண்களாவன;

  • கௌரவ சிறிமா பண்டாரநாயக்க - உலகின் முதலாவது பெண் பிரதமர்
  • தேசமான்ய விமலா டி சில்வா - இலங்கையின் முதலாவது பெண் பல்கலைக்கழக உபவேந்தர்
  • கலாநிதி பிரேமளா சிவப்பிரகாசப்பிள்ளை சிவசேகரம் - இலங்கையின் முதலாவது பெண் பொறியியலாளர்
  • சுமித்ரா பீரிஸ் - இலங்கையின் முதலாவது பெண் திரைப்படத் தயாரிப்பாளர்
  • பேராசிரியர் சாவித்ரி குணசேகர - முதல் பெண் பேராசிரியர் மற்றும் முதல் பெண் துணை வேந்தர்
  • ஜயந்தி குறு-உதும்பல - எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இலங்கையின் முதலாவது பெண் மலையேறியவர்
  • கலாநிதி. ஆஷா டி வொஸ் - கடல் உயிரியளாளர், சமுத்திரம் பற்றிய கல்வியலாளர், வட இந்து சமுத்திரத்தின் நீலத் திமிங்கிலம் பற்றிய முதல் ஆய்வாளர்
  • கலாநிதி ஹாசினி ஜயதிலக - புற்றுநோய் ஆய்வின் திருப்புமுனையாளர்
  • நுஷெல் டி சில்வா - கலை கல்வியாளர் மற்றும் சமூக சுயதொழிலாளர்
  • ப்ரின்ஸி மங்கலிகா - சமூக சேவையாளர், ‘பொசிடிவ் விமன் நெட்வர்க்’ மற்றும் HIV தாக்கத்துக்கு உள்ளானவர்களுக்கான அமைப்பை உருவாக்கியவர்
  • கஸ்தூரி செல்லராஜா வில்சன் - நிருவாக இயக்குனர், ஹேமாஸ் மருந்துகள், கடல்சார் லாஜிஸ்டிக்ஸ்
  • இர்பாதா முஸ்ஸம்மில் - உள்ளக வடிவமைப்பாளர்

 

1 2

3 4



தொடர்புடைய செய்திகள்

2026-06-12

பிரான்ஸிற்கான புதிய இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்கோவிற்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி ஆகிய பதவிகளுக்கான நியமனத்திற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம்

பிரான்ஸிற்கான புதிய இலங்கைத் தூதுவர் மற்றும் யுனெஸ்கோவிற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ஆகிய பதவிகளுக்கான நியமனத்திற்கு அண்மையில் (ஜுன் 10) கூடிய பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.இதற்கு அமைய பிரான்ஸ் குடியரசிற்கான இலங்கைக்கான புதிய தூதுவர் மற்றும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு ஒழுங்கமைப்பிற்கான (யுனெஸ்கோ) இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக பி.ஆர்.எஸ்.எஸ்.குணரத்ன அவர்களை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நிஹால் அபேசிங்க அவர்களின் தலைமையில் கூடிய பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் கௌரவ அமைச்சர்களான கலாநிதி அனில் ஜயந்த, சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, ராமலிங்கம் சந்திரசேகர், கலாநிதி உபாலி பன்னிலகே, கௌரவ பிரதியமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஸாட் பதியுதீன், குமார ஜயக்கொடி, கதிரவேல் சண்முகம் குகதாசன், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


2026-06-11

பொதுப் படுகடன் செலுத்துவதற்காக பொதுத் திறைசேரியிடம் காணப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமற்போனமை தொடர்பான அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழுவின் முன்னிலையில்

பொதுப் படுகடன் செலுத்துவதற்காக பொதுத் திறைசேரியிடம் காணப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமற்போனமை தொடர்பாக, நிதி அமைச்சினால் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு வழங்கப்பட்டிருந்த அறிக்கை குறித்துக் கலந்துரையாடுவதற்காக அக்குழு அண்மையில் (ஜுன் 08) பாராளுமன்றத்தில் கூடியது. கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா அவர்களின் தலைமையில் கூடிய இக்குழுக்கூட்டத்தில், கௌரவ பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்ஹ, கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, சட்டத்தரணி சித்ரால் பெர்னாந்து, விஜேசிரி பஸ்நாயக்க மற்றும் சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்துகொண்டனர்.இக்கலந்துரையாடலில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இலங்கை கணினி அவசர தாயார்நிலைக் குழுவின் (CERT) அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இங்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த அறிக்கை தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், மத்திய வங்கி அதிகாரிகள் இவ்வறிக்கையைப் பரிசீலித்த பின்னர் இது தொடர்பிலான தங்களது பிறிதொரு அறிக்கையையும் அரசாங்க நிதி பற்றிய குழுவிற்குச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். அதற்கமைய, இவ்விரு அறிக்கைகளையும் பரிசீலித்த பின்னர் இறுதி அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டு பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தவிசாளர் தெரிவித்தார்.


2026-06-09

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (COPA) அறிக்கையை சட்டமா அதிபருக்கு ஆற்றுப்படுத்துவதற்கு பாராளுமன்றம் அனுமதி

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தொடர்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் (COPA) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விபரங்கள் அடங்கிய அறிக்கையை, சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கும் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குமாக ஆற்றுப்படுத்துவதற்கான பிரேரணைக்கு பாராளுமன்றத்தின் அனுமதி இன்றைய தினம் (ஜுன் 09) வழங்கப்பட்டது.இந்த அறிக்கை, பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது 2025 மார்ச் 10 மற்றும் 21 ஆகிய திகதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தொடர்பாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விபரங்களை உள்ளடக்கியுள்ளதுடன், இது 2025 ஜூலை 25 ஆம் திகதி வெளியீட்டுத் தொடர் இலக்கம் 243 இன் கீழ் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 119(4) இன் ஏற்பாடுகளுக்கு இணங்க, தொடர்புடைய அறிக்கை நிதி அமைச்சரினதும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரினதும் அவதானிப்புகளுக்காக ஆற்றுப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவ்வமைச்சர்களின் பதில்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், 2026 மார்ச் 04 ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் இவ்விடயங்கள் மீண்டும் பரிசீலிக்கப்பட்டன.அதன்போது, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்ட நிதி முறைகேடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பாக விரைவான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, குழுவின் அறிக்கையை சட்டமா அதிபருக்கு ஆற்றுப்படுத்துவதற்காகப் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.அதற்கமைய, “அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் 2025 மார்ச் 10 மற்றும் 21 ஆகிய திகதிகளில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த விபரங்களை உள்ளடக்கிய, 2025 ஜூலை 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வெளியீட்டுத் தொடர் இலக்கம் 243 ஐக் கொண்ட அறிக்கை, சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கும் தேவையான நடவடிக்கைகளுக்குமாக ஆற்றுப்படுத்தப்பட வேண்டும்” எனும் பிரேரணைக்கு பாராளுமன்றத்தினால் இன்றைய தினம் அனுமதி வழங்கப்பட்டது.பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குழுவின் அறிக்கையொன்று, இதற்கு முன்னர் சட்டமா அதிபரின் அவதானிப்புகளுக்கும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்குமாக இவ்வாறு ஆற்றுப்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதுடன், இத்தகையதொரு நடவடிக்கை எடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.


2026-06-08

நிதி (திருத்தச்) சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம்

2018ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க நிதிச் சட்டமூலத்தைத் திருத்துவதற்கான நிதி (திருத்தச்) சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா அவர்களின் தலைமையில் கூடியதுடன், இக்கூட்டத்தில் கௌரவ பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, (சட்டத்தரணி) லக்மாலி ஹேமச்சந்திர மற்றும் விஜேசிறி பஸ்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.இலங்கையில் தொலைத்தொடர்பு துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை விஸ்தரிப்பது மற்றும் டிஜிட்டல் அபிவிருத்தியை மேம்படுத்துவது என்ற இலக்கை அடைவது இத்திருத்தத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவில் புதிதாக அமைக்கப்படும் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு அறவிடப்படும் வரியில் தற்காலிக நிவாரணம் வழங்க இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இச்சட்டமூலத்தில், 2026 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னல் அமுலுக்கு வரும் வகையில் புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு  ஐந்தாண்டு வரி விலக்கு அளிப்பது முக்கிய அம்சமாக உள்ளது.அத்துடன், 2011ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க தொலைத்தொடர்பு அறவீடு சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய வரி விகிதத்தை சட்டரீதியாக ஒழுங்குமுறைப்படுத்துவது மற்றும் புதுப்பிப்பது, வரி ஏய்ப்பின் போது (Bad Debts) பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகளை விளக்குவது மற்றும் 2014ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் வரி விகிதம் குறித்த பிரச்சினைகளை தீர்த்து வரி முகாமைத்துவத்தை வெளிப்படைத்தன்மையாக முன்னெடுப்பது இதன் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இங்கு வரி விகிதத்தை முறைப்படுத்துவது மற்றும் சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பான திருத்தத்திற்கு குழுவில் அனுமதி வழங்கப்பட்டதுடன், செலுத்தப்படாத கட்டணங்கள் மீதான வரிகளைத் (Telecom Levy) குறைப்பதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தற்பொழுது நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு அமைய வாடிக்கையாளர்களினால் வரி செலுத்தப்படாத சந்தர்ப்பங்களில் வரியைக் கணக்கிடுவது தொடர்பில் தெளிவான ஏற்பாடுகள் இன்மையால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தப்படாத கட்டணங்களிலிருந்து வரிகளைக் கழிப்பதற்கு சேவை வழங்குனர்களுக்கு அனுமதி அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.இருப்பினும், சிறு வணிகங்களுக்கு இதுபோன்ற நிவாரணம் கிடைக்காத சூழலில், ஒரு சில பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் இந்த நிவாரணத்தை வழங்குவது நியாயமற்றது என்று குழு வலியுறுத்தியது. ஒரு பெரிய நிறுவனம் 2022-ஆம் ஆண்டிலிருந்து இந்த வரி நிவாரணத்தைக் கோரி வருவதாகவும், இது சந்தையின் ஒட்டுமொத்த நேர்மைக்குத் தடையாக அமையக்கூடும் என்றும் குழு சுட்டிக்காட்டியது. நுகர்வோரிடமிருந்து வரிகளை வசூலிப்பது நிறுவனங்களின் பொறுப்பு என்றும், அவர்கள் தவறுவது அரசாங்க வருவாயைக் குறைப்பதற்கான காரணமாக இருக்கக்கூடாது என்றும் குழுவின் தலைவர் மேலும் வலியுறுத்தினார். இதற்கமைய செலுத்தப்படாத கட்டணங்களுக்கான வரி விலக்கு அளிப்பது தொடர்பில் மேலும் விளக்கங்களைப்  பெறவேண்டியிருப்பதால் இது குறித்த விதியைப் எதிர்காலத்தில் மறுபரிசீலனை செய்வதற்கும் குழு தீர்மானித்தது.அதேநேரம், இணையவழி கசினோ நடவடிக்கைகளுக்கு அரசாங்க முத்திரை தவறாகப் பயன்படுத்தப்படுவதும் குழுவின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இலங்கையின் அரசாங்க முத்திரையைப் பயன்படுத்தி "உரிமம் பெற்றது" என்று குறிப்பிடும் இணையவழி கசினோ விளம்பரங்கள் குறித்து குழு விசாரணை நடத்தியதுடன், இதுவரை எந்தவொரு இணையவழி கசினோ நிறுவனத்திற்கும் உரிமங்கள் வழங்கப்படவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.இது தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்தி குழுவிற்கு அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தவும் குழு முடிவெடுத்தது.அத்துடன், நிதி, வரி மற்றும் பொருளாதாரக் கொள்கை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் இங்கு கவனத்தில் எடுக்கப்பட்டதுடன், இவற்றுக்கு அங்கீகாரமும் வழங்கப்பட்டது.மேலும், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் வகைப்பாடு மற்றும் வரிவிதிப்பை நெறிப்படுத்தும் நோக்கில் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி மற்றும் மதுவரியின் கீழ் ஒருங்கிணைந்த வகைப்பாட்டுக் குறியீடுகளுக்கு (HS குறியீடுகள்) புதிய தேசிய உப பிரிவுகளை அறிமுகப்படுத்துவதற்கான கட்டளைகளும் இங்கு பரிசீலிக்கப்பட்டன.அத்துடன், தேசிய ஆடை துறைக்கு நியாயமான போட்டிச் சந்தையை உருவாக்கும் நோக்கில் அறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கு அறவிடப்பட்ட செஸ் வரியை நீக்கி 2026 ஏப்ரல் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில்18% பெறுமதி சேர் வரியை அறிவிடும் கட்டளையும் இங்கு கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மாற்றத்தின் காரணமாக இறக்குமதியின் போது செலுத்த வேண்டிய வரியின் அளவு அதிகரித்திருந்தாலும், சேர் பெறுமதி வரிக்கு (VAT) பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் அந்த வரித் தொகையை வரவுப் பற்றாகத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதால், இது அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.அதேநேரம், இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனர்த்த நிவாரண பண ரசீதுகளுக்கு முத்திரைத் தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கும் கட்டளையும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட்டது.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks