E   |   සි   |  

2016-06-24

செய்தி வகைகள் : செய்திகள் 

தகவலுக்கான உரிமை சட்டமூலம் நிறைவேறியது

தகவலுக்கான உரிமை எனும் சட்டமூலம் இன்று (ஜூன் 24) பாராளுமன்றத்தினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்ட்டது.

 

இது கௌரவ பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்களினால் 2016 மார்ச் 24 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. நேற்று ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்றும் தொடரப்பட்டது.

 

இச்சட்டமூலத்தின் பிரதான குறிக்கோள்; தகவலைப்பெற அணுகுதலுக்கான உரிமைக்கு ஏற்பாடு செய்வதற்கும், அணுக்கம் மறுக்கப்படக்கூடிய ஏதுக்களைக் குறித்துரைப்பதற்கும், தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவினைத் தாபிப்பதற்கும், தகவல் அலுவலர்களின் நியமனத்திற்கும், தகவலைப் பெறுவதற்கான நடவடிக்கை முறைகளைத் தருவதற்கும் அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்டிருப்பதற்காகவுமாகும். இது தகவலைப்பெற அணுகுதலுக்கான உரிமைக்குப் பயன்கொடுப்பதன் மூலம் பகிரங்க அதிகாரசபைகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறும் பண்பாட்டைப் பேணி வளர்த்து அதன்மூலம் இலங்கை மக்கள் ஊழலை எதிர்த்து நிற்றல் மற்றும் பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துதல் ஊடாக முழுமையாகப் பங்கேற்கக் கூடியதும் நாட்டின் பொது வாழ்வில் தீவிரமாகப் பங்கேற்கக் கூடியதுமாகவிருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இச்சட்டத்தின் பயனுறு அமுலாக்கலை உறுதிப்படுத்துவது வெகுசன ஊடக அமைச்சின் பொறுப்பாகும்.

 

இச்சட்டத்தின் 5ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைவாக, பிரசை ஒவ்வொருவரும், ஒரு பகிரங்க அதிகாரசபையின் உடைமையில், கட்டுக்காப்பில் அல்லது கட்டுபாட்டில் இருக்கின்ற தகவலைப்பெற அணுகுதலுக்கான உரிமையொன்றைக் கொண்டிருக்க வேண்டும். பின்வரும் சூழ்நிலைகளில் தகவலை அணுகுதலுக்கான கோரிக்கை மறுக்கப்படலாம்:

 

எந்தவொரு பொதுமக்களுக்கும் அக்கறையற்ற தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான தகவல், அரசின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்கள், சர்வதேச உடன்படிக்கைகள் தொடர்பான இரகசிய தகவல்கள், இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடிய தகவல்கள், வியாபார இரகசியம், மருத்துவப் பதிவேடுகள், எவரேனும் அலுவலருக்கும் பகிரங்க அலுவலரொருவருக்கும் இடையிலான வெளிப்படுத்த அனுமதிக்கப்படாத ஏதேனும் தொடர்பாடல், ஏதேனும் குற்றச்செயலை கண்டறிதலில் இடையூறு விளைவிக்கும் தகவல், தகவலின் வெளிவிடுகையானது நீதிமன்ற அவமதிப்பாக இருத்தல், தகவலின் வெளிவிடுகையானது பாராளுமன்ற சிறப்புரிமைகளின் மீறலாக உள்ளவிடத்து மற்றும் தகவலின் வெளிவிடுகையானது பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்படுவதாகவுள்ள பரீட்சையொன்றின் சீரியநிலைக்கு தீங்காக இருத்தல்.

 

அமைச்சுகள், திணைக்களங்கள், பகிரங்கக் கூட்டுத்தாபனங்கள், உள்ளூர் மன்றங்கள், அரசாங்கத்தினால் பொருளளவில் நிதியளிக்கப்படுகின்ற அரச சார்பற்ற ஒழுங்கமைப்புகள், உயர்கல்வி நிறுவனங்கள், நீதிமன்றங்கள், நியாயசபைகள் மற்றும் ஏனையவை தகவல் அணுகலை வழங்கக்கூடியதாகவும் பதிவேடுகளை பராமரிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அவர்கள் அனைத்து பதிவேடுகளையும் மின்னணு வடிவத்தில் பாதுகாக்க முயல வேண்டும்.

 

தகவலுக்கான உரிமை ஆணைக்குழு என அழைக்கப்படும் ஒரு குழு தாபிக்கப்படல் வேண்டும். ஆணைக்குழுவானது, அரசியலமைப்புப் பேரவையின் விதப்புரைமீது சனாதிபதியினால் நியமிக்கப்படும் ஐந்து (05) ஆட்களைக் கொண்டமைந்தாதல் வேண்டும். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், வெளியீட்டாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் ஊடக ஆட்களின் ஒழுங்கமைப்புக்கள் மற்றும் வேறு சிவில் சமூக ஒழுங்கமைப்புக்கள் ஆகிய ஒவ்வொன்றினாலும் ஓராளை விதிந்துரைத்தல் வேண்டும். திறமையைப் பறைசாற்றி பகிரங்க வாழ்வில் தமக்கெனச் சிறந்த நிலையை ஏற்படுத்திக்கொண்ட ஆட்கள், அனுபவம் மற்றும் சட்டம், ஆட்சி, பொது நிர்வாகம், முகாமைத்துவம் முதலியோர் இவ்வாணைக்குழுவிற்கு நியமிக்கப்படுவர். இவ்வாணைக்குழு பகிரங்க அதிகாரசபைகள் மற்றும் தகவல் அலுவலர்கள் ஆகியோரின் செயல்திறன்களை கண்காணித்தல் வேண்டும்.

 

அனைத்து பகிரங்க அதிகாரசபைகளும் தகவல் அலுவல்களை நியமித்தல் வேண்டும். அவர்கள் தகவலுக்கான கோரிக்கையைக் கையாளுதல் வேண்டும். ஏதேனும் தகவலைப் பெற விரும்பும் எவரேனும் பிரசை தோதான தகவல் அலுவலருக்கு கோரப்படும் தகவல் பற்றிய விபரங்களை குறித்துரைக்கின்ற எழுத்திலான ஒரு கோரிக்கையைச் செய்தல் வேண்டும். தகவல் அலுவலர் உடனே, கோரப்பட்ட தகவலை வழங்க அல்லது கோரிக்கையை நிராகரிக்க முடிவு செய்ய வேண்டும். கோரிக்கையானது நிராகரிக்கப்படும் போது, எக்காரணத்தினால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதென்பதை தகவல் அலுவலர் கோரிக்கையை விடுத்த பிரசைக்கு அறிவிக்க வேண்டும்.

 

தகவல் அலுவலரினால் தரப்பட்ட காரணங்களுடன் திருப்திப்படாத பிரசையொருவர், ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடு ஒன்றை முன்வைக்கலாம். ஆணைக்குழுவின் முடிவினால் இன்னலுறப்பட்ட பிரசையொருவர் அல்லது பகிரங்க அதிகாரசபை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அத்தகைய முடிபுக்கெதிராக மேன்முறையீடு செய்யலாம்.

 

சட்டமூலத்தை பதிவிறக்குக



தொடர்புடைய செய்திகள்

2026-11-21

வரவுசெலவுத்திட்ட காலப்பகுதியில் மூன்று சட்டமூலங்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானம்

வரவுசெலவுத்திட்ட காலப்பகுதியில் மூன்று சட்டமூலங்களை இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் நேற்று (நவ. 20) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.இதற்கமைய நவம்பர் 23ஆம் திகதி திங்கட்கிழமை, மு.ப 11.00 பி.ப 6.00 மணி வரை வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தை நடத்துவதற்கும், பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணி வரை வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதத்தை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.அத்துடன், டிசம்பர் 05ஆம் திகதி சனிக்கிழமை, மு.ப 11.00 மணி முதல் பி.ப 6.00 மணிவரை இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்தையடுத்து பி.ப 6.00 மணி முதல் பி.ப 9.00 மணிவரை இலங்கை கிரிக்கெட் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு விவாதம் நடத்தப்படவுள்ளது.டிசம்பர் 07ஆம் திகதி திங்கட்கிழமை, மு.ப 11.00 மணி முதல் பி.ப 6.00 மணி வரை பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சு ஆகியவற்றின் செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்தையடுத்து பி.ப 6.00 மணி முதல் பி.ப 6.30 மணி வரை விசர்நாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவுசெய்தல் சட்டமூலம் தொடர்பான குழுநிலை விவாதம் மற்றும் மூன்றாவது மதிப்பீட்டை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. (இச்சட்டமூலம் 2026 ஒக்டோபர் 23ஆம் திகதி இரண்டாவது மதிப்பீடு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது) அதற்கமைய, மேற்குறிப்பிட்ட தினங்களில் சபை ஒத்திவைக்கப்படும் சந்தர்ப்பத்தில் ஒத்திவைப்பு வேளைப் பிரேரணைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.அதேநேரம், பாராளுமன்ற விசேட குழுக்களை நியமிப்பது தொடர்பான மூன்று பிரேரணைகளுக்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை அகற்றும் நடவடிக்கையின்போது, பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள், கலாசார விழுமியங்கள் மற்றும் மதச் சுதந்திரம் ஆகியவற்றை மீறிச் செயற்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட அது தொடர்பான விடயங்கள் குறித்து விசாரணை செய்து பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காகப் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல்; சுயாதீன இளைஞர் ஆணைக்குழுவொன்றை நிறுவுவது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காகப் பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்தல்; காவந்திஸ்ஸ யானையின் மரணம், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செயற்பாடுகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றை ஆராய்ந்து, இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக விசேட குழுவொன்றை நியமித்தல் ஆகிய எனும் மூன்று பிரேரணைகளுக்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் அங்கீகாரம் வழங்கப்பட்டது.


2026-11-20

2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது

2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 97 மேலதிக வாக்குகளால் இன்று (20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இரண்டாவது மதிப்பிடு மீதான வாக்கெடுப்பு பி.ப 6.50 மணிக்கு நடைபெற்றதுடன், இதில் இதற்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் பதிவாகின.2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீ்ட்டை வரவுசெலவுத்திட்ட உரை நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் கடந்த 12ஆம் திகதி முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் இன்று வரை (20) வரை 07 நாட்கள் இடம்பெற்றன.இதனைத் தொடர்ந்து குழு நிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரை 19 நாட்கள் நடைபெறவுள்ளன. இதற்கு அமைய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14ஆம் திகதி பி.ப 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.


2026-11-20

குளங்களை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 2,196 வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்புகள்

குளங்களின் நீர்த்தேக்கப் பாதுகாப்பு எல்லையின் அடிப்பகுதியிலோ அல்லது பாதுகாப்பு வலயத்திற்குள்ளோ சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 2,196 வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளில், 1,417 கட்டடங்கள் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளிலும், ஏனைய 779 கட்டடங்கள் இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளிலும் அமைந்துள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் தெரிவித்தார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்கவினால் வாய்மூல விடைக்காக முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்குப் பாராளுமன்றத்தில் பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டிருந்த 102 சட்டவிரோதக் கட்டடங்கள் 2022ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் அகற்றப்பட்டுள்ளதாகவும், இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழுள்ள குளங்களை அண்மித்த பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 779 கட்டடங்கள் இன்னும் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் 700 குளங்களும், இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழ் 483 குளங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், சட்டவிரோதக் கட்டடங்களை அகற்றி, குளங்களின் பாதுகாப்பு வலயங்களைச் சட்டரீதியாகப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களமும் இலங்கை மகாவலி அதிகாரசபையும் முன்னெடுத்து வருவதாக மேலும் தெரிவித்தார்.


2026-11-20

மொனராகலை மாவட்டத்திலுள்ள 05 தொல்பொருள் இடங்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளன

தொல்பொருள் திணைக்களத்தினால் மொனராகலை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் இடங்களில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்காக ஐந்து இடங்கள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.அதன்படி, புத்துருவகல, மாளிகாவில, யுதகனாவ மற்றும் கலபெத்த ஆகிய தொல்பொருள் இடங்களும், தெமடமல் விகாரையும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சரத் குமார அவர்களினால் வாய்மூல விடைக்காக முன்வைக்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.மொனராகலை மாவட்டத்தில் இதுவரை 137 தொல்பொருள் இடங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவை கலபெத்த, மாளிகாவில, புத்துருவகல மற்றும் பிபில ஆகிய நான்கு தொல்பொருள் வலயங்களுக்குள் அமைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.இந்தத் தொல்பொருள் வலயங்களுக்குச் சொந்தமான நிலப்பரப்புகள் குறித்து விளக்கிய அமைச்சர், கலபெத்த வலயத்தில் 2,000.1 சதுர கிலோமீற்றர் பரப்பளவும், மாளிகாவில வலயத்தில் 1,199.2 சதுர கிலோமீற்றர் பரப்பளவும், புத்துருவகல வலயத்தில் 1,426.2 சதுர கிலோமீற்றர் பரப்பளவும், பிபில வலயத்தில் 713.1 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.இந்தத் தொல்பொருள் இடங்களைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான சுகாதார வசதிகள் உள்ளிட்ட ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள், புத்துருவகல தொல்பொருள் இடத்தில் மத்திய கலாசார நிதியத்தினாலும், யுதகனாவ தொல்பொருள் இடத்தில் விகாரை நிர்வாகத்தினாலும், தெமடமல் விகாரையில் விகாரை நிர்வாகத்தினாலும் போதியளவில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.எனினும், மாளிகாவில மற்றும் கலபெத்த தொல்பொருள் இடங்களில் காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks