E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) நிதி ஆணைக்குழுவின் 2012 ஆம் ஆண்டின் வருடாந்தப் பாதீட்டிலிருந்து (அரசியலமைப்பின் 154ண(4) ஆம் உறுப்புரையின் பிரகாரம்) மாகாணங்களுக்கிடையே நிதிகளைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக மேதகு சனாதிபதி அவர்களுக்கு செய்யும் பரிந்துரைகள்
(ii) 2008 டிசெம்பர் 31ம் திகதி முடிவடைந்த நிதி வருடத்திற்கான மத்திய பொறியியல் உசாதுணை பணியகத்தின் அதிபதிகள் சபையின் அறிக்கை
(iii) 2010 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது ஆசுப்பத்திரி
(iv) 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய வியாபார முகாமை நிறுவனம்
(v) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை
(vi) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை முதலீட்டுச் சபை
(vii) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை சமுர்த்தி அதிகார சபை
(viii) 2010 ஆம் ஆண்டுக்கான தென் பிராந்திய அபிவிருத்தி அதிகார சபை
(ix) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை மலையக அபிவிருத்தி அதிகார சபை
(x) 2010 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை
(xi) 2010 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா அபிருத்தி நிதியம்
(xii) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம்
(xiii) 2010 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவகம்
(xiv) 2010 ஆம் ஆண்டுக்கான இணக்கப்பாட்டுப் பணியகம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்


(xv) 2011 ஆம் ஆண்டுக்கான கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் நிர்வாக அறிக்கை


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

திவிநெகும

1995ஆம் ஆண்டின் 30ஆம் இலக்கச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட இலங்கை சமுர்த்தி அதிகாரசபையையும், 1996ஆம் ஆண்டின் 18ஆம் இலக்கச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகாரசபையையும், 2005ஆம் ஆண்டின் 26ஆம் இலக்கச் சட்டத்தினால் தாபிக்கப்பட்ட இலங்கை உடறட அபிவிருத்தி அதிகாரசபையையும் ஒன்றிணைப்பதன் மூலம் திவிநெகும அபிவிருத்தித் திணைக்களம் எனவழைக்கப்படவேண்டியதும் அறியப்பட வேண்டியதுமான திணைக்களமொன்றைத் தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; திவிநெகும சமுதாய அடிப்படையிலான ஒழுங்கமைப்புக்களை கிராமிய மட்டத்தில் தாபிப்பதற்கும், மாவட்ட மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் ஒருங்கிணைக்கும் வலையமைப்பொன்றுக்கு ஏற்பாடு செய்வதற்கும்; திவிநெகும சமுதாய அடிப்படையிலான வங்கிகளையும் திவிநெகும சமுதாய அடிப்படையிலான வங்கித் தொழிற் சங்கங்களையும் தாபிப்பதற்கும்; 1995ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க, இலங்கை சமுர்த்தி அதிகாரசபைச் சட்டத்தையும், 1996ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க, இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தையும், 2005ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க, இலங்கை உடறட அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தையும் நீக்குவதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலத்தினை கெளரவ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன:-

பலமான இலங்கை அடையாளத்தை ஏற்படுத்துதல்

அரச ஆவணங்களில் ஒருவரது சாதியையும் சமயத்தையும் வெளிப்படுத்த வேண்டுமென்ற தேவைப்பாடு பலமான தேசிய அடையாளத்தை ஏற்படுத்துவற்கு தடையாகவும் இடர்ப்பா டகவுமுள்ளதால் இத்தேவைப்பாட்டிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டுமென்று இப் பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

காலி கோட்டை மற்றும் அதனை அண்டியுள்ள வரலாற்று ரீதியான மற்றும் தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாத்தல், மேம்படுத்தல் மற்றும் உரிய பயனைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தல்

சுற்றுலா கைத்தொழில் துறையின் மிக முக்கியமான மையமாகவும், வரலாற்று மற்றும் தொல்பொருள் ரீதியில் பெறுமதியைக்கொண்டதும், உலக மரபுரிமையாகக் கருதப்படுகின்றதுமான காலி கோட்டை மதில், காலி கோட்டையின் உள்பகுதியிலும் காலி கோட்டையை அண்டியும் அமைந்துள்ள வரலாற்று மற்றும் தொல்பொருள் ரீதியான மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் அவற்றுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களினதும் மக்களினதும் பங்கேற்புடன் முறையான திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி இந்த வரலாற்று ரீதியான மரபுரிமைகளின் உரிய பயனை நமது நாடு பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.

சமாதான நீதவான் பதவிகளை வழங்குவதற்கான முறையான வழிமுறையொன்றைத் தயாரித்தல்

சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றதும் சமுகத்திற்கு அளப்பரிய சேவையாற்றுவதுமான சமாதான நீதவான் பதவிகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளுக்குப் புறம்பாக வழங்கப்படுவதன் காரணமாக அப்பதவியின் கெளரவமும் அங்கீகாரமும் படிப்படியாக குறைவடைவதனால் குறித்த நியமனங்களுக்கென முறையான வழிமுறையொன்றைத் தயாரிக்க வேண்டுமென இப்பாராளுன்றம் கருதுகின்றது.

பனை மர விளைச்சலுக்கு ஊக்கமளித்தல்

“கற்பகதரு” எனஅழைக்கப்படும் பொதுமக்களுக்கு மிக்க பயனைப் பெற்றுத்தரும் பனை மர விளைச்சலுக்கு ஊக்கமளித்து பனைப் பொருள் அபிவிருத்திக்காக அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“'மதட தித' நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்தல்" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ விக்டர் அந்தனீ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1840 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஆகஸ்ட் 21ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks