பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
பாராளுமன்றத்தில் அனைவருடனும் இணைந்து உண்மையான உற்சாகத்துடன் தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடுவதன் ஊடாக மனிதகுலத்தின் உண்மையான அழகும், இலங்கை தேசத்தின் ஒற்றுமையும் பிரதிபலிக்கின்றது என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் தெரிவித்தார். ஒரு நாட்டில் அதன் மக்கள் தங்களுடைய கலாசார பன்முகத் தன்மையைப் பாதுகாத்து ஒரே தேசமாக ஒன்றிணையும்போதே அந்நாட்டில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 15ஆம் திகதி கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு பாராளுமன்றத்தில் இன்று (ஜன. 21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, தைப்பொங்கல் என்பது வெறும் பண்டிகை மட்டுமல்ல, விவசாயம் மற்றும் இயற்கையின் மீது இலங்கையர்கள் கொண்டுள்ள ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான கொண்டாட்டமாகும் என்றார். நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் பாராளுமன்றப் பணியாளர்கள், பல்வேறு மத மற்றும் கலாச்சார பின்னணிகளைக் கொண்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பல்வேறு கலாச்சார பாரம்பரியத்தைப் புரிந்துகொண்டு ஒற்றுமையுடன் இதுபோன்ற கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வது ஒரு தனித்துவமான வாய்ப்பு என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) ஸ்ரீ பவானந்தராஜா அவர்களின் கோரிக்கைக்கு இணங்க கௌரவ சபாநாயகரின் வழிகாட்டிலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து இலங்கை பாராளுமன்றம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
தமிழ் கலாசாரம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் அதற்கான மதிப்புக்களை ஊக்குவித்தல், தமிழ் சமூகத்தின் பாரம்பரியம் மற்றும் மரபுகளை மதித்தல் மற்றும் இலங்கையின் கலாச்சார பன்முகத்தன்மைக்குள் ஒரு தேசிய அடையாளத்தை வளர்ப்பது உள்ளிட்ட பல முக்கிய நோக்கங்களுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
பூஜைகளுடன் ஆரம்பமான இன்றைய நிகழ்வில் கோலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த வளாகத்தில் தைப்பொங்கல் இடம்பெற்றது. தமிழ் கலாசார நடனங்கள் மற்றும் பாடல்கள் நிகழ்வை மேலும் மெருகூட்டியிருந்தன.
இந்த நிகழ்வில் மயூராபதி கோவிலின் பிரதான குருக்கள், கௌரவ பிரதிச் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி, கௌரவ குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, கௌரவ சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, சமய மற்றும் கலாசார அலுவல்கள் கௌரவ பிரதியமைச்சர் முனீர் முலாபர், கௌரவ எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக, கௌரவ அமைச்சர்கள், கௌரவ பிரதியமைச்சர்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றத்தின் பதவியணித் தலைமையதிகாரியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன, திணைக்களங்களின் தலைவர்கள், பாராளுமன்ற பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks