பாராளுமன்ற பணியாட் தொகுதியின் சிரேஷ்ட உறுப்பினரான படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்களின் சேவை பாராளுமன்றத்தில் பாராட்டு |
திகதி : | 2024-01-24 |
பாராளுமன்றத்தின் கடந்த 42 வருடங்களுக்கு மேலாகக் கடமையாற்றி எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள பாராளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்துவின் சேவையைப் பாராட்டி ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் இன்று (ஜன. 24) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டனர்.
பாராளுமன்றத்தின் படைக்கலச் சேவிதர் ஒருவர் ஓய்வுபெற்றுச் செல்லும்போது அவருடையை சேவையைப் பாராட்டும் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய இன்று (24) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டம் மீதான வாக்கெடுப்பைத் தொடர்ந்து பி.ப 6.30 முதல் பி.ப 7.30 மணிவரை படைக்கலசேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்களின் சேவையைப் பாராட்டுவதற்கான காலம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய, படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்களின் சேவையைப் பாராட்டும் பிரேரணையை சபை முதல்வர் அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த முன்வைத்தார். பாராளுமன்றத்திற்குள் வெள்ளம் புகுந்த சந்தர்ப்பத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தமையால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் சபையைக் கூட்டுவதற்கு வழங்கிய ஒத்துழைப்பை சபை முதல்வர் நினைவுகூர்ந்தார். தனது சேவைக் காலத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடன், சக அதிகாரிகளை வழிநடத்தி, அவர்களுக்கு உரிய முறையில் பொறுப்புகளை வழங்கி ஆற்றிய பணி சிறப்பானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்தின் பாதுகாப்புக்காக படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து ஆற்றிய பணி மிகவும் பாராட்டத்தக்கது. கொவிட் நிலைமை உட்பட பாராளுமன்றத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோது அவர் ஆற்றிய சேவை அளப்பரியது என சபாநாயகர் தெரிவித்தார்.
நரேந்திர பெர்னாந்துவின் சேவையைப் பாராட்டிய பிரதிச் சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ, மிகவும் ஆற்றலுடனும் சுறுசுறுப்பாகவும் பணியாற்றிய அவரது பணி என்றும் அழியாதது என்றும் கூறினார். செங்கோலைப் பாதுகாப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பும் இங்கு பாராட்டப்பட்டது. தொடர்ந்து சவால்களை எதிர்கொண்ட தனது கடைசிப் பாராளுமன்ற அமர்வு நாளான இன்றும் இருந்ததாகவும், அந்த அனைத்து சூழ்நிலைகளையும் அவர் வெற்றிகரமாக எதிர்கொண்டதாகவும் பிரதி சபாநாயகர் தனது உரையில் குறிப்பிட்டார்.
படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து அவர்கள் காண்பித்த அர்ப்பணிப்பு சிறந்த உதாரணம் எனப் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன தெரிவித்தார். காலி முகத்திடலுக்கு முன்னால் அமைந்திருந்த பாராளுமன்றத்தில் சேவையில் இணைந்துகொண்ட நரேந்திர பெர்னாந்து, தனது 42 வருட சேவையில் பல்வேறு சவால்களை வெற்றிகரமாக முறியடித்ததாக பிரதமர் சுட்டிக்காட்டினார். கொவிட் தொற்றுநோய் காலத்தில் பாராளுமன்ற விவகாரங்களின் பாதுகாப்பைப் பேணுவதற்கு அவர் செய்த தியாகம் மறக்க முடியாத சேவையாகும் என்று பிரதமர் கூறினார். பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாத நெருக்கடி சூழ்நிலையின்போது பாராளுமன்றத்திற்கு பாதுகாப்பு அளித்து அவர் ஆற்றிய பங்களிப்பையும் பிரதமர் பாராட்டினார்.
இங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், சகல துறைகளிலும் சிறந்து விளங்கும் நரேந்திர பெர்னாண்டோ தனது சேவையின் போது பல்வேறு சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு சிறந்த சேவையை ஆற்றியவர் என தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்துவின் சேவையைப் பாராட்டிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மிகவும் நேரடியான மற்றும் மென்மையான பண்புகளுடன் நடுநிலையுடன் செயற்பட்ட அவரின் சேவை பாராட்டப்பட வேண்டியது என அவர்கள் சுட்டிக்காட்டினர்.
படைக்கச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து பற்றிய சிறு அறிமுகம்
கொழும்பு வெள்ளவத்தையில் பிறந்த நரேந்திர மிஹிந்துகுமார பெர்னாந்து கொழும்பு இசிப்பத்தன கல்லூரியில் ஆரம்பக் கல்வியைப் பெற்று இந்தியாவில் மனித வள முகாமைத்துவத்தில் வர்த்தகப் பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்துள்ளார்.
பாராளுமன்றத்தின் உதவி ஹன்சார்ட் ஆசிரியராக இருந்த தனது தந்தையைத் தொடர்ந்து, பெர்னாந்து அவர்கள் 1981ஆம் ஆண்டில் பாராளுமன்றச் சேவையில் எழுதுவினைஞராக இணைந்து கொண்டதுடன், 20 வருடங்கள் பாராளுமன்றத்தின் நிர்வாகத் திணைக்களத்திற்குச் சொந்தமான பல அலுவலகங்களில் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டு இவர் உதவிப் படைக்கலச் சேவிதராகப் பதிவி உயர்வு பெற்று 2002 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் பிரதிப் படைக்கச் சேவிதராக நியமிக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டு செப்டெம்பர் 01ஆம் திகதி அவர் பாராளுமன்றத்தின் ஆறாவது படைக்கச் சேவிதராக நியமிக்கப்பட்டார்.
பெர்னாந்து பாராளுமன்றத்தின் படைக்கச் சேவிதராகத் தனது 5 வருடங்களுக்கும் மேலான சேவையின் போது பாராளுமன்றத்தையும் அதன் அமைப்பையும் பாதுகாப்பதில் பல சவால்களை எதிர்கொண்டார். அவற்றில், 52 நாள் ஆட்சி மாற்றத்தின் போது எதிர்கொள்ளப்பட்ட சவால்களை வெற்றிகரமாக முறியடித்தல், கொவிட் தொற்றுநோயின் போது இடையூறு இன்றி பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் தடுப்பூசிகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கௌரவ உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களை வழங்குதல், கடந்த போராட்டத்தின் போது பாராளுமன்ற வளாகத்தை பாதுகாத்தல், இதற்காக பாதுகாப்பு படையினருடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தல், வரலாற்றில் முதல் தடவையாக பாராளுமன்றத்திற்குள் இருந்து ஜனாதிபதியை தெரிவு செய்யும் நடவடிக்கையில் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவது. , வரலாற்றில் முதன்முறையாக மாண்புமிகு ஜனாதிபதியின் பதவிப் பிரமாண விழாவை பாராளுமன்ற வளாகத்தில் ஏற்பாடு செய்தமை, செங்கோலைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
1992-2010 ஆண்டுகளில் பாராளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட வெள்ளச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தமை, 1987 பாராளுமன்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் அப்போதிருந்த கௌரவ சபாநாயகரின் தனிப்பட்ட உதவியாளராகப் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் பாராளுமன்றக் கூட்டத்தை நடத்துவதற்கு அவசியமான நடவடிக்கை எடுத்தமை மற்றும் பொதுநலவாய நாடுகள் பாராளுமன்ற மாநாட்டை 1995 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளைக் கொழும்பில் நடத்துவதற்குத் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளில் இவர் பிரதான அதிகாரியாகச் செயற்பட்டமை விசேட அம்சமாகும்.
அதுமட்டுமின்றி, வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்றத்தில் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும், பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான பலவீனங்களை நீக்கி பலமான பாதுகாப்பு வேலைத்திட்டத்தை ஏற்படுத்தவும் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து நடவடிக்கை எடுத்தார்.
நரேந்திர பெர்னாந்து துஷாந்தி பெர்னாந்துவை மணம்முடித்திருப்பதுடன், இவர்களுடைய புதல்வர் அனுஜ பெர்னாந்து தற்பொழுது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






