இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கை - எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவு

திகதி : 2023-12-13

இலங்கை - எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ கீதா குமாரசிங்க அண்மையில் (டிச. 08) தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை - எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான செயற்குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் கூட்டம் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கான எகிப்து தூதுவர் மாகட் மொஸ்லே இந்நிகழ்வில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டிருந்ததுடன், பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ மதுர விதானகே, கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, மற்றும் கௌரவ அரவிந்த குமார் ஆகியோர் நட்புறவுச் சங்கத்தின் உப தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டனர். பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷ செயலாளராக தெரிவு செய்யப்பட்டதுடன், உதவிச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கருணாதாஸ கொடிதுவக்கு மற்றும் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மொஹமட் முஸம்மில் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இலங்கை - எகிப்து இராஜதந்திர உறவுகளுக்கு 66 வருடங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபித்தல் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக இதன்போது சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இந்த நட்புறவுச் சங்கத்தின் ஊடாக இலங்கை - எகிப்து தொடர்புகள் மேலும் விருத்தியடையும் என சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான எகிப்து தூதுவர் மாகட் மொஸ்லே குறிப்பிடுகையில், புதிய செயற்குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்குமிடையில் பல்வேறு துறைகளில் காணப்படும் நல்லுறவை விருத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

இதன்போது உரையாற்றிய இலங்கை - எகிப்து பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ கீதா குமாரசிங்க குறிப்பிடுகையில், நட்புறவுச் சங்கத்தின் தலைவராக தன்னைத் தெரிவு செய்தமை தொடர்பில் நன்றியைத் தெரிவித்தார். செழுமையான வரலாறு, கலை மற்றும் தொழில்துறை கொண்ட நாடான எகிப்துடன் உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்காக எகிப்து தூதுவரின் அர்ப்பணிப்பை மிகவும் பாராட்டுவதாக புதிய தலைவர் குறிப்பிட்டார்.

 

1 2

3

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom