இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பெறுமதிமிக்க கட்டடக்கலையைப் பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

திகதி : 2023-11-29

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பெறுமதிமிக்க கட்டடக்கலையைப் பாதுகாக்கும் திட்டம் தொடர்பான ஆரம்ப கட்டக் கலந்துரையாடல் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (நவ. 27) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இலங்கை பாராளுமன்றத்தின் முன்மொழிவுக்கு அமைய இடம்பெறவுள்ள இந்தத் திட்டம் தொடர்பான ஆரம்ப கட்டக் கலந்துரையாடலில் பல நிறுவங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பெறுமதிமிக்க கட்டட வடிவமைப்பில் காணப்படும் கலாசார அடையாளங்கள், இயற்கை நிலக்காட்சி மற்றும் சூழல், வரலாற்று ரீதியாகப் பொருந்தும் சூழல், தேசிய அடையாளம் ஆகியவற்றின் காரணமாக, எதிர்கால சந்ததியினருக்காக அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என்பன இங்கு வலியுறுத்தப்பட்டது.

இவற்றை எதிர்கால சந்ததியினருக்கு கலாசார அடையாளமாகப் பாதுகாப்பது, படைப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதுடன், அவர்களின் பதிப்புரிமையை பாதுகாப்பது மற்றும் கட்டடக்கலை, கலைமதிப்பக்கள் அழியாமல் பாதுகாப்பது இதன் நோக்கமாகும்.

இந்தக் கலந்துரையாடலில் பௌத்த மத மற்றும் கலாசார விவகார அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஆவணக்காப்பகத் திணைக்களம், தேசிய அருங்காட்சியகத் திணைக்களம், மத்திய கலாசார நிதியம், தொல்பொருள் திணைக்களம், தேசிய கலைச் சபை, அரசாங்கத் தகவல் திணைக்களம், ஈனா டி சில்வா நம்பிக்கை நிதியம், ஜெஃப்ரி பாவா அறக்கட்டளை நிதியம், தேசிய அருங்கலைகள் பேரவை, நுண்கலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பிரதநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதற்கமைய பாராளுமன்றக் கட்டடம், செங்கோல், வெள்ளிக்கதவு, பித்தளைக் கதவு, சிங்க உருவத்துடன் கூடிய கதவு, சபா மண்டபத்தின் தடை எல்லை, 18 பித்தளைக் கொடிகள், ஒன்றுகூடல் மண்டபத்தின் கூரைத்தகடு, பித்தளைக் கதவுக்கு முன்னால் உள்ள கூரைத் தகடு, நிகழ்வுகளின் போதான 18 இலட்சனைகள், கோட்டுக் கலை, உறுப்பினர்களின் நுழைவாயிலில் உள்ள  மரச்சுவரோவியம், பணியாளர்கள் நுழைவாயிலில் உள்ள சுவரோவியம், பிரமுகர்களின் முகப்புக்கூடம், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் உணவுக்கூடத்தில் உள்ள ஓவியங்கள், இரண்டாவது மாடியிலுள்ள புகைப்படத்தொகுப்பு, கீழ் மாடியிலுள்ள புகைப்படத்தொகுப்பு மற்றும் வேறு பெறுமதி மிக்க புகைப்படம்/ஓவியங்களின் காட்சிக்கூடத்தில் உள்ள தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள கட்டக்கலையைப் பாதுகாக்கக் குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை உள்ளடக்கிய பிரேரணையை தயாரிக்கவும், அந்தக் கட்டடக்கலை குறித்து முறையான ஆய்வு நடத்தி தனித்தனியாக பல குழுக்களை அமைக்கவும் சபாநாயகர் முன்மொழிந்தார். அதற்கு இங்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதன்படி, முழுமையான பிரேரணை மற்றும் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் டிசம்பர் 12ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கௌரவ பந்துல குணவர்தன, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணவீர, பணியாட்தொகுதியின் பிரதானியும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

 

4 5

7 8

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom