உண்ணாட்டரசிறை (திருத்த) மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்த) சட்டமூலங்களின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நாளை (06) மற்றும் நாளைமறுதினம் (7) – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

திகதி : 2023-09-05

Print
  • சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதம் அன்றைய தினங்களில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30  மணிவரை

உண்ணாட்டரசிறை (திருத்த) மற்றும் சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்த) சட்டமூலங்களின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை நாளை (06) மற்றும் நாளைமறுநாள் (07) ஆகிய தினங்களில் நடத்துவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (செப். 05) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை (06) பி.ப 4.30 மணி முதல் பி.ப 7.30 வரையும், நாளை மறுதினம் (07) பி.ப 4.30 மணி முதல் பி.ப 7.00 மணிவரையும் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் நடத்தப்படும். இந்த இரு சட்டமூலங்கள் குறித்த இரண்டாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை வியாழக்கிழமை பி.ப 7.00 மணிக்கு நடத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு சட்டமூலங்களும் குழுநிலையில் ஆராய்ந்து மூன்றாவது மதிப்பீட்டை பி.ப 7.30 மணிவரை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், இந்த இரு தினங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டிருந்த வாய்மூல விடைக்கான கேள்விகளை பிறிதொரு தினத்துக்கு ஆற்றுப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன், சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இந்த இரு தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணிரையும் நடத்துவதற்கும் இணங்கப்பட்டது. அதேநேரம், முன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு பி.ப 5.30 மணிக்கு அது குறித்த வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

 

3 1