இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நாட்டின் எதிர்காலத்திற்காக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பொது இணக்கப்பாட்டுடன் முன்னெடுப்போம் – ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

திகதி : 2023-08-09

  • பாராளுமன்றம் உடன்படுமானால் மாகாண சபைத் தேர்தல் சட்ட மூலத்தைத் திருத்தத் தயார்
  • மாகாண சபைகள் செயற்படும் வரை மாகாண ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான ஆலோசனைக் குழு
  • வெற்றிகரமான மாகாண சபை கட்டமைப்பினுள் பலமான முறைமை மாற்றத்திற்கான வாய்ப்பு உள்ளது
  • காணாமல் போனோர் தொடர்பான அலுவலக பணிகள் ஆரம்பம்


மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து புதிய சட்டங்களை நிறைவேற்றிய பின்னர், பாராளுமன்றம் உடன்படுமானால் மாகாண சபை தேர்தல் சட்டம் திருத்தத்திற்கு தயாராக உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், மாவட்ட விகிதாசார முறையின் கீழ் தேர்தலை நடத்தவும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மாகாண சபைகளுக்கு போட்டியிடும் உரிமையை வழங்கவும், 25% அல்லது கூடுதலான பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவும் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது முன்மொழிவுகளையும் எதிர்கால திட்டங்களையும் இன்று (ஆக. 09) பாராளுமன்றத்தில் முன்வைத்து விசேட உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மத்திய அரசாங்கத்தின் அதிகாரப் பட்டியல், மாகாண சபை அதிகாரப் பட்டியல்,ஒருங்கிணைந்த பட்டியல் ஆகியவற்றை மீள் ஆய்வு செய்து தேவையான திருத்தங்களைச் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் ஆதரவும் பெறப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்தோடு மாகாண சபைகள் செயற்படும் வரை மாகாண ஆளுநர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆலோசனை சபையொன்றை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் அரசியல் முறையில் இருந்தோ அல்லது அரசியலில் இருந்தோ அகற்ற முடியாத நிரந்தரமான காரணியாக மாகாணசபை மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொதுமக்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கக் கூடிய வினைத்திறனான மற்றும் வீண்விரயமற்ற, ஊழலற்ற மாகாண சபை கட்டமைப்பொன்றை கட்டியெழுப்புவதன் ஊடாக வலுவான முறைமை மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு ஏற்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவதில் பொலிஸ் அதிகாரம் போன்ற உணர்வுபூர்வமான விடயங்களுக்கு முன்னுரிமை அளிப்பது எந்த விதமான இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு கடினமானதாக அமையலாம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முதலில் ஏனைய அதிகாரங்கள் தொடர்பில் உடன்பாட்டுக்கு வந்து நாட்டின் எதிர்காலத்திற்காக 13 ஆவது திருத்தத்தை கட்டம் கட்டமாக எதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

காணாமல் போனவர்களைக் கண்டறியும் நடவடிக்கையை ,காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஆரம்பித்துள்ளதாகவும், மூன்று மாதங்களுக்குள் பணிகளை நிறைவு செய்யும் நோக்கில் தரவு உள்ளீட்டை துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காணமல் போனவர்களுக்காக சான்றிதழ் வழங்குவதை துரிதப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

முழுமையான உரை

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom