சிறந்த வினைத்திறனை வெளிப்படுத்திய 65 அரசாங்க நிறுவனங்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்றத்தில் |
திகதி : | 2023-07-17 |
|
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கைக்கு அமைய 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் உயர்ந்த வினைத்திறன் மட்டத்தை அடைத்த 65 நிறுவனங்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி விருதுகள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க தலைமையில், பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன மற்றும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரின் பங்கேற்புடன் நாளை (ஜூலை 18) பாராளுமன்றத்தில் நடைபெறும்.
அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் பொதுக் கணக்குகளைப் பராமரிக்கும் முறைமை, நிதிக் கட்டுப்பாடு மற்றும் செயல்திறன் என்பன பாராளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் செயல்படுத்தப்படும் கணினிமயப்படுத்தப்பட்ட முறையில் வருடாந்தம் மதிப்பீடு செய்யப்படுவதுடன், அதற்கமைய, கணக்காய்வாளர் நாயகத்தினால் பகுப்பாய்வு மற்றும் விசாரணை செய்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுக்கு அமைய சிறந்த வினைத்திறனை வெளிப்படுத்திய அரச நிறுவனங்களுக்கு இவ்வாறு விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதற்கமைய, 833 அரச நிறுவனங்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 2019 ஆம் ஆண்டில் அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நிறுவனங்களுக்கு தங்க விருதுகளும் 30 நிறுவனங்களுக்கு வெள்ளி விருதுகளும், 2020 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நிறுவங்களுக்கு தங்க விருதுகளும் 30 நிறுவனங்களுக்கு வெள்ளி விருதுகளும் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
அரசாங்க அமைச்சுக்கள், அரசாங்கத் திணைக்களங்கள், அரசாங்கத்தின் விசேட செலவின அலகுகள், மாவட்ட செயலகங்கள், மாகாண சபை நிதியங்கள், மாகாணசபைகளின் அமைச்சு திணைக்களம்சார் விசேட செலவின அலகுகள், மாகாண சபைகளின் நியதிச்சட்டநிறுவனங்கள், மாநகரசபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகள் போன்ற பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
எட்டாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் எண்ணக்கருவுக்கு அமைய அரச நிறுவனங்களின் நிதி மற்றும் செயல்திறனை முறைமைப்படுத்தும் நோக்கில் அரச, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களை மதிப்பீடு செய்யும் கணினிமயப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் 2015 நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த விருது வழங்கும் நிகழ்வில் அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண சபைகளின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட சுமார் 1000 அரச நிறுவனங்கள் Zoom தொழிநுட்பத்தினூடாக இணைந்துகொள்ளவுள்ளன.