பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இலங்கை பாராளுமன்றத்தின் பங்குபற்றலுடன் |
திகதி : | 2023-07-12 |
|
பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலய மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பொது வெளிக்கள சேவைகள் பிரிவின் ஏற்பாட்டில் கடந்த ஜூன் 28 ஆம் திகதி வித்தியாலய கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக இடம்பெற்றது.
ஜனநாயக சமூக முறை, பாராளுமன்ற முறைமை மற்றும் மரபுகள் தொடர்பில் இந்நாட்டின் இளம் மாணவ சமூகத்தினருக்கு விழிப்புணர்வூட்டி அந்த அனுபவங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு பாராளுமன்ற மரபுகளுக்கமைய முதலாவது அமர்வில் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். உறுப்பினர்கள் மற்றும் அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதை அடுத்து, ஒவ்வோர் துறை தொடர்பிலும் விடயங்கள் முன்வைக்கப்பட்டு பாராளுமன்ற விவாதமும் இடம்பெற்றது.
அதனையடுத்து, பாராளுமன்ற சட்டவாக்க செயன்முறை தொடர்பில், இலங்கை பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எச். ஈ. ஜனகாந்த சில்வாவினால் உரை நிகழ்த்தப்பட்டதுடன், மாணவர்களின் திறமைகளும் பாராட்டப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பொது வெளிக்கள சேவைகள் அதிகாரிகளான ரஷ்மியா நூடான், ருத்ர குமார், பொது வெளிக்கள சேவைகள் ஒருங்கிணைப்பாளர் ஜெய பிரகாஷ் மற்றும் பாராளுமன்ற பயிற்சி அதிகாரிகளும் கலந்துகொண்டனர். அத்துடன், ஸ்ரீ ஜயவர்தனபுர வலயத்தின் சமூக விஞ்ஞான உதவிப் பணிப்பாளர் வாசனா ஹெட்டியாராச்சி, பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலய அதிபர் திருமதி எம். ரூபசிங்க, பிரதி அதிபர் திருமதி குகுலவிதான உள்ளிட்ட ஆசிரியர்கள் சிலரும் பெற்றோரும் இதன்போது கலந்துகொண்டனர்.
நிகழ்வின் இறுதியில் பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலய மாணவர்களின் பயன்பாட்டுக்காக பாடசாலை நூலகத்துக்குப் பாராளுமன்ற முறைமை தொடர்பான தகவல்கள் அடங்கிய பெறுமதிமிக்க புத்தகங்களும் கையளிக்கப்பட்டன.