இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபாநாயகரின் அறிவிப்புக்கள்

திகதி : 2023-06-06

அரசியலமைப்பின் 121 (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட “ஊழல் எதிர்ப்பு” எனும் சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தனக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (ஜூன் 06) சபையில் அறிவித்தார்.

 “ஊழல் எதிர்ப்பு” எனும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பது தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கீழ்வருமாறு,

சட்டமூலத்தின் 1, 2(1)(f), 2(2), 3(2), 4(1)(a), 4(1)(b), 4(3), 17(1), 21, 31(2), 163(2)(h), 40, 48(3), 49(1)(f), 50(1)(a), 53(1), 62(1), 65, 67(5), 71(6) மற்றும் (8), 80, 93, 99, 101, 112, 149 மற்றும் 162 ஆகிய வாசகங்கள் அரசியலமைப்புக்கு ஒத்திசைவாகாது.

எவ்வாறாயினும், உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள திருத்தங்கள் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்படுமாயின் இந்த ஒத்திசைவாகாத தன்மை இல்லாமல்போய்விடும்.

இந்தத் திருத்தங்களுக்கு மேலதிகமாக, உயர்நீதிமன்றத்தினால் குறிபிடப்பட்டிருப்பதாவது, சட்டமூலத்தின் 8(3), 136, 141, 142 மற்றும் 156 வாசகங்கள் தொடர்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலினால் குறிப்பிடப்பட்ட திருத்தங்கள் மூலம் மனுதாரர்களினால் முன்னிலைப்படுத்தப்பட்ட விடயங்களுக்குத் தீர்வுகாண முடியும் என்றும் சபாநாயகர் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “மாகணசபை தேர்தல்கள் (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு  ஆற்றுப்படுத்தப்பட்ட மனு மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்திருப்பதாகவும் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

சட்டமூலத்தின் 3 ஆம் வாசகத்தினை திருத்துவதற்கும் மற்றும் 4ஆம் வாசத்தின் நீக்குவதற்குமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டு சட்டமூலமோ அல்லது அதன் எந்த ஏற்பாடுகளுமோ அரசியலமைப்பக்கு ஒவ்வாதனவாகவிராது என உயர் நீதிமன்றம் தீர்மானித்திருப்பதாகவும் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் ஆகிய கப்பல்களின் விபத்துகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான விதப்புரைகளைச் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவில்” பணியாற்றுவதற்காக கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண அவர்களின் தலைமையிலான குழுவுக்கான உறுப்பினர்களையும் சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

இதற்கு அமைய இந்த விசேட குழுவின் உறுப்பினர்களாக கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ (திருமதி) டயனா கமகே, கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், கௌரவ விஜித ஹேரத், கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர,     கௌரவ நிரோஷன் பெரேரா, கௌரவ அஜித் மான்னப்பெரும, கௌரவ நிமல் லான்சா, கௌரவ துஷார இந்துனில் அமரசேன, கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, கௌரவ அகில எல்லாவல, கௌரவ நாலக பண்டார கோட்டேகொட, கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 111 இன் ஏற்பாடுகள் மற்றும்  2022 நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணை  என்பனவற்றிற்கு அமைவாக நியமிக்கப்பட்ட அந்தந்த துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் பணியாற்றுவதற்காக பின்வரும் பாராளுமன்ற  உறுப்பினர்களும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து   நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதற்கமைய மத விவகாரங்கள் மற்றும் சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன அவர்களும், நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற கௌரவ மர்ஜான் பளீல் அவர்களும், தேசிய பாதுகாப்பு  பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து அவர்களும், சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற  கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே அவர்களும், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பணியாற்ற கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர அவர்களும், வலுச்சக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற கௌரவ ஏ. எல். எம். அதாஉல்லா அவர்களும், உணவுப் பாதுகாப்பு மற்றும் கமத்தொழில் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற கௌரவ சீ.பீ. ரத்நாயக்க அவர்களும், சுற்றாடல், இயற்கை வளங்கள் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற கௌரவ ஜயந்த கெட்டகொட அவர்களும், வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற  கௌரவ காமினி லொக்குகே அவர்களும், சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற கௌரவ (திருமதி) முதிதா பிரிஸான்தி அவர்களும், சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற     கௌரவ சட்டத்தரணி எஸ். எம். எம். முஸ்ஸாரப் அவர்களும், ஊடகம், இளைஞர், மரபுரிமை மற்றும் புதிய பிரஜைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற  கௌரவ திஸகுட்டி ஆரச்சி அவர்களும், வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் பணியாற்ற கௌரவ சனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க அவர்களும் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை  115 இன் ஏற்பாடுகள் மற்றும் 2023 பெப்ரவரி 10 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக கௌரவ ஏ. எல். எம். அதாஉல்லா அவர்களும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், வங்கித்தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக கௌரவ மிலான் ஜயதிலக்க அவர்களும் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom