இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கௌரவ சபாநாயகரின் நோன்புப் பெருநாள் செய்தி

திகதி : 2023-04-22

spkr-mahinda-yapaஒரு மாத காலமாக நோன்பு நோற்று இன்று (ஏப். 22) ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இந்நாட்டிலும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் அனைவரும் அறிந்துள்ளதைப் போன்று ரமலான் மாதத்தை இலங்கையர்கள் நோன்பு மாதம் என்றே அழைக்கின்றனர். ரமலான் தலைப்பிறையுடன் ஆரம்பமாகும் நோன்பு மாதம் ஷவ்வால் மாதப் பிறப்புடன் நிறைவடைகின்றது. இம்மாதம் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கடமையாக்கிய நான்காவது கடமையை நிறைவேற்றுதல் மற்றும் தான, தர்மங்களில் ஈடுபடுவதால் சிறப்புவாய்ந்ததாகக் காணப்படுகின்றது. அதனால் தான் ரமலான் மாதம் வெறுமனே நோன்பு நோற்று பட்டினியில் இருப்பதற்கு மாத்திரம் ஒதுக்கப்பட்ட மாதமல்ல.

இம்மாதத்தில் தமது அன்றாடப் பணிகளை வழமை போன்று நிறைவேற்றுவதுடன், சமய அனுஷ்டானங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. மானுடர்களாக எம்மிடம் காணப்படும் உயர்ந்த நற்குணங்களான மன்னித்தல், பொறுமையைக் கையாளுதல் போன்ற நற்கருமங்களும் இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. பொய் சொல்வதையும், அவ்வாறு நடந்து கொள்வதை கைவிடாமலும் ஒருவர் உண்ணாமல் - குடிக்காமல் நோன்பு நோற்பது பயனற்றது, அது அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அப்படிப்பட்ட நோன்பிலிருந்து அல்லாஹ் விலகி விடுவான் என்பது முஹம்மத் நபியவர்களின் போதனையாகும்.

இந்நாட்டில் ரமலான் நோன்பு மாதம் என்பது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சந்தோசத்தை ஏற்படுத்தும் மாதமாக இல்லாமல், அவர்கள் அனைத்து இனத்தவருடனும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் மாதமாக கருதுவது சரியானது என நான் உணர்கிறேன். விசேடமாக இலங்கையர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் உணவுகளை பகிர்த்துக்கொள்ளும் அற்புதமான கலாச்சாரத்தை கொண்டுள்ளோம். ரமலான் நோன்பு காலத்தில் நோன்பைத் துறப்பதற்கு முஸ்லிம்கள் தயாரிக்கும் கஞ்சி நம் அனைவர் மத்தியிலும் பிரபலமானது. அதேபோன்று ரமலான் நோன்பு காலத்தை நிறைவுசெய்யும் போது இந்நாட்டு முஸ்லிம் மக்கள் தயாரிக்கும் விசேடமாக வட்டிலப்பம், பிரியாணி, முஸ்லிம் சம்பிரதாயத்துக்கமைய தயாரிக்கும் இனிப்புப் பண்டங்கள் ஏனைய அயலவர்களுடனும் பகிர்ந்துகொள்வது வழமையாகும்.         

மிகவும் கடினமான அனுஷ்டானத்தை பேணும் முஸ்லிம்களின் சமய பக்தியும் பொறுமையும் ஏனைய மதங்களைச் சார்ந்தவர்களாலும் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளிலும் அவர்களின் வாழ்க்கையிலும் பின்பற்ற முடியும் என்பதை இவை அனைத்திலிருந்தும் காணக்கூடியதாக உள்ளது. தனி மனித விருத்தி மட்டுமல்லாது கூட்டுச் சமூக விழுமியங்களையும் உயர்த்தும் இவ்வாறான நிகழ்வுகள் இலங்கையில் இணக்கமான சமயச் சூழலை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமையும் என்பது எமது உண்மையான நம்பிக்கையாகும்.

 

இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இனிய ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்கள்!

 

இங்ஙனம்,
மஹிந்த யாப்பா அபேவர்தன
சபாநாயகர்,
இலங்கைப் பாராளுமன்றம்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom