இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதியினால் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

திகதி : 2022-08-02

  • ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் நாளை (3) மு.ப 10.30 மணிக்கு முன்வைக்கப்படும்
  • மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல், வாகனத் தொடரணி இடம்பெறாது
  • முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு இடம்பெறும்

 

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படும் நிகழ்வுக்கான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் இன்று (02) நடைபெற்றது. முப்படையினர் மற்றும் பொலிஸார், கொழும்பு தேவிபாலிகா வித்தியாலய மாணவியர் உள்ளிட்ட பலர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர்.

அத்துடன், அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாளை (03) மு.ப 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார். இதற்கு முன்னர் பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் கௌரவ ஜனாதிபதி தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படும்.

ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது என பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.

எனினும், ஜனாதிபதியை வரவேற்பதற்காக பாராளுமன்ற முன்றலில் முப்படையினரும் ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதையளிக்கவுள்ளனர். இதன்போது ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது என்பதுடன், தேசியக் கொடி மாத்திரம் ஏற்றிவைக்கப்படும்.

நாளை (03) மு.ப 09.30 மணிக்கு விசேட விருந்தினர்களின் வருகை இடம்பெறவிருப்பதுடன், இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலில் வருகை தருவர்.

இதனைத் தொடர்ந்து சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் வருகையும், அதன் பின்னர் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் வருகையும், அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் வருகையும் இடம்பெறும்.

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்பார்கள்.

இங்கு முப்படையினர் ஜனாதிபதிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல கௌரவ சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் ஜனாதிபதி பாராளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.

பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கொழும்பு தேவிபாலிகா வித்தியாலய மாணவியர் ஜயமங்கல கீதம் இசைக்கவுள்ளனர்.

இதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ஜனாதிபதி அவர்கள் மு.ப 10.25 மணிவரை அங்கிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து பாராம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர், ஜனாதிபதி, சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் உதவிப் படைக்கல சேவிதர் என்ற வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் செல்வர். சபைக்குள் நுழையும்போது உதவி படைக்கல சேவிதர் ‘கௌரவ ஜனாதிபதி’ எனத் தெரிவித்ததும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நிற்பது பாரம்பரியமாக இடம்பெறும்.

சபா மண்டபத்துக்கு அழைத்துவரப்படும் ஜனாதிபதி அங்கிராசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமை தாங்குவார். இம்முறை ஜனாதிபதியின் ஆசனத்தில் ஜனாதிபதியுடைய இலட்சினைக்குப் பதிலாக அரசாங்கத்தின் இலட்சினை பொருத்தப்பட்டிருப்பது விசேட அம்சமாகும். இதன்போது சபாநாயகர், பாராளுமன்ற குழுநிலையின்போது அமரும் கீழ் பகுதியிலுள்ள ஆசனத்தில் செயலாளர் குழுவுடன் அமர்ந்திருப்பார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரடகன உரை நிகழ்த்தப்பட்டு, சபை ஒத்திவைக்கப்படும். சபை ஒத்திவைக்கப்பட்டதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முதற்பெண்மணி ஆகியோர் பாராளுமன்றத்தை விட்டு வெளியேறும்போதும் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

1 2

3 4

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom