இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஊடக அறிக்கை: இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக

திகதி : 2022-07-11

கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று பி.ப. 2.00 மணிக்கு எனது தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. தற்போதைய ஜனாதிபதி ஜூலை 13 ஆம் திகதி பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக எனக்கு அறிவித்துள்ளதால், மிக விரைவாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அடிப்படையாக சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் கலந்துரையாடுவது இந்தக் கூட்டத்தின் பிரதான குறிக்கோளாக இருந்தது.

அரசியலமைப்பின் 40 வது பிரிவுக்கமைய மற்றும் 1981 ஆம் ஆண்டு 2 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் (சிறப்பேற்படுகள்) சட்டத்தின் பிரகாரம் மிகக் குறுகிய காலத்தில் இந்த செயற்பாடு இடம்பெறவேண்டும் என இதன்போது கட்சித்தலைவர்கள் வலியுறுத்தினர்.

அதற்கமைய, ஜூலை 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டி, குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் உள்ளதாக அறிவித்ததன் பின்னர், 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேட்புமனுக் கோரல் இடம்பெற்று, 20 ஆம் திகதி புதன்கிழமை தற்போதைய சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்ட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

அந்தப் புதிய ஜனாதிபதியின் கீழ் சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைத்தல் மற்றும் எதிர்கால அரசியலமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தற்பொழுது நாட்டிலுள்ள அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

நாளைய தினமே சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமானால் கௌரவ பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை விலகுவதற்குத் தயார் என ஆளும் கட்சி முதற்கோலாசான் கௌரவ பிரசன்ன ரணதுங்க அறிவித்தார்.

இந்தச் செயற்பாடுகளை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்துக் கட்சித் தலைவர்களினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாக நான் அறிவித்தேன்.


மஹிந்த யாப்பா அபேவர்தன
சபாநாயகர்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom