இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

புத்தாண்டில் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 11ஆம் திகதி – பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

திகதி : 2021-12-10

  • ஜனவரி 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடும்
  • ஜனவரி 13ஆம் திகதி முழு நாளும் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தொடர்பான அனுதாபப் பிரரேரணைக்கு ஒதுக்கம்

 

2022ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (09) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய டிசம்பர் 10ஆம் திகதி வரவுசெலவுத்திட்ட விவாதம் முடிவடைந்த பின்னர் எதிர்வரும் ஜனவரி 11, 12 மற்றும் 13ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 11ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அன்றையதினம் அரசாங்கத்தின் தினப்பணிகளின் பின்னர் ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்) சட்டமூலம் இரண்டாவது வாசிப்பைத் தொடர்ந்து சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.

ஜனவரி 12ஆம் திகதி முற்பகல் 10 மணிக்குக் கூடவிருப்பதுடன், முற்பகல் 10.00 – 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மு.ப 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் போன்றவை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

ஜனவரி 11 மற்றும் 12ஆம் ஆகிய தினங்களில் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், பி.ப 4.50 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான காலப் பகுதியில் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான  பிரேரணை மீதான விவாதமும் இடம்பெறும்.

அத்துடன், ஜனவரி 13ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தொடர்பான அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தை நடத்த இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom