இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் தொடர்ந்தும் முதலீடு செய்து வருகின்றது - கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

திகதி : 2021-11-16

சவால்களுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் முதலீடு செய்து வருவதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (16) நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் குறிப்பிட்டதாவது;
 
எமக்கு கடந்த காலத்தில் அரச நிதி தொடர்பில் கடுமையான சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. எனினும், எதிர்வரும் ஆண்டுகளில் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கு, அபிவிருத்தி செய்வதற்கும் தேவையான வசதிகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
 
எமது பொருளாதாரத்தின் வெளிநாட்டுப் பிரிவு கொவிட் - 19 தொற்றுநோய் தாக்கம் காரணமாக சவாலுக்கு முகங்கொடுத்துள்ள போதும், அந்நியச் செலாவணி, திரவத்தன்மையை அதிகரித்தல் மற்றும் ரூபாய் மீதான அழுத்தத்தை இலகுபடுத்துவதற்கு எதிர்வரும் காலங்களில் அந்நியச் செலாவணி வருவதை பேணுவதற்கு அரசாங்கம் மற்றும் மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துவருவதாக பிரதமர் தெரிவித்தார். அதேபோன்று, உலகளாவிய சுற்றுலாத்துறை மீள் வருகையுடன், இலங்கையின் சுற்றுலாத்துறையும் குறிப்பிடத்தக்க அளவு சாதகமான வளர்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பை ஊக்குவித்தல் மற்றும் வெளிநாட்டு பணியாளர்களை பணிக்கமர்த்தல், மக்களை வங்கி முறைக்கு ஈர்க்கும் வகையில் அரசாங்கம் மத்திய வங்கியுடன் இணைந்து செயற்படுகின்றது எனத் தெரிவித்த பிரதமர்
 
வெளிநாட்டுத் துறையின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கான குறுகிய கால மூலோபாய திட்டங்கள் உட்பட பொருளாதாரத்தில் அனைத்து பங்குதாரர்களின் நம்பிக்கையை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட "பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிகாட்டலை" மத்திய வங்கியின் அண்மையில் அறிவித்தமை தொடர்பிலும் அரசு மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டார்.
 
பொருளாதாரம் ஒரு சவாலான காலகட்டத்தை கடந்து செல்வதை நாம் அறிவோம். இந்த வரவுசெலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட முற்போக்கான முன்மொழிவுகள் எதிர்காலத்திலும் அதற்குப் பின்னரும் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் செயற்படுத்தப்படுவரும் 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கையில் எமது எதிர்காலத் திட்டங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட அரச நிதியிலும்,  'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைகளை அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், "இதுவரை சுமார் 60,000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளோம். வறுமையைக் குறைக்கும் நோக்கத்துடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் பயிற்சி பெறாத நபர்களுக்கு அரச துறையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அரச துறையில் புதிதாகச் சேர்பவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அரசாங்கம் மாதாந்தம் சுமார் 3.5 பில்லியன் ரூபாவைச் செலவிடுகிறது. அனைவருக்கும் பயனளிக்கும், மக்களை மையமாகக் கொண்ட சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு இந்த வரவுசெலவுத்திட்டம் ஆதரவை அளித்துள்ளது. நாடு எதிர்நோக்கும் சவால்களை முறியடித்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிக்க நாம் செயல்படுத்திவரும் நிலையான தீர்த் திட்டத்துடன் கைகோர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்", எனக் குறிப்பிட்டார்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom