இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றம் எதிர்வரும் 21ஆம் 22ஆம் திகதிகளில் கூடும்

திகதி : 2021-10-12

  • கோப் குழு அறிக்கைகள் தொடர்பில் 22ஆம் திகதி சபை ஒத்திவைப்பு விவாதம்
  • உரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் ஒக்டோபர் 21ஆம் திகதி

 

பாராளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் கூடவுள்ளது.

கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 07ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய பாராளுமன்றம் இத்தினங்களில் 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

ஒக்டோபர் 21ஆம் திகதி முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் கீழ் ஒழுங்குவிதிகள், இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் என்பன விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்படவுள்ளன.

அத்துடன் பிற்பகல் 3.00 மணி முதல் பிற்பகல் 6.00 மணி வரை எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் பிரேரணைக்கு அமைய உர பயன்பாடு தொடர்பில் தற்போதைய பிரச்சினைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

ஒக்டோபர் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் நண்பகல் 12.00 செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதன் பின்னர் நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய 2021.03.10ஆம் திகதி மற்றும் 2021.04.06 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.

அத்துடன், நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவினால் நிலையியற் கட்டளை தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்கள் அறிந்துகொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் இது பற்றிக் கலந்துரையாடவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக முற்பகல் 11 மணிவரை ஒதுக்குவது மற்றும் 27(2) நிலையியற் கட்டளைக்கான கேள்விக்காக ஒதுக்கப்படும் காலத்தை மு.ப 11.15 மணியுடன் முடிவுக்குக் கொண்டுவருவதன் அவசியம் குறித்தும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற பொதுமக்கள் கலரியைத் திறப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்பொழுது நிலவும் கொவிட்-19 சூழல் மேலும் குறைவடைந்ததும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பொதுமக்கள் கலரியை திறப்பது குறித்து ஆராயமுடியும் என்றும் தீர்மானிக்கப்படது.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom