2022 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் |
திகதி : | 2021-09-30 |
- பாராளுமன்றம் அடுத்த வாரம் 05 நாட்கள் கூடும்…
- எதிர்வரும் திங்கட்கிழமை முழு நாளும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்படும்…
2022ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இன்று (30) முற்பகல் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தெரிவித்ததாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக தெரிவித்தார்.
அத்துடன், பாராளுமன்றத்தை எதிர்வரும் ஒக்டோபர் 04ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் கூட்டுவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இதற்கமைய, ஒக்டோபர் 04ஆம் திகதி திங்கட்கிழமை முழு நாளும் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கான விசேட பாராளுமன்ற அமர்வு தினமாக ஒதுக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இதுவரை பாராளுமன்றத்தில் கேட்கப்படாத வாய்மூல விடைக்களுக்கான 40 கேள்விகளுக்காக முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 4.30 வரையான நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
ஒக்டோபர் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் முற்பகல் 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பெறுமதிசேர் வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், நிதிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளன.
ஒக்டோபர் 06ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை பெற்றோலிய வளங்கள் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது.
ஒக்டோபர் 07ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை தேருநர்களைப் பதிவுசெய்தல் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), ஊழியர் சகாய நிதிய (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) மற்றும் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.
ஒக்டோபர் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 4.30 மணிவரை 2021ஆம் ஆண்டு நடுப்பகுதியின் நிதி நிலைமைகள் தொடர்பான அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறும்.
அத்துடன், செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தினமும் பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய தினங்களில் பிற்பகல் 4.50 மணி முதல் 5.30 மணி வரையான நேரம் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதத்துக்கும், புதன்கிழமை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






