இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மத்திய வங்கி திறைசேரிமுறி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கையை சபையில் சமர்ப்பிக்க சபாநாயகர் தீர்மானம்

திகதி : 2020-01-22

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் திறைசேரிமுறி தொடர்பில் விசாரித்து அறிக்கையிடுவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வின் அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் அறிந்து கொள்ளும் நோக்கில் சபையில் சமர்ப்பிக்க கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்திருப்பதாக இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இந்த அறிக்கையை சபையில் சமர்ப்பிப்பதன் ஊடாக திறைசேரிமுறி விநியோகம் தொடர்பில் தற்பொழுது இடம்பெற்றுவரும் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது என தான் நம்புவதாகவும் சபாநாயகர் சபையில் தெரிவித்தார்.

 

தடயவியல் கணக்காய்வு அறிக்கை சில நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்துக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்ததுடன், சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கு அமைய குறித்த அறிக்கையை பகிரங்கப்படுத்தாதிருக்க சபாநாயகர் முன்னர் தீர்மானித்திருந்தார்.

 

இந்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்திருப்பதுடன், எதிர்வரும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடி விவாதத்துக்கான திகதியைப் பெற்றுத் தருவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

 

சபாநாயகரின் உரையின் முழு விபரம் வருமாறு:

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் வழங்கப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியினால் 2015ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திறைசேறிமுறி விநியோகங்கள் பற்றி விசாரித்து அறிக்கையிடுவதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தடயவியல் கணக்காய்வின் அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் அறிந்துகொள்ளும் வகையில் சபையில் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரினால் 2020 ஜனவரி 03ஆம் திகதி சபையிலும், வெளியிலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, 2020 ஜனவரி 13ஆம் திகதி பாராளுமன்ற கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் நடத்திய கூட்டத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையையும் கருத்தில் கொண்டு எனது முடிவினை பாராளுமன்றத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.

 

2015 ஆம் இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய திறைசேரிமுறி வழங்கல் தொடர்பில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் 2016ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணையின்போது, திறைசேரிமுறி விநியோகம் பற்றி விரிவாக ஆராயப்பட்டதுடன், அதனால் ஏற்பட்ட நஷ்டம் அறிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதைக் கவனத்தில் கொண்டு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

 

அதனைத் தொடர்ந்து, திறைசேரிமுறி வழங்கல் குறித்து விசாரணை நடத்திய விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பில், திறைசேரிமுறி விநியோகம் பற்றி தடயவியல் கணக்காய்வை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

இலங்கை மத்திய வங்கி தொடர்பில் கணக்காய்வாரள் நாயகத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்ட வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் பற்றிய அவரின் கண்காணிப்புக்கள் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் ஆராயப்பட்டபோது, குறித்த தடயவியல் கணக்காய்வு முன்னெடுக்கப்படும் முறைமை, அதற்கான செலவு மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்களை மத்திய வங்கியின் உயர் அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் முன்வைத்திருந்தனர்.

 

அவ்வாறான கணக்காய்வு தொடர்பில் நிபுணத்துவம் கொண்ட சர்வதேச பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வின் இறுதி அறிக்கை இலங்கை மத்திய வங்கிக்கு கிடைத்திருந்ததுடன், அந்த அறிக்கையை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு அதன் தலைவர் எழுத்துமூலம் விடுத்த கோரிக்கைக்கு அமைய சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய திறைசேரிமுறி விநியோகம் தொடர்பில் தற்பொழுது நடைபெறுகின்ற விசாரணைகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த குழுவின் உறுப்பினர்களுக்கு மாத்திரம் வழங்கும் நோக்கி;ல் மத்திய வங்கியினால், அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கை அக்குழுவின் தலைவரிடம் வழங்கப்பட்டது.

 

அதன் பின்னர் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவினால் குறித்த அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கூட்டத்தைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், 02.12.2019ஆம் திகதி எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதுடன் நிலையியற் கட்டளைக்கு அமைய அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் செயற்பாடுகள் கலைக்கப்பட்டன. எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மீண்டும் நியமிக்கப்படும்வரை, அக்குழு இதுபற்றி ஆராய மேலும் காலம் தேவைப்படுவதாலும் குறித்த குழுவின் கண்காணிப்பாளர் என்ற பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.

 

விசேடமாக பொதுமக்களின் நிதி நிர்வாகம் தொடர்பில் முழுமையான அதிகாரம் பாராளுமன்றத்துக்கு இருப்பதுடன், குறிப்பாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவுக்கு காணப்படும் அதிகாரத்துடன், 136வது நிலையியற் கட்டளைக்கு அமைய எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கும் அமைவாக பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எந்தவொரு வெளித்தரப்பினதும் தலையீடு இன்றி சுயாதீனமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை எனக் உள்ளது என்பதைத் தெரிவிப்பதுடன், எனக்கு முன்னிருந்த சபாநாயகர் அநுர பண்டாரநாயக்க வழங்கி வரலாற்று தீர்ப்பையும் கவனத்தில் கொண்டுள்ளேன்.

 

அதேநேரம், இந்த தடயவியல் கணக்காய்வு அறிக்கையை மேற்கொள்வதற்கு தேசிய மற்றும் சர்வதேச நிபுணர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு பெருமளவு செலவு செய்யப்பட்டிருப்பதுடன், இந்த அறிக்கையை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல உறுப்பினர்களுக்கும் பொற்றுக்கொடுப்பது உசிதமானது என நாம் வெகுவாக நம்புகின்றேன்.

 

அத்துடன், அரசியலமைப்பின் 14 (ஏ) சரத்துக்கு அமைய தகவல்களை அறிந்துகொள்வது அடிப்படை மனித உரிமையாகும் என்பதையும் நான் கவனத்தில் கொண்டுள்ளேன். இதற்கமைய இலங்கை மத்திய வங்கியின் திறைசேரிமுறி வழங்கல் குறித்த தடயவியல் கணக்காய்வு அறிக்கையை சபையில் சமர்ப்பிப்பது பொருத்தமானது என நான் கருதுகின்றேன். அதேநேரம், இந்த அறிக்கையானது திறைசேரிமுறி தொடர்பில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள சட்ட விசாரணைகள் மற்றும் எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய சட்டவிசாரணைகள் மற்றும் நீதிமன்ற விசாரணைகளை சட்டத்துக்கு உட்பட்ட ரீதியில் முன்னெடுக்க இடையூறாக அமையாது என்றும் நான் நம்புகின்றேன்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom