இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஜனவரி 3 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

திகதி : 2020-01-02

எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜனவரி 3ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்படும்.

 

அரசியலமைப்பின் 70 (1) ஆம் பிரிவின் படி பாராளுமன்றக் கூட்டத்தொடரினை நிறுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த டிசம்பர் 3ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்ற கூட்டத் தொடரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்தார்.

 

ஜனவரி 3ஆம் திகதி புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் முற்பகல் 9 மணிக்கு விசேட அதிதிகளின் வருகையுடன் ஆரம்பமாகிறது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை முதலில் இடம்பெறும். இதனைத்தொடர்ந்து கௌரவ சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரியவின் வருகையும், அதன்பின்னர் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வருகையும் இடம்பெறும். அவர்களைத் தொடர்ந்து அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தருவார்.

 

சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு. தம்மிக தசநாயக்க ஆகியோர் பாராளுமன்ற பிரதான நுழைவாயிலில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களை வரவேற்பார்கள். ஜனாதிபதி தேசியக் கொடியை ஏற்றிவைப்பதுடன், மரியாதையின் நிமித்தம் 21 பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்படும்.

 

படைக்கலசேவிதர், பிரதிப் படைக்கலசேவிதர் மற்றும் உதவி படைக்கலசேவிதர் சபாநாயகர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரால் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சபைக்குள் அழைத்துச் செல்லப்படுவதுடன் பாராளுமன்ற கூட்டத்தொடர் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு தொடங்கும்.

 

கூட்டத்தொடர் ஆரம்பத்தில் முதலாவது அமர்வில் முற்பகல் 10 மணிக்கு அதிமேதகு ஜனாதிபதி ஆசனத்தில் அமர்வார். அரசியலமைப்பின் 33 (2) ஆவது பிரிவு பாராளுமன்றதின் அமர்வு ஒவ்வொன்றினதும் ஆரம்பத்திலும் அரசாங்கக் கொள்கைக் கூற்றை வாசிப்பதற்கும், பாராளுமன்றத்தின் சடங்குமுறையான இருக்கைகளில் தலைமைதாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது.

 

1947 ஆண்டு முதல் 50க்கும் மேற்பட்ட தடவைகள் பாராளுமன்ற கூட்டத் தொடர்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1978ஆம் ஆண்டு முதல் 25 தடவைக்கு மேல் கூட்டத்தொடர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஆளுநர் சேர். கென்றி மொங் மாசொன் மூர் அவர்களின் தலைமையில் முதலாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரானது வைபவரீதியாக 1947 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 14 ஆம் திகதி அன்று ஆரம்பிக்கப்பட்டது. இங்கு ஆளுநர் அவர்களின் சிம்மாசன உரை இடம்பெற்றது.

 

இரண்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு இரண்டாவது எலிசபெத் மகாராணி அவர்களினால் 1954 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 12 ஆம் திகதி வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்து. இங்கு மகாராணியினது சிம்மாசன உரை அரசாங்கத்தினால் சபையில் வாசிக்கப்பட்டது.

 

அதன் பின்னரான காலப்பகுதியில் பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர்கள் வைபவ ரீதியாகவும் வைபவ ரீதியற்றமுறையிலும் ஆரம்பிக்கப்பட்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன.

 

1978 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 7 ஆம் திகதி புதிய அரசியலமைப்பு பிரகடனப்படுத்தப்பட்டதன் மூலம் ஜனாதிபதியின் சிம்மாசன உரைக்குப் பதிலாக அரசினது கொள்கைப் பிரகடன அறிக்கை வாசிக்கப்படும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom