இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி

திகதி : 2019-12-03

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று கையெழுத்திட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் உடன் எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் முடிவுக்கு வந்துள்ளது.

 

1947 ஆம் ஆண்டு முதல் 50க்கும் மேற்பட்ட தடவைகள் பாராளுமன்றக்  கூட்டத்தொடர்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 1978ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் மாத்திரம் 25 தடவைகளுக்கு மேல் பாராளுமன்றக் கூட்டத் தொடர்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

 

பாராளுமன்றக் கூட்டத் தொடர்கள் முடிவுக்கு கொண்டு வரப்படும் சந்தர்ப்பங்களில் சபாநாயகர் தொடர்ந்தும் அப்பதவியை வகிப்பதுடன், ஒரு பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறுத்தப்படுகின்றபோது நிலுவையிலுள்ள பாராளுமன்ற அலுவல்கள் முடிவுறுத்தப்படுவதில்லை. எனவே, புதிய அமர்வு துவங்கப்பட்ட பின்னர், நிலுவையிலுள்ள அலுவல்களைத் தொடரலாம்.

 

ஒரு புதிய அமர்வின் தொடக்கத்தில் தெரிவுக் குழு மறுசீரமைக்கப்பட வேண்டும். உயர் பதவிகளின் குழு பாராளுமன்ற கூட்டத்தொடர் அழைக்கப்படும்போது தொடர்ந்து செயல்படத் தொடங்கும். மற்றைய அனைத்துக் குழுக்களும் குறித்த கால இடைவேளையின் போது செயல்படத் தொடங்கி ஒவ்வொரு புதிய அமர்வு ஆரம்பத்திலும் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

 

ஒரு கூட்டத்தொடர் முடிவின்பின்னர் புதிய அமர்வு தொடங்குகின்றபொழுது அதனை ஜனாதிபதி சம்ரதாய பூர்வமாக ஆரம்பித்துவைப்பார். பாராளுமன்றத்தின் புதிய அமர்வு தொடங்குவதற்கும் மற்றும் தலைமை தாங்குவதற்கும் அரசாங்கக் கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவதற்கும் அவர் அரசியலமைப்பின் கீழ் அதிகாரம் அளிக்கப்படுகிறார். கடந்த காலத்தில் இது அக்கிராசன பிரகடனம் என அழைக்கப்பட்டது. தற்பொழுது கொள்கைப் பிரகடன உரை விவாதத்துக்கோ அல்லது வாக்கெடுப்புக்கோ விடப்படுவதில்லை.

 

எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் நேற்று (02) முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோதும், பாராளுமன்றத்தின் தெரிவுக்குழுக்களான சபாநாயகரின் தலைமையிலான இலங்கையின் இன மற்றும் மத ஒற்றுமையை உறுதி செய்வதை ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான தெரிவுக்குழு மற்றும் பிரதி சபாநாயகர் தலைமையிலான தேசிய மதிப்பீட்டு ஆற்றல்களை உறுதுpப்படுத்துவதற்கு ஆய்வுகளை மேற்கொண்டு அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழு என்பன தொடர்ந்தும் செயற்படும்.

 

இவற்றுக்கு மேலதிகமாக உயர் பதவி பற்றிய குழு மற்றும் கீழே குறிப்பிடப்படும் துறைசார் மேற்பார்வைக்குழுக்கள் தொடர்ந்தும் செயற்படும்.

 

அவையாவன, கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு. பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, வலுசக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, சுகாதாரம் மற்றும் மனித சேமநலம் தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு, உள்ளக நிர்வாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துரைசார் மேற்பார்வைக்குழு, சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, சட்டவிவகாரம் (ஊழலுக்கு எதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, உற்பத்திகளும் சேவைகளும் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழு, நல்லிணக்கம் மற்றும் வடக்கையும் கிழக்கையும் மீளக்கட்டியெழுப்புதல் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, வலுவாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு, இளைஞர், விளையாட்டுத்துறை, கலை, மரபுரிமைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு என்பனவாகும்.

 

பாராளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதும், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு, நிலையியற் கட்டளைகள் பற்றிய குழு, ஒழுக்கவியல் மற்றுமு; சிறப்புரிமைகள் பற்றிய குழு, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்க நிதி பற்றிய குழு, பின்வரிசை உறுப்பினர் குழு, பொது மனுக்கள் பற்றிய குழு, சபைக்குழு, இணைப்புக்குழு போன்ற குழுக்கள் கலைக்கப்படும்.

 

குழுக்களை நியமிப்பதற்கான அதிகாரம் அரசியல் யாப்பின் 74 ஆம் உறுப்புரையின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரசியல் யாப்பின் ஏற்பாடுகளுக்கமைய, பாராளுமன்றமானது அதன் அலுவல், அதன் அமர்வுகளின் போதான ஒழுங்கின் பேணுகை மற்றும் எவ்விடயங்களுக்கு ஏற்பாடுகள் தேவைப்படுகிறதோ அல்லது அவ்வாறு செய்யப்படுவதற்கு அரசியல் யாப்பின் அங்கீகாரம் தேவைப்படுகிறதோ அவ்விடயங்கள் என்பனவற்றை ஒழுங்குபடுத்துமுகமாக நிலையியற் கட்டளைகளை இயற்றுவதற்கு இவ்வுறுப்புரையானது அதிகாரம் அளிக்கிறது. இவ்வுறுப்புரையின் கீழ் இலங்கைப் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளை இயற்றும் போது, வெறிடங்களில் பெறப்பட்ட அனுபவங்களை அனுகூலமாகக் கொண்டு, பல்வேறு பாராளுமன்றக் குழுக்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நிலையியற் கட்டளைகளில் செய்யப்படுகின்றன.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom